சனி, 4 நவம்பர், 2017

கற்கால கருவிகள்

வாழப்பாடி அடுத்த பெலாப்பாடி மலை கிராமத்தில் புதிய கற்காலக் கருவிகள்:
சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டறிந்தனர்:


வாழப்பாடி, நவ.04:-

 சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பெலாப்பாடி மலை கிராமத்தில் பழமையான கோவில் வளாகத்தில் நுாற்றுக்கும் அதிகமான, 6,000 ஆயிரம் பழைமையான புதிய கற்கால கருவிகளை வைத்து பாதுகாத்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வருவதை சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டறிந்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அருநுாற்றுமலை மற்றும் கல்வராயன் மலை கிராமங்கள், 6,000 ஆண்டுகளுக்கு முன்னரே பழங்கால மக்களின் வாழிடமாக இருந்ததை அப்பகுதியில் கிடைத்து வரும் புதிய கற்கால கருவிகள் மற்றும் கல்வெட்டுகள், நடுகற்கள் ஆகியவை உறுதிப்படுத்தி வருகின்றன.
ஏற்கனவே, கல்வராயன்மலை சேம்பூர், அத்திரிப்பட்டி, கிராங்காடு, குன்னுார் மற்றும் அருநுாற்றுமலை பள்ளிக்காடு, சிறுமலை உள்ளிட்ட  கிராமத்தில் புதிய கற்கால கருவிகளும், இறந்தவர்களின் நினைவாக அமைக்கப்படும் ஈமச்சின்னங்களான கற்திட்டைகள் மற்றும் கற்குவைகளும் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினரால் கண்டறியப்பட்டது. 
 சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆறகளூர் வெங்கடேசன், மருத்துவர் பொன்னம்பலம், கவிஞர் மன்னன், ஆசிரியர்கள் கலைச்செல்வன், பெருமாள், ஓமலூர் சீனிவாசன், ஜீவநாராயணன் ஆகியோர் கொண்ட குழுவினர் பெலாப்பாடி மலை கிராமத்தில் களஆய்வு மேற்கொண்டனர். அந்த கிராமத்திலுள்ள பழமையான ஈஸ்வரன் கோவிலில், இரு நந்தி சிலைகள், ஒரு பிள்ளையார் சிலை மற்றும் நுாற்றுக்கும் அதிகமான கைக்கோடாரி வகையை சேர்ந்த புதிய கற்கால கருவிகளையும் வைத்து பாதுகாத்து வருவதையும், அவற்றை இன்றளவிலும் வழிபட்டு வருவதையும் கண்டறிந்தனர்.
  அதுகுறித்து சேலம் வரலாற்று ஆய்வு மைத்தினர் கூறியது:
பழங்காலத்தில் நாடோடியாக வாழ்ந்த மனிதன் ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகள் அருகில் உள்ள மலைப்பாங்கான இடங்களில் நிலையாகத் தங்க ஆரம்பித்தான். ஆரம்ப கட்டத்தில் வேட்டையாட பயன்படுத்திய ஒழுங்கற்ற நிலையில் இருந்த கற்கருவிகளை தேய்த்து வளவளப்பாக மெருகூட்டிப் பயன்படுத்தினான். அக்காலமே புதிய கற்காலம் எனவும், அந்த காலகட்டத்தில் மனிதன் பயன்படுத்திய கருவிகளை புதிய கற்காலக் கருவிகள் எனவும் வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அருநுாற்றுமலை மற்றும் கல்வராயன் மலைப்பகுதியில் கி.மு.2000 ஆண்டு வரை புதிய கற்காலம் இருந்திருக்கலாம் என தோன்றுகிறது. ஏராளமான கிராமங்களில் நீர்நிலைகளில் சிதறிக்கிடந்த பழங்கால மனிதர்கள் பயன்படுத்தி புதிய கற்கால கருவிகளை சேகரித்து கோவில்களில் வைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

வாழப்பாடி அடுத்த அருநுாற்றுமலை ஆலடிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெலாப்பாடி மலை கிராமத்தில் பழமையான ஈஸ்வரன் கோவிலில் வைத்து மக்கள் வழிபட்டு வரும் புதிய கற்கால கருவிகள் சிறிய கைக்கோடாரிகள் வகையை சேர்ந்ததாகும். ஒருபுறம் கூராகவும் மற்றொறுபுறம் தட்டையாகவும் உள்ளது. கூரான முனை குத்திக் கிழிக்கவும் தட்டையான பகுதி வெட்டவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றனர்.

http://www.dinamalar.com/district_detail.asp?id=1889226


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக