வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

ஆத்தூர்: சேலம் அருகே, வேம்படித்தாளம் கிராமத்தில், பழங்கால வட்ட புதிர்நிலை- தினமலர்

ஆத்தூர்: சேலம் அருகே, வேம்படித்தாளம் கிராமத்தில், பழங்கால வட்ட புதிர்நிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட வரலாற்றுத் தேடல் குழுவை சேர்ந்த, தொல்லியல் ஆய்வாளர்கள் சுகவனமுருகன், விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன் ஆகியோர், சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள வேம்படிதாளம், கோட்டைபுதூர் கிராமத்தில், ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:உலகின் மிகப்பெரிய புதிர்நிலைகளில் வேம்படித்தாளம் ஒன்றாகும். பெரிய புதிர்நிலை வட்ட வடிவில் இருப்பதுடன், 15 மீ., வட்டம், 140 மீட்டர் சுற்றளவு என்ற அளவில், 700 சதுர அடி பரப்பில் உள்ளது. பெருங்கற்கால புதிர்நிலை குறித்து, பாறை ஓவியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெருங்கற்கால வட்டப்புதிர்நிலை ஒன்று, தெற்கு கோவா, உஸ்கலிமோல் பகுதியில் உள்ளது. ஏழு நிலைப் பாதைகளைக் கொண்டதாக பாறையில் கீறப்பட்டிருக்கும். பெருங்கற்கால மக்களின் பண்பாட்டை அறிவதில் அகழாய்வு மட்டுமின்றி, புதிர்நிலை பற்றிய ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. வட்ட புதிர்நிலைகள், சுருள்வழி புதிர்நிலைகள், சதுர மற்றும் செவ்வக புதிர்நிலைகளும் உள்ளன. பெருங்காலப் புதிர்நிலைகள், 2,000 ஆண்டு பழமையானதாகும். மகாபாரதத்தில் அபிமன்யு சிக்கிக்கொண்டு, உயிரிழந்த சக்கரவியூகம், இவ்வாறான புதிர்நிலையாகும். வட்ட புதிர்நிலை, கிருஷ்ணகிரி பகுதியில் உள்ளது. பெருங்கற்கால வட்ட புதைகுழிகள், இதுவரை ஆராயப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது. வேம்படித்தாளத்தில் கண்டறிந்த வட்டப் புதிர்நிலை, கம்பையநல்லூர் புதிர் நிலையை விட, 64 ச.மீ., பெரியதாகும். புதிர் நிலைகளில், அமாவாசை, பவுர்ணமி நாளில் வழிபடுகின்றனர். கோட்டைப்புதூரில் கண்டறிந்த புதிர்நிலையானது, ஒரிசா மாநிலம், ராணிபூர் ஜஹாரியாவில் மலை மேலுள்ள சவுன்சாத் யோகினி கோவிலுக்கருகில் இருக்கும் புதிர்நிலையை போலவே உள்ளது. தமிழகப் புதிர்நிலைகள் வரலாற்றில், வேம்படித்தாவளம் புதிர்நிலை மிக, மிக அரியவையாகும். இவ்வாறு கூறினர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக