aragalur லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
aragalur லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 நவம்பர், 2020

ஆறகளூர் அழிந்து போன சிவன் கோயில் கல்வெட்டு

ஆறகழூர் பொன்.வெங்கடேசன் M.A(HIS),M.A(JMC),M.A(PU.AD), M.PHIL
தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம்


    

கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,தலைவர் சேலம் வரலாற்று ஆய்வு மையம்

ஆறகழூர் பெருமாள் கோயிலில் அழிந்து போன சிவன் கோயிலின் கல்வெட்டு கண்டுபிடிப்பு

  சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் உள்ள கரி வரதராஜபெருமாள் கோயிலில் பாண்டியர் மற்றும் நாயக்கர் கால கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
 சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், ஆய்வுமையத்தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் ஆகியோர் கரிவரதராஜ பெருமாள் கோயிலில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கமலமங்கை நாச்சியார் கோயிலில் பாண்டியர் மற்றும் நாயக்கர் கால கல்வெட்டுகளை கண்டறிந்தனர்.

கமலமங்கை நாச்சியார் சன்னதி

மகதைமண்டலம்


12 ஆம் நூற்றாண்டில் ஆறகழூர் மகதை மண்டலத்தின் தலைநகராக விளங்கியது.பொன்பரப்பின வாணகோவரையன் என்ற மன்னர் மகதை நாட்டை ஆண்டு வந்தார். இவர் சோழமன்னர் மூன்றாம் குலோத்துங்கனின் படைத்தளபதியாகவும், மகதையின் குறுநில மன்னராகவும் விளங்கினார்.இவர் காலத்தில்தான் ஆறகழூர் காமநாத ஈஸ்வரர் கோயிலும், கரி வரதராஜ பெருமாள் கோயிலும் கட்டப்பட்டன. வாணகோவரையனின் மனைவி புண்ணியவாட்டி நாச்சியார் என்பவர் கரி வரதராஜபெருமாள் கோயில் கருவறை, அர்த்தமண்டபம் போன்றவற்றை கட்டி விமானமும் அமைத்தார் என இக்கோயிலின் கருவறையின் வடக்கே உள்ள வெளிப்புற கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய சேலம் மாவட்டத்தின் கிழக்குப்பகுதி,கள்ளக்குறிச்சி மாவட்டம்,பெரம்பலூர் மாவட்டம், கடலூர் மாவட்டத்தின் மேற்குப்பகுதிகள் மகதை நாட்டில் அடங்கி இருந்தது.
  
  13 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களும்,ஹெய்சாளர்களும், 15 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை விஜயநகர பேரரசு, நாயக்க மன்னர்களும் மகதை நாட்டை ஆட்சி செய்தனர்,



ஆறகளூர் கரி வரதராஜ பெருமாள்

அழிந்து போன சிவன் கோயில்


  ஆறகழூரில் உள்ள கால்நடை மருத்துவமனை அருகே இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடம் கைலாசநாதர் தோப்பு என அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் ஒரு சிவன்கோயில் இருந்து அழிந்து போனதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இங்கு ஒரு நந்தி சிலை இப்போதும் உள்ளது. இங்கு இருந்த 6 சிலைகள் 30 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போய்விட்டது. மேலும் இங்கு இருந்த பைரவர் சிலை அருகே உள்ள மாரியம்மன் கோயிலிலும், சண்டிகேசுவரர் சிலை தேர்முட்டி அருகே உள்ள அகழ்பள்ளத்தின் தெற்குகரையிலும் இன்றும் உள்ளது. 17 ஆம் நூற்றாண்டில் சிதைந்திருந்த இக்கோயிலில் இருந்த கற்களை பயன்படுத்தி கரிவரதராஜ பெருமாள் கோயிலின் உள்ளே கமலமங்கை நாச்சியார் கோயில் கட்டப்பட்டு உள்ளது. அதற்கு சான்றாக அந்த சிவன் கோயிலுக்கு பாண்டிய மன்னர் தானம் அளித்த கல்வெட்டு கமலமங்கை நாச்சியார் கோயிலில் காணப்படுகிறது.



கரி வரதராஜ பெருமாள்

பாண்டியர் கல்வெட்டு


   கமலமங்கை நாச்சியார் கோயிலின் அர்த்த மண்டபத்தின் தென்புற உபபீடத்தில் கல்வெட்டு 4 வரிகளில் உள்ளது. கி.பி 1269 ஆம் ஆண்டு முதலாம் சடையவர்மசுந்தரபாண்டியனின் 18 ஆம் ஆட்சி ஆண்டில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. ஆறகழூர் உடையார் வயி ராவண ஈஸ்வரமுடைய நாயனார் கோயில் திருப்பணிக்கும், பூசைக்கும் மகதை மண்டலத்தில் உள்ள தொழுவூர் (இன்றைய தொழுதூர்) என்ற ஊரில் பெரிய ஏரிக்கு அருகே முதல் தரத்தில் ஆயிரம் குழி நன்செய் நிலம் தானமாக தரப்பட்டுள்ளது. இந்த நிலமானது சொக்கன் தடி என்ற அளவுகோலால் அளந்து தரப்பட்டது. நிலத்துக்கான வரியும் நீக்கப்பட்டுள்ளது. நிலத்தின் எல்லைகளில் சூலக்கற்கள் நிறுவப்பட்டு எல்லைகள் உறுதி செய்யப்பட்டது. சந்திரன் உள்ள வரை இந்த தானம் நிலைத்திருக்க வேண்டும் என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி கல்வெட்டாகவும், செப்பேடாகவும் பொறிக்கப்படவேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. வாணாதிதேவன் என்பவர் இக்கல்வெட்டை பொறித்துள்ளார்.



  இக்கல்வெட்டின் மூலம் பல புதிய செய்திகள் நமக்கு தெரிய வந்துள்ளன. தற்போது கைலாசநாதர் தோப்பு என அழைக்கப்படும் இடத்தில் இருந்து அழிந்து போன சிவன் கோயிலின் பெயர் ராவண ஈஸ்வரமுடையநாயனார் கோயில் ஆகும். அக்காலத்தில் நிலங்களை அளக்க சொக்கன் தடி என்ற நில அளவுகோல் பயன்படுத்தப்பட்டு உள்ளது. வாணாதிதேவன் என்ற அதிகாரி இக்கல்வெட்டை வெட்டியிருப்பதால் பாண்டியர்கள் காலத்தில் வாணகோவரையர் இப்பகுதியில் ஆட்சியில் இருந்தது தெரிய வருகிறது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் செப்பேடு இப்போது ஊரில் யாரிடமும் இல்லை.இது அழிந்து போயிருக்கலாம்
.

சேலம் நாயக்கர்கள்


17 ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்க மன்னர்களின் கீழ் பாளையக்காரர்களாக  சேலம் நாயக்க மன்னர்கள் வாழப்பாடி அருகே உள்ள பேளூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர். சின்னம்மநாயக்கர் என்பவர் மன்னராக இருந்தார். இவருக்கு சின்னபூபாலர் என்ற பட்டப்பெயரும் உண்டு. இவருக்கு பெத்தநாயக்கன், திருமலைநாயக்கர், ராமன்,லட்சுமணன்,வேங்கடப்ப நாயக்கர், சின்னப்ப நாயக்கர் என ஆறு மகன்கள் இருந்ததாக செக்கடிப்பட்டி கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதில் ராமனும், லட்சுமணனும் இரட்டை பிள்ளைகள். இவர்கள் அனைவரின் பெயரிலும் பேளூர் மற்றும் ஆத்தூரை சுற்றி ஊர் பெயர்கள்  இன்றும் அமைந்துள்ளன. பெத்தநாயக்கன் பெயரால் அமைந்த ஊர் பெத்தநாயக்கன் பாளையம், சின்னம்மநாயக்கன் பாளையம்,ராமநாயக்கன் பாளையம்,லட்சுமண சமுத்திரம் போன்றவை இவர்கள் பெயரில் அமைந்த ஊர்களாகும்.சேலம்,வாலிகண்டாபுரம்,புதுக்கோட்டை,கள்ளக்குறிச்சி வரை இவர்கள் ஆட்சி செய்தனர். ஆறகழூரும் இவர்கள் ஆட்சிப்பகுதியில் இருந்தது.



சேலம் திருமலை நாயக்கர்

பெத்தநாயக்கன் கல்வெட்டு


  சின்னம்மநாயக்கரின் மகன் திருமலை நாயக்கர்.அவருக்கு பெத்தநாயக்கன் என்ற ஒரு மகன் இருந்தது ஆறகழூர் கல்வெட்டு மூலம் தெரியவந்துள்ளது. கரியபெருமாள் கோயிலில் உள்ள கமலமங்கை நாச்சியார் கோயிலில் வடக்குப்பக்கம் அர்த்தமண்டபம் முதல் கருவறை வரை செல்லும் குமுதப்படையில் மூன்று வரிகளில் கல்வெட்டு அமைந்துள்ளது. ஸ்வஸ்திஸ்ரீ மகாமண்டலேஸ்வரர் என கல்வெட்டு துவங்குகிறது.இக்கோயிலை கரிய பெருமாள் கோயில் என கல்வெட்டு குறிப்பிடுகிறது. மதுரையை ஆண்ட நாயக்க மன்னர் வீரராமதேவ மகராயரின் மெய்கீர்த்திகள் சொல்லப்பட்டுள்ளன.சேர,சோழ,பாண்டியரை வென்றவர் எனவும் குறிப்பிடப்பட்டு நட்சத்திர குறிப்புகளும் வருகின்றன.கி.பி. 1618 ஆம் ஆண்டு இந்த கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.சேலம் நாயக்க மன்னர்களுக்கு நரலோககண்டன் என்ற பட்டம் இருப்பதை கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.


  
   மகதை மண்டலம் ஜனநாத வளநாட்டு ஆற்றூர் கூற்றத்தில் உள்ள ஆறகழூர் கரிய பெருமாள் கோயிலில் புதிதாக கமலமங்கை நாச்சியாருக்கு என தனி கோயில் அமைக்கப்பட்டு கருவறை, அர்த்தமண்டபம்,மகாமண்டம், கட்டப்பட்டு இறை உருவங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மதனகோபாலசாமிக்கு என ஒரு தனி கோயில் கட்டப்பட்டு இறை உருவங்கள் நிறுவப்பட்டன. ஆண்டாளுக்கு என ஒரு தனி கோயிலும் கட்டப்பட்டு ஆண்டாள் உருவம் செய்து வைக்கப்பட்டது. ஆண்டாளை கிருஷ்ண உபய நாச்சியார் என கல்வெட்டு கூறுகிறது. சேனைமுதலியார் உருவமும் நிறுவப்பட்டது என கல்வெட்டு குறிப்பிடுகிறது. கல்வெட்டில் வடமொழி அதிகம் கலந்துள்ளது. இந்த கல்வெட்டை சேலம் திருமலை நாயக்கரின் மகன் பெத்தநாயக்கன் என்பவர் பொறித்துள்ளார். இதன் மூலம் கமலமங்கை நாச்சியார்,மதனகோபாலசாமி,ஆண்டாள் கோயில்களை பெத்தநாயக்கன் கட்டிஉள்ளார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இந்த தன்மம் காலம் முழுதும் நிற்கவேண்டும் என கல்வெட்டு குறிப்பிடுகிறது. 400 ஆண்டுகள் கடந்தும் இக்கோயில் இன்றும் நல்ல நிலையில் உள்ளது. இக்கோயிலை கட்டிய பெத்தநாயக்கன், அவர் தந்தை திருமலை நாயக்கர் ஆகியோரின் உருவங்கள் கோயிலில் உள்ள தூண்களில் காணப்படுகிறது. இவர்களின் உருவங்களுக்கு மேலே இவர்களின் அரசு சின்னமான சூரியன், பிறை நிலா நடுவே குறுவாள் கொண்ட முத்திரை காணப்படுகிறது. இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் பல வரலாற்றுத்தடயங்கள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
 


சேலம் பெத்தநாயக்கன்


சேலம் திருமலைநாயக்கர் மகன் பெத்தநாயக்கன் என்ற கல்வெட்டு


காலைக்கதிர் செய்தி


காலைக்கதிர் செய்தி

https://www.dinamalar.com/news_detail.asp?id=2655917

தினமலர் செய்தி

https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/11/22100132/At-the-Perumal-temple-Of-the-ruined-Shiva-temple-Inscription.vpf

தினத்தந்தி செய்தி

https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/nov/22/inscription-of-ruined-shiva-temple-found-in-perumal-temple-3508857.html?fbclid=IwAR2vxRRjvGJ_0r7zzl17qjThipUJTu4A-kc62uU0qqrly01IvV7f_Cj9jss

தினமணி செய்தி



செவ்வாய், 1 ஜனவரி, 2019

ஆறகழூர் வாண்டையார் கல்வெட்டு-aragalur

வீரராகவன் சார், ஆறகழூர் பொன்.வெங்கடேசன்
ஆறகழூர் வாண்டையார் கல்வெட்டு





நவகண்டமும் கல்வெட்டும்
தினகரன் செய்தி
ஆறகழூர்
கி.பி 12 ஆம் நூற்றாண்டில் மகதை மண்டலத்தின் தலைநகராய் ஆறகழூர் இருந்துள்ளது. 16 ஆம் நூற்றாண்டுக்கு பின் தன் பெருமையையும் முக்கியத்துவத்தையும் இழந்தது. இருப்பினும் இங்குள்ள கோயில்களும் ,கல்வெட்டுகளும் தம் பெருமையை இன்னும் நிலை நாட்டிக்கொண்டு உள்ளன.


காடுகளிலும், வயல்வெளிகளிலும் இன்னும் வரலாற்று சான்றுகள் ஒளிந்து கிடக்கின்றன. இப்படி வயல்களில்,வரப்பில் இருந்த 5 கல்வெட்டுகளை சேலம் வரலாற்று ஆய்வு மையம் கடந்த சில ஆண்டுகளில் கண்டறிந்து வெளிப்படுத்தியது. ஊருக்குள் வெளிப்பாளையம் என்ற இடத்தில் வயலுக்கு உள்ளே ஒரு நவகண்ட சிற்பம்
இருந்தது.அதை பல முறை பார்த்துள்ளேன்.அதை சுற்றி எப்போதும் புல் முளைத்து கிடக்கும்.சமீபத்தில் அந்த இடத்தை சுத்தம் செய்த போது ஒரு எழுத்துள்ள கல் இருப்பது தெரிந்தது. எங்க ஊர் பையன் ஒருவர் அதை முகநூலில் பதிவு செய்ய ,அன்பு மகள் கெளதமி அது குறித்து தகவல் தெரிவித்தார். பின் நம் ஆய்வு மையம் சார்பில் அக்கல்வெட்டு ஆய்வு செய்யப்பட்டு இன்று செய்தி வெளியிடப்பட்டது.
தினமணி செய்தி
நவகண்டமும் கல்வெட்டும்
குற்றவாளிகள் குடியேற்றத்தை தடை செய்ததை சொல்லும் ஆறகழூர் கல்வெட்டு
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,மருத்துவர் பொன்னம்பலம்,ஜீவநாரயணன்,கவிஞர் மன்னன்,புலவர் வீராசாமி ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆறகழூர் வெளிப்பாளையம் அருகே உள்ள விளைநிலத்தில் கல்வெட்டு ஒன்றும்,நவகண்ட சிற்பம் ஒன்றும் கண்டறியப்பட்டது.
கல்வெட்டு
95 செ.மீ நீளமும்,37 செ.மீ அகலமும்,20 செ.மீ தடிமனும் உள்ள ஒரு பலகைக்கல்லில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.முன்பக்கம் 16 வரிகளிலும் பின்பக்கம் 23 வரிகளிலும்,பக்கவாட்டில் 9 வரிகளிலும் கல்வெட்டு மூன்று பக்கங்களில் உள்ளது. ஸ்வஸ்திஸ்ரீ மகாமண்டலேசுவரர் என கல்வெட்டு துவங்குகிறது.இது 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டாகும். ஆறகழூரில் இதுவரை தொல்லியல் துறையால் 48 கல்வெட்டுகளும், சேலம் வரலாற்று ஆய்வுமையத்தால் 5 கல்வெட்டுகளும் படிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் இல்லாத சில புதிய செய்திகளை இந்த கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது. ஆறகழூரை மலாடாகிய ஜனநாத வளநாட்டு ஆற்றூர் கூற்றத்து ஆறகழூர் என எல்லா கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன. தற்போது கண்டறியப்பட்ட கல்வெட்டானது மலாடாகிய ஜனநாத வளநாட்டு மகதை மண்டலத்து நரையூர் கூற்றத்து தென்கரை சீர்மையான ஆறகழூர் என குறிப்பிடுகிறது.சோழர்கள்,வாணகோவரையர்கள்,பாண்டியர்கள்,விஜயநகரபேரரசு,நாயக்கர்கள் கல்வெட்டுகள் மட்டுமே இது வரை கிடைத்துள்ளது. வாண்டையார்களின் கல்வெட்டு இப்போதுதான் முதன்முறையாக கிடைத்துள்ளது. இந்த வாண்டையார்கள் நாயக்க மன்னர்களின் கீழ் அதிகாரிகளாக பணியாற்றியுள்ளனர்.
குமாரமுத்து கிருஷ்ணப்ப வாண்டையார் ஆறகழூர் திருகாமீசுரமுடைய தம்பினார் கோயிலுக்கு குமாரபாளையம் என்ற ஊரை தானமாக கொடுத்துள்ளார். அப்போது ஆறகழூரில் வசித்து வந்த நல்ல குடியை சேர்ந்த நாற்பத்தெண்ணாயிரம் என்பவர்களை குமாரபாளையத்தில் புதிய குடிகளாக குடியேற அனுமதி அளித்துள்ளனர். இந்த நாற்பத்தெண்ணாயிரவர் என்பவர்கள் வேளாண்மை மற்றும் வணிகம் செய்த குடிகளாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். வீடுகளில் துளையிட்டு திருடும் கன்னமிட்டவன், பயணத்தின் போது வழிமறித்து திருடும் வழிப்பறிச்சவன்,மற்றவர்கள் பொருட்களை அபகரிக்கும் எடுப்பு எடுத்தவன் போன்ற குற்றச்செயல்களை செய்பவர்களை ஒரு போதும் குமாரபாளையத்தில் குடியேற்றக்கூடாது என ஆணையிட்டு உள்ளனர். அங்கு குடியேறும் நற்குடியினர் எல்லா உரிமைகளையும் பெற்று மகிழ்சியாக வாழ்வார்கள்.இந்த தானத்தையும் கட்டளையையும் மீறுபவர்கள் ஒன்றுமில்லாமல் போவார்கள்.இந்த தானத்தை அழிப்பவர்கள் கங்கை கரையிலே காராம் பசுவை கொன்ற பாவத்தை அடைவார்கள் என கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது.
நவகண்ட சிற்பம்


இந்த கல்வெட்டுக்கு அருகிலேயே ஒரு நவகண்ட சிற்பமும் காணப்படுகிறது.போரின் போது தன் நாடு வெற்றி பெற கொற்றவைக்கு தன் உடலின் ஒன்பது பாகங்களை அரிந்து படையல் இட்டு தன்னைத்தானே பலி கொடுத்துக்கொண்ட வீரனுக்காக வைக்கப்பட்டுள்ள நவகண்ட சிற்பம் இதுவாகும்.இந்த வயல்வெளியில் கறுப்பு சிகப்பு பானை ஓடுகள் காணப்படுகின்றன. எனவே இந்த இடம் முன்பு மக்களின் வாழ்விடப்பகுதியாக இருந்தது உறுதியாகிறது. இந்த பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் பல வரலாற்று சான்றுகள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
வாண்டையார் கல்வெட்டு

http://cfcm.salemonline.in/article/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AE%95%E0%AE%B4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81---2614798?fbclid=IwAR3h3t4Qb8cbIncSASfjh58h22CRshFJFN_F_2AxYpd2aWgNaJ3mgHkZf9c

https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/dec/28/%E0%AE%86%E0%AE%B1%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3066497.html?fbclid=IwAR2pP_GQoyqYCDg4gcI7NmPeFDoUvyGNdStLmfdeoUCC5HpcAY1eKuc6rAE

https://www.vikatan.com/news/tamilnadu/145739-new-inscription-stone-discovered-near-salem.html

புதன், 27 டிசம்பர், 2017

ஆறகழூர் கல்வெட்டுகள்

ஆறகழூர் கல்வெட்டுகள் எண் 7
காமக்காபாளையம்
வீரராகவன் ஐயாவும் நானும்

காமக்காபாளையம் கன்னட கல்வெட்டை பார்த்தபோதே அங்கிருந்த அருணாசலேசுவரர் கோயிலின் சுவற்றில் இருந்த இந்த கல்வெட்டையும் வீரராகவன் ஐயாவும் நானும் படி எடுத்து படித்தோம். பணி சுமையின் காரணமாக கொஞ்ச நாள் முன்புதான் வெளியிட்டோம். காமக்காபாளையத்தை சேர்ந்த நண்பர் Tvenkatesan Tvenkatesan எங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்தார். விருதாசலம் கோயிலின் தாக்கத்தால் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கலாம்
நண்பர்களுடன்
தலைவாசல் அருகே 527 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே காமக்காபாளையம் என்ற ஊரில் கி.பி. 1490 ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், சேலம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் இருவரும் காமக்காபாளையத்தில் உள்ள அருணாசலேசுவரர் கோயிலில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது கோயிலின் அர்த்த மண்டபத்தில் விநாயகர் மாடத்துக்கு மேல் ஒன்பது வரிகளில் ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டது. 98 செ.மீ நீளம் 26 செ.மீ. அகலம் உள்ள இடத்தில் இந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதன் அருகே தானம் கொடுத்தவரின் உருவம் புடைப்பு சிற்பமாக உள்ளது. அச்சிற்பத்தின் முகம் கைகள் சிதைக்கப்பட்டுள்ளது
கல்வெட்டு
.
விஜயநகர பேரரசின் ஆட்சியின்போது ஆறகழூர் மகதை மண்டலம் இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. மகதை மண்டலத்தில் உள்ள ஓர் ஊராக காமக்காபாளையும் இருந்துள்ளது.
கி.பி. 1490 ஆம் ஆண்டு தை மாதம் 5 ஆம் தேதி இந்த கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.
தானம் செய்தவர்
கல்வெட்டு சொல்லும் செய்தி
காமக்காபாளையம் கிராமத்தில் அப்போது வசித்த செல்லப்பிள்ளை என்பவரின் மகன் நமச்சிவாயம் பிள்ளை என்பவர் தான் சுத்தகிரயமாக வாங்கிய 15 குழி நிலத்தை இவ்வூரில் உள்ள அருணாசலேசுவர சுவாமியின் விசேச கட்டளை பூசைக்கு ஆகும் செலவுக்காக தானமாக கொடுத்துள்ளார். இந்நிலத்தில் வரும் வருவாயை கொண்டு இந்த பூஜையை தங்கு தடையின்றி தொடர்ந்து நடத்தி வர வேண்டும் . இந்த தர்மத்தை யாராவது அழிவு செய்தால் அவர்கள் காசியிலே காராம் பசுவை கொன்ற பாவத்தை அடைவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டுகளில் பொதுவாக தானத்தை அழிவு செய்பவர்கள் கங்கை கரையிலே காரம் பசுவவை கொன்ற பாவத்தை அடைவார்கள் என வரும். இங்கு காசியிலே என்று வருவது குறிப்பிடதக்கதாகும். காசிக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் உள்ள கிணறும் காசி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
15 ஆம் நூற்றாண்டில் நிலங்கள் பெரும்பாலும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் வாய்மொழியாகவே விற்கப்பட்டன . இந்த கல்வெட்டில் 15 குழி நிலம் சுத்தகிரயமாக வாங்கப்பட்டதாக குறிப்பிடுவது சிறப்பான செய்தியாகும்.
இந்த கோயிலுக்கு அருகே உள்ள விளைநிலத்தில் கி.பி. 1751 ஆம் ஆண்டை சேர்ந்த இம்மடி கிருஷ்ணராஜ உடையார் என்ற மைசூர் மன்னரின் கன்னட மொழி கல்வெட்டு இதே குழுவினரால் சென்ற ஆண்டு கண்டறிப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் மூலம் காமக்காபாளையம் வரலாற்று சிறப்பு பெற்ற ஊர் என்பதை அறியலாம்.
மைப்படி
காமக்காபாளையம் கல்வெட்டு
சி.வீரராகவன், விழுப்புரம்
பொன்.வெங்கடேசன் , ஆறகழூர்
இடம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம்
காமக்காபாளையம் என்ற ஊரில் உள்ள அருணாசலேசுவரர்
திருக்கோயிலில் கருவரை முன் மண்டபத்தின் தென்புற சுவரில
காலம்:
பொ.ஆ. 15 ஆம் நூற்றாண்டு
செய்தி:
அருணாசலேசுவர சுவாமி விசேச கட்டளை
செலவுக்காக இவ்வூரை சேர்ந்த செல்லப்பிள்ளை மகன்
நமச்சிவாயபிள்ளை சுத்த கிரயமாக 15 குழி நிலம் வாங்கி
கொடுத்த செய்தியை தெரிவிக்கிறது.
கோயிலின் முன்புறம்
கல்வெட்டு பாடம்:
1. ஆறுமுக ஸ்வஸ்திஸ்ரீ விஜய வருடம் தைமாதம் ஸ்ரீ
வாகன
2. சகாப்தம் 1412 கலியுகம் 4871 இதன்மேல் செல்
3. லா நின்ற விக்குறிதி வருடம் தை மாதம் 5
காமக்காபாளையத்திலிருக்கும்
ஸ்ரீ அருணாசலேசுவர
4. மிசதி இவ்வூரிலிருக்கும் செல்லப்பிள்ளை புத்திரன் நமச்சிவாயபிள்ளை தான் சாசனம் பண்ணி கொடுத்
5. தேன் . இந்த கிராமத்திலே பட்ட விருத்தி மானியத்தில் இப்படி யிசையில் குகிரினி ஏ(யே)
6. தகதால் பூற்வமாக சுத்த கிரயம்யாக வாங்கினது குழி 15 இந்த குழி
7. ஸ்ரீ அருணாசலேசுவர சுவாமி விசேஷ கட்டளை செலவுக்கு தான் சாசனம் கொடுத்தேன்.
8. இந்த தர்மம் அகுதம் பண்ண பெற காசியிலே காராம் பசுவு கொன்ன பாவத்திலே போ
9. வாராகவும். தர்மம் - - - - விதமாக செந்திர சூரியாதியள சாஷி தெவிக்காய்

#ஆறகழூர்பொன்.வெங்கடேசன்

செவ்வாய், 26 டிசம்பர், 2017

aragalur ஆறகழூர் கல்வெட்டுகள்

ஆறகழூர் கல்வெட்டுக்கள் எண் 6
காமக்காபாளையம் கன்னட கல்வெட்டு
என் கல்வெட்டு தேடலில் இது ஒரு முக்கியமான கல்வெட்டு. இது வரை தமிழில் மட்டுமே கல்வெட்டுகளை பார்த்த நான் முதன் முதலில் கன்னட மொழியில் கண்டறிந்த கல்வெட்டு இது.
சென்ற பதிவில் குறிப்பிட்டதை போல் வேலி முள்ளுக்கு நடுவே தனித்தனியாக இரண்டு கற்கள் கல்வெட்டாய் கன்னட மொழியில் இருந்தது. இதை புகைப்படம் எடுக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். கிட்டவே நெருங்க முடியாத சூழலில் முள் சட்டையை கிழிக்க உடலிலும் கீறி இரத்தம் வர வர போட்டோ எடுத்தேன்.
ஒரு மாதம் கழித்து நானும் விழுப்புரம் வீரராகவன் அய்யாவும் படி எடுக்க சென்றோம். காமக்காபாளையத்தில் இருக்கும் என் நண்பரும் உறவினருமான Tvenkatesan Tvenkatesan அவர்கள் முள்ளை எல்லாம் ஆள் வைத்து வெட்டி சுத்தம் செய்து கொடுத்தார்.
கல்வெட்டு 2 துண்டாய் உடைந்து நட்டு வைக்கப்பட்டிருந்தது. அதை சுற்றி சப்போட்டுக்கு கற்கள் பதிக்கப்பட்டிருந்து. அன்று கொஞ்சம் கவனகுறைவாக இருந்திருந்தால் எங்க கதை முடிந்திருக்கும். ஒரு கல்லை புரட்டியபோது கல்லுக்குள் இருந்து 10க்கும் மேற்பட்ட பெரிய தேள்கள் வெளிவந்தன. பயந்திட்டு தூர ஓடினோம். பின் அந்த கல்வெட்டை படி எடுத்து முடிக்கும் போது மாலை ஆகி விட்டது. 6 மாதம் அதை படிக்க முடியாமல் தடுமாறினோம். அப்புறம் Manonmani Pudhuezuthu சாரின் உதவியுடன் மைசூர் பேராசிரியர் திரு சாமி அவர்களின் உதவியுடன் கல்வெட்டு படிக்கப்பட்டு செய்திதாள் மற்றும் ஆவணம் 2017ல் பதிவு செய்யப்பட்டது.
காமக்காபாளையம் கன்னட கல்வெட்டு
சி.வீரராகவன், விழுப்புரம்
பொன்.வெங்கடேசன் , ஆறகழூர்
இடம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம்
காமக்காபாளையம் என்ற ஊரில் உள்ள அருணாசலேசுவரர்
திருக்கோயிலில் அருகே செல்வமணி ரெட்டியார் என்பவர்
விளை நிலத்துக்கு அருகே இரண்டாய் உடைந்த
நிலையில் கன்னட மொழியில் உள்ள பலகைக்கல்
காலம்:
பொ.ஆ.1673+78= 1751 , 18 ஆம் நூற்றாண்டு ,மைசூர் இம்மடி
கிருஷ்ணராஜ உடையார்
செய்தி:
கல்வெட்டின் மேல் பகுதியில் சூரியன் பிறை நிலா அதன் கீழ் சங்கு, சக்கரமும் நடுவில் நாமமும் காணப்படுகிறது.கன்னட மொழியில் கன்னட வரி வடிவில் கல்வெட்டு உள்ளது. சகவருடம் 1673 கலியுகம் 4818 ல் வெட்டப்பட்டுள்ளது.மைசூர் மன்னர் உடையார்
இரண்டாம் கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் காஞ்சி தலத்தின் பத்து கோவில்களுக்கு அன்றாட நைவேத்தியம், மாத, வருட உற்சவங்களுக்கு காமக்காபாளையத்தில் வசூலான வரி வருவாய் 73,991 பணம் 792 பொன்னும் தானமாக கொடுத்ததை குறிக்கிறது.
கல்வெட்டுபாடம் :
1. ஸ்ரீ மது ராமாநுஜா (ய) நமஹ
2. ஸ்வஸ்திஸ்ரீ விஜாய பியூதய
3. சாலிவாகன சகாப்த
4. 1673 கலியுக 4818 சந்த
5. வர்த்தமான வாதா பிரஜோத்பத்தி சம்
6. வத்சரதமாக பகுல 5லு ஸ்ரீமான்
7. மகாராஜ ராஜாதி ராஜ
8. பரமேஸ்வர பிரவுட பிரதாப நரப
9. தி வீரஸ்ரீ அப்பிரதிம கிருஷ்ணராஜ
10. உடையரயளு ஸ்ரீ ரங்கப்பா
11. ட்டனதள்ளி ரத்ன சிம்மாசனாரூடரா
12. கி பிருதீவி சா(0) ராஜ்யம் யத்திரளு
13. கஞ்சி ஸ்தலதள்ளி இருவ ஸ்ரீ பார்த்த
14. சாரதி ஸ்வாமிய - - - - தூ - -
15. ஸ்வாமி - - - - அஸ்டபுஜ ஸ்வா
16. மியவரு வி[ஸ்வ] பிரகாச ஸ்வாமி
17. யவரு காமானிகா ர சம்ஹா [ர] ஸ்வா
18. மீ யவரு திரி விக்ரம ஸ்வாமியவ
19.ரு மரகத வர்ண ஸ்வாமியவரு
20. பிரவாள வர்ண ஸ்வாமியவரு வைகுந்
21. ட ஸ்வாமியவரு ஸ்ரீ பாஷ்யக்கார ஸ்வா
22. மிய வரிகே சக நம்ம கை(0) கர்ய
23. வாகி படிதர தீபாராதனே நித்யோத்
24. ஸவ பக்சோத்ஸவ மாசோத்ஸவ
25. சம்வத்ரோத்ஸவ முன் தாத உத்
26. ஸவகரு நடேயளிக்கே பக்கே நிம்ன
27.அவாளு அகரகஜ்ஜின சாவடி
28. ஹோபளி அனந்தகிரி ஸ்தலதளு
29. பெ(ரியேரி) வழித தா காமக்கா பாள்ய
30. த கிராமவனு தாரேயரது
31. கொட்டு இத்தேவேயாத காரன
32. - - - -
33. பிரோமத சம்வத்சரத ஹட்டு
34. வழி கோபால க 73991. 0
35. சுங்க பொம்மு (7) 921 உப
36. யம் கோபால க 7412 ரி 0 சந்த வு
37. டு வழி கிராமவன்று சர்வ மான்ய
38. வாகி நடசி கொண்டு பருவ ஆகே
39. கட்ல மாடிபி இதிது ஆப்பிரசார
40. கே கஞ்சி ஸ்தலதலி இடுவ பார்த்த
41. சாரதி ஸ்வாமி யவரு முந்நா
42. த ஈ அத்து தேவஸ்தான களிகே சதா
43. படிதரா தீபாராதனே நித்யோத்சவ
44. பக்சோத்சவ மாசோத்சவ சம்வத்ஸ
45. ரோத்ஸவ முந்தாத சாபே பக்யே
46. ஈ காமக்கா பாள்யத கிராமத ய
47. ல சதுர்சீமேகம் சங்க சக்ரந சிலா
48. பிரதிஷ்டையன்று மாடிசி கொட்டு ச
49. ந்தர சூர்யாதி வரைகு சாஸ்வத நிரு
50. பாதிகா சர்வமான்யவாகி கம்சி
51. [ஊரி] கே மணவாள பராக்கு ஸர
52. மாறு [பீச்சி]ய் யரவரா மடத
53. அவறிலிகே நடசிக்கொண்டு ப
54.ரோது
நன்றி : சுகவனமுருகன், மைசூர் பேராசிரியர் சாமி



வியாழன், 21 டிசம்பர், 2017

ஆறகழூர் கல்வெட்டுகள்

ஆறகழூர் கல்வெட்டுகள் எண் 5


நத்தகரை கல்வெட்டு
2 வருடங்களுக்கு முன் ஒரு ஞாயிற்று கிழமை தொல்லியல் தேடலுக்கு கிளம்பினேன். ஆறகழூருக்கு பக்கத்தில் நத்தக்கரைன்னு ஒரு ஊர் அந்த ஊருக்கு போனேன். அந்த ஊருக்கு நத்தகரைன்னு எப்படி பேர் வந்துச்சு...? தெரிஞ்சிக்க அங்கிருந்த பெரியவர் ஒருவரிடம் பேச்சு கொடுத்தேன்..
அய்யா இந்த ஊருக்கு நத்தகரைன்னு எப்படி பேர் வந்துச்சி..?
அதுவா..ரொம்ப வருசத்துக்கு முன்னாடி இங்க ராசாங்களுக்குள் பெரிய சண்டை நடந்திச்சி. அப்ப நெறைய பேரு இங்க போரில செத்து போய் ரெத்தம் ஆறா ஓடிச்சாம்.அதனால ரத்தகரைன்னு பேரு வந்துச்சாம். காலபோக்குல ரத்தகரை மருவி நத்தகரைன்னு ஆயிடுச்சி . இந்த சண்டையில கை,காலு போனவங்க, காயம் பட்டவங்களுக்கு மலைக்கு பக்கத்துல நிலம் கொடுத்து அங்கியே தங்க வச்சாங்க. அந்த ஊருதான் இப்ப இருக்குற புத்தூர்.என சொல்லி முடித்தார்.
இன்னொரு பெரியவரிடம் கேட்டேன். அவர்
கள ஆய்வின் போது
அந்த காலத்தில் இது ஆறகழூரின் ஒரு பகுதியாதான் இருந்துச்சி..ஆறகழூர் தலைநகராக இருந்திச்சி..கோட்டைக்குள்ள ராசா மந்திரி அப்புறம் முக்கியமான ஆளுங்க குடியிருப்பாங்க..சாதாரண ஆட்கள் குடியிருக்க நத்தம் அப்படின்னு ஒரு பகுதியை ஒதுவாக்குவாங்க. அப்படி ஆறகழூர் நத்தத்துக்கு கரையா இந்த பகுதி இருந்ததால் நத்தகரைன்னு பேர் வந்துச்சி...
சரிங்க இங்க ஏதாவது கல்வெட்டு இருக்கா..?
பஸ்ஸ்டாண்டு கொடி கம்பத்துகிட்ட ஒரு கல்லு இருக்கு போய் பாருங்க..
பறந்துகிட்டு போய் பாத்தேன்...அச்சச்சோ அங்க இருந்தது ஒரு கோமாரிக்கல்லு..
ஏமாத்ததோடு திரும்பி கொஞ்சதூரம் வந்தேன்.அப்ப என் பள்ளித்தோழன் இப்ப நடுநிலைப்பள்ளி தலமை ஆசிரியர் மனோகரன் நின்னுகிட்டு இருந்தார்..
என்ன வெங்கடேசு இவ்வளவு தூரம். உன்னை பாத்து எவ்ளோ நாளாச்சி..நல்லாருக்கியா..?
நல்லாருக்கேன் மனோகரு. நான் இப்ப கல்வெட்டை தேடிகிட்டு இருக்கேன்
அப்படியா எங்க வீட்டுக்கு பின்னாடி ஒரு கல்லு இருக்கு வந்து பாரு...
இருவரும் அந்த இடத்துக்கு போனோம். சாய்ந்த நிலையில் செடி கொடிகளுக்கு நடுவே ஒரு கல்வெட்டு..
படி எடுக்கும் பணியில்
கல்வெட்டு மைப்படி
அதன் பிம்பத்தை காமிராவின் கண்களுக்கு சாப்பிட கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினேன். விழுப்புரம் வீரராகவன் ஐயா மங்கை மேடத்துக்கு தகவல் தெரிவித்தேன். சில வாரங்களில் அந்த கல்வெட்டு படிக்கப்பட்டு செய்தி நாளிதழ்களில் வெளியிடப்பட்டது.2016 ஆவணம் இதழில் பதிவு செய்யப்பட்டது. சிலநாள் முன்பு அந்த கல்வெட்டை பார்க்க சென்றபோது செடி கொடிகளுக்குள் மறைந்து கிடந்தது.
கல்வெட்டு வாசகம்
நத்தக்கரை கிராமபூதான கல்வெட்டு
சி.வீரராகவன்
வீ.மங்கையற்கரசி ராகவன்
விழுப்புரம்
ஆறகழூர் பொன்.வெங்கடேசன்
இடம் :
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே
நத்தக்கரையில் , ஆசிரியர் மனோகரன் என்பவர் வீட்டுக்கு பின்புறம் தோட்டத்தில் உள்ள பலகை கல்வெட்டு
காலம் : 16 ஆம் நூற்றாண்டு பொ.ஆ .1585
செய்தி :
சுபமஸ்து ஸ்வஸ்திஸ்ரீ சகாப்தம் என நட்சத்திர குறிப்புகளோடு இக்கல்வெட்டு ஆரம்பமாகிறது.கல்வெட்டின் இருபுறங்களிலும் 49 வரிகளில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.
திருவானைக்கா ஸ்ரீ மது ஸ்ரீ கண்டன் ஆகாசவாசி ஸ்ரீ சந்திரசேகர உடையார் அய்யன் அவர்களுக்கு மகதை மண்டலம் மலாடாகிய சனநாத வளநாட்டு நிவா(வஷிஷ்ட) நதிக்கு தென்கரை ஆற்றூர் கூற்றத்து ஆத்தூர் நாட்டை சேர்ந்த நாட்டவர்களுக்கு கிருஷ்ணப்ப நாயக்கர் அய்யனின் நினைவாக ஆறகளூர் திருகாமீசுரமுடைய பெரியம்மைக்கு தானபூர்வமாக நத்தகரை கிராமத்தை தாரை வார்த்து கொடுத்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது..
கல்வெட்டு பாடம் :
1.ஸ்பமஸ்து ஸ்வஸ்திஸ்ரீ சகா
2.ப்தம் 1507 இதன்மேல் செ
3.ல்லா நின்ற பார்திப ஸம்பத
4.ஸரத் மீள ஞாயிற்று அமர ப
5.ட்சத்து ஷஷ்டியும் சோம வார
6.மும் பெற்ற அநுஷ நட்ஷிரத்து
7.நாள் திருவாணைக்கா ஸ்ரீ மது
8.ஸ்ரீ கண்டன் ஆகாசவாசி ஸ்ரீ சந்
9.திர சேகர உடையார் அய்யன் அவ
10.ர்களுக்கு மகதை மண்டலம் மலா
11.டாகிய ஜனநாத வளநாட்டு ஆ
12.--- தென்கரை ஆற்றூர் கூற்ற
13.த்து ஆற்றூர் நாட்டு நாட்டவர்கள் கி
14.ராம பூதாந தம்பஸாசநம் குடுத்தபடி
15.ஞாவாற்றுக்கு வடக்கு தலைவாசலுக்கு
16.கிழக்கு நாவர் குறிச்சிக்கு தெற்கு பெரி
17.ஏரிக்கு மேற்கு நெத்தக்கரை கிராமம்
18.ஒன்றும் ஆறகளூர் திருக்காமீஸ்வர பெ
19.ரியம்மைச் சந்நதியிலே கிருட்டிணப்(ப)
20.நாயக்கர் அய்யனுக்கு புண்ணியமாக
21.ஹிர ளொதக தாறா பூறுவமாக
22.தாரைவாத்து குடுத்தப்படியாலே யி
23.ந்த கிராமத்து நான்கெல்லையில் உட்
24.பட்ட நஞ்சை புஞ்சை கரை முதலிய பு
25.வியும் நியா –அட்டபோகமாக சுவா
26.த-யங்களுக்கும் உட்பட்டு
3.2 மேலது நத்தக்கரை கல்வெட்டின் பின் பக்கம் அதே செய்தியின் தொடர்ச்சி
கல்வெட்டு பாடம் :
1..ஏற்க ஸாத்திய மாக த-காத
2.நியம விக்கிரயங்களுக்கும்
3.க்ரையமாக சர்வ மானியமாக
4.அனுபவித்துக் கொள்ளக்கட
5.வார்களாகவும் என்று ஸ்ரீ மது
6.ஸ்ரீகண்ட ஆகாசவாசி ஸ்ரீ
7.சந்திரசேகர குரு உடையார் அய்
8.யன் அவர்களுக்கு ஆற்றூர் நாட்டு
9.நாட்டவர்கள் குடுத்த கிராம
10.பூதாந தன்ம சாஸனம்
11.தான வாலஞ்யோம் ககியேதா
12.நா மேநு பாலநாய
13.தாநாத் ஸக வாகோதி
14.கைலாசநாதச் சுதம் பாதியும்
15.இந்த தன்மதுக்கு அகிதம்
16.பண்ணினவன் கெங்கைக்
17.கரையிலே காறம் பசு
18.வை கொன்ற தோஷத்தி
19.லே போகக் கடவனாகவும்
20.இப்படிக்கு நாட்டவர்கள் செய
21.ல் படிக்கு நாட்டு கணக்கு
22.ஆற்றூர் நாட்டு வெளாகா
23.மீசுவரன் எழுத்து.
20/112/2017 இன்றைய நிலையில் கல்வெட்டு

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

ஆறகழூர் கல்வெட்டுகள் பெரியேரி எலி கல்வெட்டு

பெரியேரி எலி கல்வெட்டு பின்புறம்

பெரியேரி கல்வெட்டு முன்புறம்

எலி

மைப்படி

இந்து நாளிதழ் செய்தி

ஆறகழூர் கல்வெட்டுகள் எண் 4
பெரியேரி எலிக்கல்வெட்டு

அண்ணே இந்த மருந்தை கொடுங்க..
இந்த மாத்திரை 3 வேளைக்கு சாப்பிட்ட அப்புறம் கொடுங்க..
சீக்கிரம் நல்லாயிடுமா..
டாக்டர் செக் பண்ணிதானே எழுதியிருக்கார். சாப்பிடுங்க சரியாயிடும். அப்புறம் உகளுக்கு தெரிஞ்சி எங்கியாவது கல்வெட்டு இருக்கா..?
கல்வெட்டா...? நம்ம பெரியேரி வண்ணான் குளம் பக்கத்துல ஒரு கல்லுல எழுதியிருக்கு வேணா போய் பாருங்க...
அது எவ்வளவு முக்கியமான கல்வெட்டுன்னு அப்ப எனக்கு தெரியல. இது வரை நான் பார்த்த கல்வெட்டுலே பெரிய கல்வெட்டு அதுதான்.இது எதுவுமே தெரியாம பெரியேரி கிளம்பி போனேன்.
வண்ணான் குளம் அருகே தேடினேன். கல்வெட்டு கிடைக்கல..கொஞ்சம் உள்ள போய் தேடலாமான்னு யோசிட்டு உள்ள போனேன். நமக்கு தெரிந்தவர் காடுதான் அது
அண்ணே இங்க கல்வெட்டு ஒண்ணு இருக்குன்னு சொன்னாங்களே அது எங்க இருக்கு..
அதுவா...பல தலை முறையா அது இங்கதான் இருக்குன்னு கூட்டிகிட்டு போனார். இந்த கல்லுக்கு அடியில் புதையல் இருக்குமுன்னு பேசிகிறாங்க..
இருக்குமா..?
அதெல்லாம் சும்மா கதைண்ண இது சூலக்கல்லு நிலம் தானம் செய்த எல்லைக்கல்லு...
விளைநிலத்தில் பயிர்களுக்கு நடுவே பல நூற்றாண்டுகளை கடந்து கம்பீரமா அந்த கல்வெட்டு நின்று கொண்டிருந்தது.
நாலு பக்கமும் எழுத்துக்கள் இருந்துச்சி..நாலு பக்கமும் எலி உருவம் இருந்தது ரொம்ப புதுசா இருந்துச்சி..வழக்கம் போல் படம் எடுத்திட்டு கிளம்பினேன். விழுப்புரம் வீரராகவன் ஐயா Mangai Ragavan ஆகியோருக்கு தகவல் தெரிவித்தேன். அவர்கள் மூலம் படி எடுக்கப்பட்டு கல்வெட்டு படிக்கப்பட்டது. எலி உருவம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு தமிழகத்தில் கண்டறியப்படுவது தமிழகத்தில் இதுவே முதன் முறையாகும். வாணகோவரையர்கள் ஆறகழூரை தலை நகராக கொண்டு மகதை நாட்டை ஆண்டு வந்தனர்.இவர்கள் மாவலி வம்சத்தில் வந்தவர்களாய் சொல்லிக்கொண்டனர் .அது தொடர்பான புராண கதை மூலம் பெருச்சாளியை குல சின்னமாக கொண்டனர். ஆனால் அதற்கு ஆதாரம் எங்கும் கிடைக்காமல் இருந்தது . இந்த கல்வெட்டு மூலம் அதற்கு சான்று கிடைத்துள்ளது. ஆய்வாளர் திரு பூங்குன்றன் ஐயா பண்டை தமிழகத்தில் யானை குலம் எலி குலம் என்ற இரு அரச மரபுகள் இருந்தன. இதில் யானை குலம் எலி குலத்தை போரில் வென்றது என குறிப்பிடுகிறார். அந்த எலி குலம் வாணர் குலமாக இருக்கலாம் என கருதுகிறார்.
2017 ஆவணத்தில் வெளியிடப்பட்டது
கல்வெட்டு வாசகம்
பெரியேரி எலி உருவம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு
சி.வீரராகவன்
வீ.மங்கயற்கரசி ராகவன் --விழுப்புரம்
ஆறகழூர்- பொன்.வெங்கடேசன்
இடம் : சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பெரியேரி கிராமத்தில் வண்ணான் குளம் என்ற குளத்துக்கு பின்புற வயலில் உள்ளது
காலம் : 12-13 ஆம் நூற்றாண்டு-பாண்டியன்
செய்தி :
இந்த கற்பலகையில் மொத்தம் இரண்டு தானங்களை குறிக்கும் செய்தி உள்ளது... இந்த கற்பலகையின் நான்கு புறங்களிலும் சூலங்கள் வெட்டப்பட்டுள்ளது.
