கொற்றவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொற்றவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 டிசம்பர், 2020

சின்னசேலம் கொற்றவை

 சின்னசேலம் கொற்றவை

      


ஆறகழூர் பொன்.வெங்கடேசன் M.A(HIS),M.A(JMC),M.A(PU.AD), M.PHIL
தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம்
செல் எண் : 9047514844, 7010580752




சின்னசேலத்தில் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட  பழமையான கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு

     
சின்னசேலம் கொற்றவை


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஏரிக்கரையில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.

   சேலம் வரலாற்று ஆய்வுமையத்தலைவர் ஆறகளூர் பொன்.வெங்கடேசன் சின்னசேலம் ஏரிக்கரைப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டார்.அப்போது ஏரிக்கரையின் கிழக்குப்பகுதியில் 700 ஆண்டுகள் பழமையான கொற்றவை சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


கொற்றவை


    கொற்றவை ஒரு பழமையான பெண் தெய்வமாகும். தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் கொற்றவை பற்றிய குறிப்புகள் உண்டு. பழையோள்,கானமர் செல்வி,பாய்கலைப்பாவை,காடுகிழாள் என்ற பெயர்களும் கொற்றவைக்கு உண்டு.கொற்றவையின் உருவ அமைப்பை சிலப்பதிகாரம் விரிவாக எடுத்துரைக்கிறது.மதுரை காண்டத்தின் இரண்டாவது காதையான வேட்டுவ வரியில் கொற்றவை வழிபாடு குறித்து இளங்கோ அடிகள் விரிவாக விளக்கி உள்ளார்.

      


  
    கானகத்தில் வசித்த வேட்டுவர்கள் தாங்கள் வேட்டைக்குச்செல்லும் முன் வேட்டையில் வெற்றி கிடைக்க கொற்றவையை வழிபட்டு சென்றுள்ளனர். மன்னர்கள் போருக்கு செல்லும் முன் கொற்றவைக்கு வீரன் ஒருவனை நவகண்டம் கொடுக்க செய்துள்ளனர். பல்லவர்கள் காலத்தில் கொற்றவை வழிபாடு சிறப்பாக இருந்துள்ளது. இவர் பாலை நிலத்துக்கு உரிய கடவுளாக அறியப்படுகிறார். பிற்காலத்தில் துர்க்கை,காளி என்ற பெயரில் கொற்றவை வழிபாடானது மாற்றமடைந்தது. பெரும்பாலும் ஏரி, ஆறு, ஓடை போன்ற நீர் நிலைகளின் அருகிலேயே கொற்றவை சிற்பங்கள் அமைக்கப்பட்டன.

 
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி


சின்னசேலம் கொற்றவை


   சின்னசேலம் ஏரியின் கிழக்கு கரையில் ஒரு கொற்றவை சிற்பமானது காணப்படுகிறது. இது கிராமிய பாணியில் அமைந்துள்ளது. உள்ளூர் தலைவர்களால் உள்ளூர் சிற்பிகள் மூலம் இது அமைக்கப்பட்டிருக்கலாம். 13 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியானது மகதை நாட்டில் இருந்துள்ளது. மகதை மன்னர் பொன்பரப்பின வாணகோவரையன் என்பவர் இப்பகுதியை ஆண்டு வந்தார்.அவர் காலத்தில் செய்யப்பட்ட கொற்றவையாக இதை கருதலாம். பல்லவர் கால பாணியை பின்பற்றி இச்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

    
டைம்ஸ் ஆப் இந்தியா

  
  இதன் உயரம் 83 செ.மீ,அகலம் 73 செ.மீ ஆகும். கால்பாதமும் அதற்கு கீழ் உள்ள பகுதியும் பூமியில் புதைந்துள்ளது. எட்டுகரங்களுடன் நீண்ட மகுடம், காதுகளில் பத்ரகுண்டலம்,கழுத்தில் சரபளி,சவடி போன்ற அணிகலன்களும் அலங்கரிக்கின்றன. மார்புக்கச்சை காட்டப்பட்டுள்ளது. வலது பின்கரங்களில் பிரயோகசக்கரம்,நீண்டவாள்,அம்பு போன்ற ஆயுதங்கள் உள்ளது. வலது முன்கரம் இடுப்பின் மீது வைத்த நிலையில் உள்ளது. இடது மேற்கரங்களில் சங்கு,வில்,கேடயம் போன்றவை காணப்படுகின்றன.இடது முன்கரமானது சிங்கத்தின் தலை அருகே உள்ளது.வழக்கமாக கொற்றவையின் வயிறு ஒட்டிய நிலையில் காட்டப்படும்.ஆனால் இதில் சற்று பெரிதாக காட்டப்பட்டுள்ளது. இடுப்பில் அரையாடையும் ஆடை முடிச்சும் உள்ளது. வலதுகால் நேராகவும் இடதுகால் சற்று மடித்த நிலையிலும் உள்ளது.

  

தமிழ் இந்து
  
  பல்லவர்கால கொற்றவையில் காணப்படும் மானும், சிங்கமும் இச்சிற்பத்தில் இருப்பது சிறப்பான ஒன்றாகும். கொற்றவையின் வாகனமான மான் வலதுபுறம் உள்ளது. பாய்ந்து ஓடும் நிலையில் மான் உள்ளது. நீண்ட கொம்புகள், முன்கால் தாவும் நிலையிலும் பின்கால் தரையில் அழுத்திய நிலையிலும் பெரிய அளவில் மான் காட்டப்பட்டுள்ளது. 10 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கொற்றவை சிற்ப்பத்தில்தான் இப்படி மான் காட்டப்படுவது வழக்கமாகும். இடது புறம் சிங்கமானது சிறிய அளவில் உள்ளது. பாதத்திற்கு கீழ் மண்ணில் புதைந்துள்ளதால் காலுக்கு கீழ் காட்டப்படும் எருமை தலையும்,நவகண்டம் கொடுத்துகொள்ளும் வீரனும்,வணங்கிய நிலையில் இருக்கும் அடியாரும் நமக்கு தெரியவில்லை.இப்பகுதியை மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்றுத்தடயங்கள் கிடைக்கலாம் என ஆய்வாளர் தெரிவித்தார்.

    
தினகரன்


         
தினத்தந்தி

மாலைமலர்

சக்தி விகடன்

சக்தி விகடன்

இணையதள இணைப்புகள்

மாலைமலர்

  https://www.maalaimalar.com/news/district/2020/12/11153607/2148069/Tamil-News-Ancient-kotravai-stone-idol-found-in-Chinnasalem.vpf

தமிழ் இந்து

https://www.hindutamil.in/news/todays-paper/regional01/610023-.html









வெள்ளி, 19 ஏப்ரல், 2019

பெரியநெசலூர் கொற்றவை

ஆறகழூர் பொன்.வெங்கடேசன் M.A(HIS),M.A.(PU.AD),M.A.(J.M.C),M.PHIL,D.PHARM
தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம்

விழுப்புரம் வீரராகவன் சார்,ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,பெரியநெசலூர் கொற்றவை


1100 ஆண்டுகளுக்கு முற்பட்ட மலையமான் கால கொற்றவை கண்டுபிடிப்பு
சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன்,ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,மருத்துவர் பொன்னம்பலம் ஆகியோர் அடங்கிய குழு கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் பெரியநெசலூர் என்ற கிராமத்தில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது ஆயிரத்திநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மலையமான் கால கொற்றவையும் சில கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
 
பெரியநெசலூர் கொற்றவை கல்வெட்டுடன்
கொற்றவை
    சங்ககாலத்தில் இருந்தே கொற்றவை வழிபாடு இருந்து வந்துள்ளது.அக்காலங்களில் தாய் வழி சமூக அமைப்பு செயல்பட்டதை கொற்றவை வழிபாட்டின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. சங்க இலக்கியங்களும்,தொல்காப்பியமும் கொற்றவையைப்பற்றி சில குறிப்புகளை தருகின்றன.சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரிகளில் கொற்றவையின் உருவ அமைப்பு,ஆயுதங்கள்,உடை,அணிகலன்கள்,வழிபாட்டு முறைகள் போன்றவற்றை விரிவாக எடுத்துரைக்கிறது. கொற்றவை பாலை நிலக்கடவுளாக அறியப்படுகிறார்.காடுகளில் வசித்த வேட்டுவர்கள் தங்களது வேட்டையில் வெற்றி கிடைக்க கொற்றவையை வழிபட்டுள்ளனர்.
   கொற்றவையானவர்பழையோள்,பாய்கலைப்பாவை,ஐயை,பைந்தொடிப்பாவை,ஆய்கலைப்பாவை,சூலி,நீலி,காடுகிழாள் என பல்வேறு பெயர்களில் அறியப்படுகிறார். சிலப்பதிகாரத்தில் கொற்றவையின் கோயில் ஐயை கோட்டம் என அழைக்கப்பட்டுள்ளது. பல்லவர்கள் காலத்தில் கொற்றவை வழிபாடு மிகச்சிறப்பாக இருந்துள்ளது.பல்லவர்களின் கீழ் ஆட்சி செய்த வாணர்கள்,மலையமான்கள் போன்றவர்கள் பல்லவர்கள் கலைப்பாணியை பின்பற்றி கொற்றவையின் தோற்றத்தை வடிவமைத்துள்ளனர்.
       
பெரியநெசலூர் கொற்றவை மங்கமுத்தாயி அம்மன்

பெரியநெசலூர் கொற்றவை
பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள மங்கமுத்தாயி அம்மன் கோயிலின் உள்ளே மேற்குப்புறத்தில் இந்தக்கொற்றவை தனி மேடையில் உள்ளது.ஆரம்ப காலத்தில் இது கருவறைக்குள் இருந்திருக்க கூடும்.இக்கொற்றவை கி.பி 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம்.பல்லவர்கள் கலைப்பாணியை பின்பற்றி மலையமான்களால் செய்யப்பட்டுள்ளது.பல்லவர்கள் வலு இழந்த 9 ஆம் நூற்றாண்டில் மலையமான்கள் இப்பகுதியை ஆட்சி செய்ததை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இக்கொற்றவையின் உயரம் 102 செ.மீ,அகலம் 88 செ.மீ,தடிமன் 12 செ.மீ ஆகும்.ஒரு பலகைக்கல்லில் புடைப்புச்சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது.எருமைத்தலையின் மீது சமபங்க நிலையில் நின்றபடி உள்ளார்.தலையில் கரண்ட மகுடம்,காதுகளில் பத்தரகுண்டலம்,கழுத்தில் சரபளி,சவடியுடன் புலிப்பல்லால் இணைக்கப்பட்ட தாலியை அணிந்துள்ளார்.மார்புக்கச்சை பட்டையுடன் உள்ளது.மார்பில் சன்னவீரம் உள்ளது.இந்த சன்னவீரம் என்பது போர் கடவுள்கள், போர் வீரர்கள் மட்டும் அணியும் வீரச்சங்கிலியாகும்.வலதுபுற மேல்பகுதியில் சூலமும் கிளியும், இடது புறம் கொற்றவையின் வாகனமான மானும் சிங்கமும் உள்ளது. மானும் சிங்கமும் அருகருகே ஒரே பக்கத்தில் காட்டப்பட்டிருப்பது தமிழகத்தில் இதுவே முதன்முறையாகும். எட்டுக்கரங்களுடன் உள்ளார்.வலது பின்புறகரங்களில் எறிநிலைச்சக்கரம்,வாள்,பாம்பு காணப்படுகிறது. கையில் பாம்புடன் ஒரு கொற்றவை கண்டறியப்படுவது தமிழகத்தில் இதுவே முதன் முறையாகும்.முன்கரம் அபய முத்திரையில் உள்ளது. இடது பின் கரங்களில் சங்கு,வில்,கேடயமும் முன்கரம் கடியஸ்த நிலையிலும் உள்ளது. யானைத்தோலை போர்த்தி இடுப்பில் புலித்தோலால் ஆன மேகலையை அணிந்துள்ளார்.முழு ஆடை உள்ளது.இடப்புற காலில் சிலம்பும்,வலப்புற காலில் கழலும் அணிந்துள்ளார். கொற்றவையின் காலுக்கு அருகே நவகண்டம் கொடுத்துக்கொள்ளும் வீரன் உள்ளான். நவகண்டம் என்பது தன்னுடைய நாடு போரில் வெற்றி பெற ஒரு வீரன் தன் உடலில் உள்ள ஒன்பது பாகங்களின் சதையை அரிந்து கொற்றவைக்கு படையல் இட்டு தன் தலையை தானே வெட்டி பலி கொடுத்துக்கொள்வதாகும்.இடப்புறம் கொற்றவையை வணங்கிய நிலையில் ஒரு அடியவர் உள்ளார்.



தினமணி செய்தி

மூன்றாம்குலோத்துங்கன் கல்வெட்டு

கல்வெட்டு
எருமைத்தலையின் வலதுபுறம் 6 வரிகளில் சிதைந்த நிலையில் ஒரு கல்வெட்டு உள்ளது.
ஸ்ரீ முக்குல மலையமான் சாதன்
என கல்வெட்டு வாசகம் உள்ளது. முக்குல மலையமான் வம்சத்தை நேர்ந்த சாதன் என்பவன் இந்த கொற்றவையை செய்து வைத்திருப்பதை இந்தக்கல்வெட்டு மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. மலையமான்கள் சங்ககாலத்தில் இருந்தே திருக்கோயிலூரை தலைநகராகக்கொண்டு ஆட்சிபுரிந்து வந்துள்ளனர்.சிலகாலம் சுதந்திரமாகவும் சிலகாலம் பல்லவர், சோழர்,பாண்டியர்களின் கீழ் குறுநில மன்னர்களாகவும் ஆட்சி புரிந்து வந்துள்ளனர். பல்லவர்களின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்தபோது அவர்கள் பாணியில் அமைந்த கொற்றவை இதுவாகும்.



ஸ்ரீ முக்குலமலையமான் சாதன்

சிவன் கோயில் கல்வெட்டு

மங்கமுத்தாயி அம்மன் கோயில் அருகே ஏரிக்கரையின் கீழ் ஓர் சிவன் கோயில் இருந்து அழிந்து போய் உள்ளது.ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் துண்டுகற்கள்,தூண்களில் சில கல்வெட்டுகள் உள்ளன.
சோழர்காலம்
ஒரு துண்டு கல்லில் திரிபுனசக்கரவத்திகள் மது கருவூரும் பாண்டியன் முடித்தலையும் குலோத்துங்க சோழ தேவற்க்கு என உள்ளது. இது சோழமன்னர் மூன்றாம் குலோத்துங்கசோழரின் மெய்கீர்த்தியாகும்.இதன் மூலம் 12 ஆம் நூற்றாண்டில் இந்த ஊர் சோழர்களின் ஆட்சி நிலவியது உறுதியாகிறது.
பாண்டியர் காலம்
இங்குள்ள ஓர் உடைந்து போன தூணில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியரின் கல்வெட்டு 13 வரிகளில் காணப்படுகிறது.கல்வெட்டின் நடுவே பாண்டியரின் அரசுச்சின்னமான இரட்டை மீன் நடுவே செண்டு புடைப்பாக பொறிக்கப்பட்டுள்ளது.பாண்டியத்தேவர் என்பவர் தானமாக கொடுத்த திருநாமத்துகாணி நிலத்தை முதலீடாக கொண்டு இராசாக்கள் மண்டபம் என்ற ஒரு மண்டபத்தை கட்டிக்கொடுத்ததை இக்கல்வெட்டு சொல்கிறது.அந்த மண்டபம் தற்போது அங்கு இல்லை, முற்றிலுமாக அழிந்து விட்டது. இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் பல வரலாற்று சான்றுகள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2019/04/18134048/Message-to-the-Malayaman-kala-kottravai.vpf?fbclid=IwAR1x8s0nv7n6nhQOk8lt43efsHS8-dy0tP6cKdgHfNaU-evijc30x5cUc_A


https://www.vikatan.com/news/spirituality/154942-found-new-kotravai-statue-and-inscriptions.html


https://www.nakkheeran.in/special-articles/special-article/1100-years-old-kotravai-statue-found


https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/apr/12/1100-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3131712.html


http://www.nntweb.com/news-view.php?nid=1023&nalias=1100%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88!






சனி, 9 மார்ச், 2019

காட்டுமயிலூர் கொற்றவை

மருத்துவர் பொன்னம்பலம்
ஆறகழூர் பொன்,வெங்கடேசன்
காட்டுமயிலூர் கொற்றவை

ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் வரலாற்றை சொல்லும் கொற்றவை


காட்டுமயிலூர் கல்வெட்டுகள்
சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், மருத்துவர் பொன்னம்பலம், ஆகியோர் அடங்கிய குழு கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டனர் அப்போது, காட்டுமயிலூர் கிராமத்தில் பல்லவர் கால கொற்றவை ஒன்றையும் கண்டறிந்து ஆய்வுகள் மேற்கொண்டனர். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்தப்பகுதியின் பழமையையும் வரலாற்றையும் இந்த கொற்றவை சிற்பம் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
கோயில்

கொற்றவை

தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் பழையோள் என கொற்றவை குறிப்பிடப்படுகிறது.கொற்றவை ஒரு பழமையான பெண் தெய்வமாகும். கொற்றவையின் உருவ அமைப்பை சிலப்பதிகாரம் விரிவாக எடுத்துரைக்கிறது. இளங்கோவடிகள் மதுரை காண்டத்தின் இரண்டாவது காதையான வேட்டுவ வரியில் கொற்றவை வழிபாடு குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளார். கானகத்தில் வசிக்கும் வேட்டுவர் தமக்கு வேட்டையில் வெற்றி கிடைக்கவேண்டும் என்பதற்காக கொற்றவையை வழிபட்டுள்ளனர். பாய்கலைப்பாவை என்றும் கொற்றவை அழைக்கப்பட்டார்.பல்லவர் காலத்தில் கொற்றவை வழிபாடு சிறப்பாக இருந்துள்ளது. மன்னர்கள் போருக்கு செல்லும் முன் கொற்றவையை வணங்கி நவகண்டம் கொடுத்து சென்றால் வெற்றி கிடைக்கும் என நம்பினர். கொற்றவை பாலை நிலத்துக்கு உரிய கடவுளாக இலக்கியங்கள் கூறுகின்றன.சில நூல்கள் குறிஞ்சி நிலத்துக்கு உரிய கடவுளாகவும் குறிப்பிடுகின்றன. பிற்காலங்களில் துர்க்கை என்ற பெயரில் கொற்றவை வழிபாடு மாற்றமடைந்தது.

காட்டுமயிலூர் கொற்றவை

இக்கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் கருவரையில் இக்கொற்றவை தற்போதும் செல்லியம்மன் என்ற பெயரில் வழிபாட்டில் உள்ளது. பல்லவர்கள் வலுவிழந்த 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பமாக இதை கருதலாம். ஒரு பலகைக்கல்லில் புடைப்புச்சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது.இதன் உயரம் 132 செ.மீ,அகலம் 73 செ.மீ ஆகும். தலையில் கரண்ட மகுடம்,காதுகளில் பத்ரகுண்டலம்,கழுத்தில் சவடி,சரபளி போன்ற அணிகலன்களுடன் காணப்படுகிறார். மார்புக்கச்சை பட்டையுடன் காட்டப்பட்டுள்ளது.பின்புறம் சூலம்,எட்டு கரங்களுடன் காணப்படுகிறார்.வலது பின்கரங்களில் பிரயோக சக்கரம், நீண்டவாள், மணி போன்றவையும், வலது முன்கரம் அபய முத்திரையிலும் உள்ளது. இடது பின் கரங்களில் சங்கு,வில்,கேடயம் போன்றவையும் உள்ளது. இடது முன்கரம் கடியஸ்த நிலையில் உள்ளது. இடுப்பில் அரையாடையும் ஆடை முடிச்சும் காட்டப்பட்டுள்ளது. கீழ் வலது புறம் நவகண்டம் கொடுத்துக்கொள்ளும் வீரன் உள்ளார். போரில் வெற்றி பெற தன் உடலில் உள்ள ஒன்பது பாகங்களை வெட்டி கொற்றவைக்கு படையலிட்டு தன்னைத்தானே பலி கொடுத்து கொள்பவன் நவகண்ட வீரன் ஆவான்.இடது புறம் வணங்கிய நிலையில் அடியவர் ஒருவர் உள்ளார்.கொற்றவையின் வாகனமான சிங்கமும்,மானும் வீரர்களுக்கு மேற்புறம் உள்ளது. கொற்றவையின் தலைக்கு அருகே இடது புறம் கிளி உள்ளது. எருமைத்தலையின் மீது நேராக நின்ற நிலையில் கொற்றவை காட்டப்பட்டுள்ளார்.
காட்டுமயிலூரில் உள்ள திருக்கரம்தோன்றீசுவரர் கோயிலில் உள்ள பாண்டியர்கால கல்வெட்டுகள் மூலம் இந்த ஊர் கோழியூர் பற்றின் கீழ் இருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது

கொற்றவைதொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் பழையோள் என கொற்றவை குறிப்பிடப்படுகிறது.கொற்றவை ஒரு பழமையான பெண் தெய்வமாகும். கொற்றவையின் உருவ அமைப்பை சிலப்பதிகாரம் விரிவாக எடுத்துரைக்கிறது. இளங்கோவடிகள் மதுரை காண்டத்தின் இரண்டாவது காதையான வேட்டுவ வரியில் கொற்றவை வழிபாடு குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளார். கானகத்தில் வசிக்கும் வேட்டுவர் தமக்கு வேட்டையில் வெற்றி கிடைக்கவேண்டும் என்பதற்காக கொற்றவையை வழிபட்டுள்ளனர். பாய்கலைப்பாவை என்றும் கொற்றவை அழைக்கப்பட்டார்.பல்லவர் காலத்தில் கொற்றவை வழிபாடு சிறப்பாக இருந்துள்ளது. மன்னர்கள் போருக்கு செல்லும் முன் கொற்றவையை வணங்கி நவகண்டம் கொடுத்து சென்றால் வெற்றி கிடைக்கும் என நம்பினர். கொற்றவை பாலை நிலத்துக்கு உரிய கடவுளாக இலக்கியங்கள் கூறுகின்றன.சில நூல்கள் குறிஞ்சி நிலத்துக்கு உரிய கடவுளாகவும் குறிப்பிடுகின்றன. பிற்காலங்களில் துர்க்கை என்ற பெயரில் கொற்றவை வழிபாடு மாற்றமடைந்தது.காட்டுமயிலூர் கொற்றவைஇக்கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் கருவரையில் இக்கொற்றவை தற்போதும் செல்லியம்மன் என்ற பெயரில் வழிபாட்டில் உள்ளது. பல்லவர்கள் வலுவிழந்த 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பமாக இதை கருதலாம். ஒரு பலகைக்கல்லில் புடைப்புச்சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது.இதன் உயரம் 132 செ.மீ,அகலம் 73 செ.மீ ஆகும். தலையில் கரண்ட மகுடம்,காதுகளில் பத்ரகுண்டலம்,கழுத்தில் சவடி,சரபளி போன்ற அணிகலன்களுடன் காணப்படுகிறார். மார்புக்கச்சை பட்டையுடன் காட்டப்பட்டுள்ளது.பின்புறம் சூலம்,எட்டு கரங்களுடன் காணப்படுகிறார்.வலது பின்கரங்களில் பிரயோக சக்கரம், நீண்டவாள், மணி போன்றவையும், வலது முன்கரம் அபய முத்திரையிலும் உள்ளது. இடது பின் கரங்களில் சங்கு,வில்,கேடயம் போன்றவையும் உள்ளது. இடது முன்கரம் கடியஸ்த நிலையில் உள்ளது. இடுப்பில் அரையாடையும் ஆடை முடிச்சும் காட்டப்பட்டுள்ளது. கீழ் வலது புறம் நவகண்டம் கொடுத்துக்கொள்ளும் வீரன் உள்ளார். போரில் வெற்றி பெற தன் உடலில் உள்ள ஒன்பது பாகங்களை வெட்டி கொற்றவைக்கு படையலிட்டு தன்னைத்தானே பலி கொடுத்து கொள்பவன் நவகண்ட வீரன் ஆவான்.இடது புறம் வணங்கிய நிலையில் அடியவர் ஒருவர் உள்ளார்.கொற்றவையின் வாகனமான சிங்கமும்,மானும் வீரர்களுக்கு மேற்புறம் உள்ளது. கொற்றவையின் தலைக்கு அருகே இடது புறம் கிளி உள்ளது. எருமைத்தலையின் மீது நேராக நின்ற நிலையில் கொற்றவை காட்டப்பட்டுள்ளார்.காட்டுமயிலூரில் உள்ள திருக்கரம்தோன்றீசுவரர் கோயிலில் உள்ள பாண்டியர்கால கல்வெட்டுகள் மூலம் இந்த ஊர் கோழியூர் பற்றின் கீழ் இருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது
விழுப்புரம் வீரராகவன் ஐயா
மூன்றாம் மாறவர்ம திருபுவன சக்கரவத்திகள் விக்கிரமபாண்டியனின் 5 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டானது காட்டுமயிலூர் கோழியூர் பற்றின் கீழ் இருந்ததை குறிப்பிடுகிறது.  இறை வழிபாடு, படையல், திருப்பணிக்கு நன்செய் நிலம் இரண்டு மாவும் புன்செய் நிலம் நான்கு மாவும் தரப்பட்டுள்ளன. இது கல்வெட்டிலும் செப்பேட்டிலும் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த செப்பேடு தற்போது கிடைக்கவில்லை. சோழகங்கதேவன் என்பவர் இங்கு ஒப்பில்லா முலைநாச்சியார் என்ற அம்மன் கோயிலை ஏற்படுத்தி நிலதானம் செய்துள்ளார். இந்த சோழகங்கதேவன் என்பவர் வாண கோவரையனிடம் பணியாற்றிய தளபதியாய் இருக்க வாய்ப்புள்ளது. எராங்குடையான், பல்லவராயன் என்ற அதிகாரிகள் இதில் கையொப்பம் இட்டு உள்ளனர். இக்கோயிலில் உள்ள வன்னி மரத்தடியில் உள்ள பிள்ளையார் சிலையின் அடியில் உள்ள கல்வெட்டில் இருங்கோளப்பாடி நாட்டு பாணப்புற பற்றை சேர்ந்த கொற்றலூரில் பல்லவன் சேதிராயன் என்பவர் ஏரி வெட்டுவித்த செய்தியும் உள்ளது. கல்வெட்டின் மேற்பகுதியில் யானையின் வடிவம் உள்ளது