செவ்வாய், 19 ஜூன், 2018

வாழப்பாடி சென்றாயபெருமாள் கோயில் கல்வெட்டு

Salem:
June 18
வாழப்பாடி சென்றாயபெருமாள் கோயில் கல்வெட்டு
சேலம் மாவட்டம் வாழப்பாடி சென்றாயப்பெருமாள் கோயிலில் 148 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு சேலம் வரலாற்று ஆய்வு மையத்தால் படி எடுக்கப்பட்டு படிக்கப்பட்டது.
சேலம் வரலாற்று ஆய்வுமைத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன்,ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,கவிஞர் பெரியார் மன்னன்,மருத்துவர் பொன்னம்பலம்,பெருமாள் ஆசிரியர்,ஜீவநாரயணன் ஆகியோர் அடங்கிய குழு வாழப்பாடி பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது அக்ரகாரத்தில் உள்ள சென்றாயப்பெருமாள் கோயிலில் வெளிப்புற வாயிலின் அருகே உள்ள ஒரு கல்வெட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இது வரை அக்கல்வெட்டில் உள்ள வாசகங்கள் அறியப்படாமல் இருந்து வந்தது. கல்வெட்டானது 20 வரிகளில் வெட்டப்பட்டுள்ளது. கல்வெட்டின் மேற்பகுதியில் சக்கரம்,சங்கு,நாமம் போன்றவை செதுக்கப்பட்டுள்ளது. கலியுகம் 4971 சாலிவாகன வருடம்( 1792) வைகாசி 13 ஆம் தேதி என கல்வெட்டு துவங்குறது. இது தற்போதைய கணக்கில் கி.பி 1870ஆம் ஆண்டு ஆகும்.
வாழப்பாடியில் அப்போது வாழ்ந்த தவசி வன்னியன் மகன் தொப்ள வன்னியன் மனைவி அலமேலு அவர்களின் பெரு முயற்சியால் அங்கமுத்து வன்னியன் என்பவர் தான் சேர்த்து வைத்திருந்த செல்வத்தாலும் உடல் வலிமையாலும் வாழப்பாடி அக்ரகாரத்தில் அமைந்துள்ள சென்றாயப்பெருமாள் கோயிலில் கர்ப்பகிரகம் அமைத்து திருப்பணி செய்துள்ளார்.
சேலம் வரலாற்று ஆய்வு மைய குழுவினர்

கோயிலுக்கு ஒரு நந்தவனம் அமைத்து கொடுத்து ஒரு கிணறும் வெட்டி கொடுத்துள்ளார். கோயில் வாகனங்களையும் புதுப்பித்து கொடுத்துள்ளார்.திருப்பதியிலிரு ந்து சென்றாயப்பெருமாள், அலமேலு திரு உருவை செய்து கொண்டுவந்து இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார். பூசைக்காக நஞ்சை,புஞ்சை நிலங்களை தானமாக அளித்து தேர் ஒன்றும் செய்து கொடுத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் பெளர்ணமி அன்று இங்கு தேர்திருவிழா நடத்தப்படவேண்டும். கோயிலின் வெளியே போடப்பட்டுள்ள கடைகளின் வாடகையிலிருந்து 500 ரூபாய் எடுத்து தேர்திருவிழா நடத்தப்பட வேண்டும் என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தர்மத்தை அனைவரும் மதித்து தொடர்ச்சியாக செயல்படுத்த வேண்டும். இந்த தர்மத்துக்கு யாராவது இடையூறு செய்தால் அவர்கள் இந்த பிறவியிலே மதி இழந்து ஏழெழு நரகத்துக்கு செல்வார்கள் என கல்வெட்டில் வெட்டப்பட்டுள்ளது.தவசி வன்னியன் என்பவர் இக்கல்வெட்டை எழுதியுள்ளார்.
வாழப்பாடி பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்று தடயங்கள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

http://www.dinakaran.com/District_Detail.asp?
Nid=863623
http://www.dinamani.com/tamilnadu/2018/jun/19/148-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2942770.html
http://www.dinamalar.com/district_detail.asp?id=2044333