முன்புறம் பூமாதேவியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.அதற்க்கு முன்பாக முக்காலியின் மீது இரு செல்வ குடங்கள் காட்டப்பட்டுள்ளது. இக்கல் பலகையின் ஏனைய மூன்று பக்கங்களிலும் எலிச்சின்னம்(இலச்சினை) வெட்டப்பட்டுள்ளது…தமிழகத்தில் எலி சின்னம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.பின்புறம் உள்ள இரண்டாவது கல்வெட்டின் ஊடே மூசிகா(பெருச்சாளி)வாகனம் வெட்டப்பட்டுள்ளது.
இக்கற்பலகையில் உள்ள இரு கல்வெட்டுக்களும் ஸ்வஸ்திஸ்ரீ அருளிச்செயல் என்று துவங்குகிறது. உயிர்நம்பி அழகியானவன் என்பவர் சொன்ன வண்ணம் செய்வார் பிள்ளையார் என்ற கோயிலுக்கு அமுதுபடிக்கும் மற்றும் தண்ணீர் பந்தல் அமைப்பதற்க்கும் தேவதான இறையிலியாக குலசேகர பெரியேரி யின் கீழ் காட்டை திருத்தி இரண்டு மா நன்செய் நிலமும் ,இதனால் வரும் அனைத்து வரி ஆதாயங்களும் ஆவணி மாதம் 11ஆம் நாள் முதல் இறையிலியாக தந்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
குலசேகரபாண்டியன் காலத்தில் இவனது பாண்டிய மண்டலத்தை சேர்ந்த முத்தூற் கூற்றத்து கப்பலூரை(உலகளந்த சோழநல்லூர்) சார்ந்த ஆதித்த கணபதி ஆள்வான் காடு வெட்டி என்பவர் இக்கல்வெட்டை பதிவு செய்துள்ளார்
கல்வெட்டு பாடம் :
1.ஸ்வஸ்திஸ்ரீ அருளிச்செயல் ஆறகளூர்
2.நிவா வாற்றுக்கு வடகரையில் பிள்ளையார் சொ
3. ன்ன வண்ண ஞ்செய்வார் கோயில் ஆண்டார் உ
4.பய யழகியானான் தவஸ உ-யிர் நம்பிக்கு
5.இப்பிள்ளையாற்கும் அமுதுபடிக்கும் இக் கொயி
6. ல் தான் வைக்கிந் தண்ணீர் பன்(த)ர்க்கும் தெவ
7. தாந இறையிலியாக பெரிய ஏரியான குலசெ
8.கரந் பெரியஏரியில் கடமைப்.பற்று நஞ் செய் நில
9.தில் ஒன்பதாவது தன் காணியில் காடுவெட்டித்தி
10. ருத்தின நிலத்திலே ரண்டு மா நிலம் அனைத்தாதாயங்
11.களும் உட்பட்ட பதினொன்றாவது ஆவணி மாதம் முத
12.ல் இறை இலியாகத் தந்தோம் இப்படிக்கு இ ஓலை
13.பிடிபாடாகக் கொண்டு தனக்கும் தன்வர்க்கத்தார்க்
14.கும் சந்திரராதித்த வரையும் காணியாக்கி கல்லிலு
15.ம் செம்பிலும் வெட்டி கொள்க இப்படிக்கு இவை
16.பாண்டி மண்டலத்து முத்தூற்க் கூற்றத்து
17.க் கப்பலூரான உலகளந்த சொழனல்லூர் ஆ
18.தித்தன் கணவதி ஆழ்வானான் காடுவெட்டி எ
19.ழுத்து உ
2.2 மேற்படி எலி கல்வெட்டின் பின்புறம்
செய்தி :
மேற்படி சொன்ன வண்ணம் செய்வார் பிள்ளையாருக்கு அமுதுபடிக்கும் தண்ணீர் பந்தலுக்கும் குலசேகர பெரிய ஏரியின் வாய்காலுக்கு வடக்கே இரண்டாயிரம் குழி நிலம் இறையிலியாக கொடுக்கப்படுல்ளது.இதையும் கணபதி ஆழ்வாளன் காடுவெட்டியால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்வெட்டு பாடம்:
பெரியேரி சூலக்கல் பின்புறம்(மிகுதியாய் சிதைந்த கல்வெட்டு)
------------------------------------------------
1.ஸ்வஸ்திஸ்ரீ அருளிச்செயல் ஆறகளூர் நிவா
2.வாற்று க்கு வடகரை யில் பிள்ளையார் சொன்ன
3.வண்ணெஞ் செய்(சிற்பம்) வா
4.ர்க் கொயிலில்(சிற்பம்) ஆண்டார் இ
5.ப்பட்ட யழகியானான் . .
6. (சிற்பம்) உயிர் நம்பிக்கும்
7.க்கு அமுதுபடிக்கும் இத்திரு வா . . . .
8.ணீர் வைக்கவும் குலசேகரன் பெரிய ஏரி
9. - வாய்காலுக்கு வடக்கும் இவ் . . .
10.ஏரி வடக்கு மேற்கும் தேவதான …இ
11க் காடு வெட்டிப் பயிற் செய்து . . நஞ்
12.செய் குழி யிரண்டாயிரத்துக்குக் குழி உ
13.ள்ளிட்ட அனைத்தாதாயமும் உட்பட . . . . சந்திராதித்
14.தவரை தேவதான இறையிலியா . . . . . இப்படி
15.க்கு கல்லிலுஞ் செம்பிலும் வெட். . . .
16.இப்படிக்கு இவை பாண்டிய மண்டலத்து முத்தூற்று
17.கூற்றத்துக் கப்பலூரான உலகளந்த சோழ னல்லூர்
18.ஆதித்தன் கணவதி ஆழ்வாளன் காடுவெட்டி எழுத்து.