தேவியாக்குறிச்சி நடுகற்கள் சேலம் ஆன்லைன் செய்தி
Salem:
Salem:
December 3
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தேவியாக்குறிச்சியில் இரண்டு நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,மருத்துவர் பொன்னம்பலம்,ஜீவநாராயணன், கவிஞர் மன்னன் ஆகியோர் ஆத்தூர் அரசினர் கலைக்கல்லூரியை சேர்ந்த மாணவர் செல்வகுமார்,மற்றும் மாணவ மாணவியர் கொடுத்த தகவலின் பேரில் தேவியாக்குறிச்சி பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
அப்போது தெற்குமேடு என்ற இடத்தில் ராமசாமி என்பவர் நிலம் அருகே ஏரிவாய்கால் கரையில் இரு நடுகற்கள் கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த இரு நடுகற்களும் அருகருகே காணப்படுகின்றன.
இடது பக்கம் உள்ள நடுகல்லானது 75 செ.மீ.உயரமும்,55 செ.மீ அகலமும், 12 செ.மீ தடிமனும் உள்ள ஒரு பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது. இடது புறம் சாய்ந்த கொண்டையானது அள்ளி முடியப்பட்டுள்ளது.கொண்டையின் முடிச்சு அருகே பறக்கும் நிலையில் உள்ளது. காதுகளில் காதணி,கழுத்தில் சரபளி,சவடி,போன்ற ஆபரணங்களும், மார்பில் சன்னவீரம் எனப்படும் வீரச்சங்கிலியும் காணப்படுகிறது. சன்ன வீரம் என்பது போருக்கு செல்லும் வீரர்கள் அணிவதாகும். முதுகில் அம்புக்கூட்டில் நான்கு அம்புகள் உள்ளன. வீரனின் இடது கை நீண்ட வில்லினை பற்றியுள்ளது. வலது கையில் அம்பு உள்ளது. இடைக்கட்டு மூன்று வரிகளில் உள்ளது. அரையாடையின் முடிச்சு நீண்டு வில் வரை உள்ளது. வீரனின் வலது பக்க இடுப்பில் குறுவாள் உள்ளது. பாதமானது பூமிக்கடியில் புதைந்துள்ளது. மிகவும் அலங்காரமான நிலையில் வீரக்கல் காட்டப்பட்டுள்ளது.
இது இந்தப்பகுதியில் நடந்த போரின்போது இறந்த வீரனுக்கு வைக்கப்பட்ட வீரக்கல்லாகும். 12 ஆம் நூற்றாண்டில் வாணகோவரையர் என்பவர்கள் ஆறகழூரை தலைநகராக கொண்டு மகதை நாட்டை ஆண்டு வந்தனர். தேவியாக்குறிச்சி என்ற இந்த ஊர் தேவியர் குறிச்சி என்ற பெயரில் ஆறகழூரின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.
ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோயிலில் பணிபுரிந்த தேவரடியார்களுக்கு தேவியர் குறிச்சியில் நிலம் தானமாக தரப்பட்டுள்ளது. வாணகோவரையர்கள் ஆட்சியின் போது ஹெய்சாளர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசு போன்றோருடன் போரில் ஈடுபட்டனர். அந்த போர்களில் ஈடுபட்டு இறந்த ஒரு வீரன் நினைவாக வைக்கப்பட்டுள்ள வீரக்கல் இதுவாகும். இதன் காலம் 14 ஆம் நூற்றாண்டு என கருதலாம். இந்த வீரனின் வலது புறம் மற்றொரு நடுகல் காணப்படுகிறது. இது 76 செ.மீ உயரமும், 58 செ.மீ அகலமும், 7 செ.மீ தடிமனும் உள்ள பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது.
இது 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம். அதிக அலங்காரம் இல்லாமல் எளிமையாக வீரக்கல் காட்டப்பட்டுள்ளது. நேரான கொண்டை, கழுத்தில் சவடி,சரபளி, காதுகளில் அணிகலன்கள் ,மார்பில் சன்னவீரத்துடன் காணப்படுகிறது. இடது கையில் நீண்ட வில்,வலது கையில் அம்பு,முதுகில் உள்ள அம்புக்கூட்டில் நான்கு அம்புடன் காட்டப்பட்டுள்ளது. அரையாடை, ஆடை முடிச்சு உள்ளது. இடுப்புக்கு கீழ் முழங்கால் வரை வலது கால் மேற்புறம் சிதைந்துள்ளது. இடது பாதமானது இடப்பக்கம் திரும்பி போருக்கு செல்லும் நிலையில் உள்ளது. மகதை நாட்டை ஆண்ட வாணகோவரையர்கள் சார்பாக போரிட்டு, போரில் வீர மரணம் அடைந்த வீரன் நினைவாக வைக்கப்பட்டுள்ள வீரக்கல் இதுவாகும்.
இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் பல வரலாற்று சான்றுகள் கிடைக்கலாம் என சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக