வெள்ளி, 21 ஜூலை, 2017

சேலம் வாழப்பாடி பெரியகுட்டி மடுவு நடுகற்கள்

பெரியகுட்டி மடுவு -11ஆம் நூற்றாண்டு சோழர்கால நடுகல் செய்தி.

சுமார் 3 மாதங்களுக்கு முன் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பெருமாள் சார் புழுதிக்குட்டை பகுதிக்கு ஆய்வு செய்யலாம் என அழைத்தார். சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த விழுப்புரம் வீரராகவன் அய்யா,ஆறகழூர் பொன்.வெங்கடேசன், சுகவன முருகன் சார்
பெருமாள் சார், கலைச்செல்வன் ஆசிரியர், மருத்துவர் பொன்னம்பலம்,சீனிவாசன், ஜீவநாராயணன், பெரியார் மன்னன், தீபக் ஆதி, வீரமணி வீராசாமி அய்யா ஆகியோர் அடங்கிய குழு புழுதிக்குட்டை பகுதியில் இரண்டு நடுகற்களை ஆய்வு செய்து படி எடுத்தோம்..
மேற்கொண்டு தேடலை தொடர கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம் இங்கு நடுகல் இருக்கா, கல்வெட்டு இருக்கா என விசாரித்துக்கொண்டே மலை மேல் பைக்கில் ஏறுக்கொண்டே இருந்தோம். நீண்ட விசாரிப்பகளுக்கு பின் பெரிய குட்டி மடுவு என்ற இடத்தில் 2 கல்லு ரொம்ப நாளா நின்னுகிட்டு இருக்கு என தகவல் சொன்னார்..உற்சாகம் பீறிட அந்த இடத்தை நோக்கி எங்களின் பைக் சீறி பாய்ந்து சென்றது..
கிட்ட தட்ட அந்தி சாயும் நேரம் .சூரியன் மெல்ல மறைய துவங்கியிருந்தான் .இருட்டுவதற்க்குள் போகவேண்டுமே என பரபரப்புடன் பயணித்தோம்...அந்த இடத்துக்கு சென்று அங்கும் பலருடன் விசாரித்து ஒரு வழியாய் இடம் இருக்கும் தெரிந்தது. சாலையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தோம்...வழியில் ஒரு ஓடை அதையும் கடந்து சரிவான பாதையின் மேல் ஏறி சென்றோம்..மூச்சு வாங்கியது....தூரத்தில் 2 நடுகற்கள் தெரிந்தது. களைப்பெல்லாம் பறந்தது. பறந்தோடினோம்...
அங்கு தன் உடலில் 5 அம்புகளை வாங்கிய வீரனும், அருகே மற்றொரு வீரனின் நடுகல்லும் இருந்தது..பரபரவென இயங்கினோம்..மைப்படி எடுத்தோம்..எழுத்துக்கள் மிகுந்து தேய்ந்தும் சிதிலமடைந்தும் இருந்ததாலும் ,இரவாகிவிட்டதாலும் திரும்பி விட்டோம்...பின்னர் 3 மாதங்கள் முயற்சித்தும் எழுத்துக்கள் மோசமாக இருந்ததால் திரும்ப சென்று படிக்கலாம் என முடிவு செய்தோம்
இம்முறை தமிழக தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற இணை இயக்குனர் பூங்குன்றன் அய்யா , ஆய்வாளர்கள் மங்கயற்கரசி மேடம், கோவை சுந்தரம் அய்யா ஆகியோர் இணைந்தனர்...அப்போது படித்து அறியப்பட்ட செய்தி இன்றைய
காலைக்கதிர், தினமணி, தினத்தந்தி, தினமலர், நேற்றைய மாலைமுரசு, மாலை மலர் ஆகிய நாளிதழ்களில் செய்தி வந்துள்ளது.
செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனங்களுக்கும், செய்தியாளர்கள் திரு காலைக்கதிர் தமிழ்செல்வன் சார், தினமணி, மாலைமலர் பெரியார் மன்னன் சார், தினத்தந்தி வேலுமணி சார், தினமலர் ஆத்தூர் கிருஷ்ணன் சார் ஆகியோருக்கு சேலம் வரலாற்று ஆய்வு மையம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

நடுகல் செய்தி:

900 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரண்டு சோழர்கால நடுகற்கள் கண்டுபிடிப்பு
சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் புழுதிக்குட்டை ஊராட்சியில் கல்வராயன் மலையில் உள்ள பெரியகுட்டி மடுவு என்ற கிராமத்தில் 900 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரண்டு நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த தமிழக தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற இணை இயக்குனர் பூங்குன்றன், வரலாற்று ஆய்வாளர்கள் , விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், பெருமாள், மருத்துவர் பொன்னம்பலம் , மங்கையற்கரசி,கோவை சுந்தரம், கலைச்செல்வன் சுகவனமுருகன், ,சீனிவாசன், ஜீவநாராயணன், பெரியார்மன்னன் ஆகியோர் அடங்கிய குழு பெரியகுட்டிமடுவு பகுதியில் கள ஆய்வை மேற்கொண்டனர். அப்போது ஏரிக்காடு பகுதியில் பொன்னுசாமி என்பவரின் நிலத்தில் 11ஆம் நூற்றாண்டு மற்றும் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இரண்டு சோழர்கால நடுகற்கள் கண்டறியப்பட்டன. 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல்லில் எழுத்துக்கள் உள்ளன. 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல்லில் 
எழுத்துக்கள் காணப்படவில்லை.

11ஆம் நூற்றாண்டு நடுகல்

இந்த நடுகல்லானது 2 அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் உள்ளது. திரிபங்க நிலையில் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. தலை கொண்டை நேராக உள்ளது. இவன் உடலில் கழுத்து ,மார்பு, வயிறு, தொடை, கணுக்காலுக்கு சற்று மேலே என் 5 இடங்களில் அம்பு பாய்ந்துள்ளதை துல்லியமாக சிற்பத்தில் காட்டியுள்ளனர். இவன் வீரம் மிக்கவனாகவும் முக்கிய தளபதியாகவும் இருந்திருக்கலாம். ஒரே நேரத்தில் பலர் இவனை மையப்படுத்தி சூழ்ந்து தாக்கியதால் பல இடங்களில் அம்பு பாய்ந்துள்ளது. இவன் வலது கையில் வாளும் இடது கையில் வில்லுடன் கூடிய அம்பும் காட்டப்பட்டுள்ளது. அழகான இடை ஆடையும் கழுத்தணியும் காட்டப்பட்டுள்ளது.. இந்த நடுகல்லில் 27 வரிகளில் எழுத்துக்கள் உள்ளன. அதில் 3 வரிகள் படிக்க முடியாதபடி சிதைந்துள்ளன.

கல்வெட்டு சொல்லும் செய்தி

மலையகுல சந்திராதித்த பேரரையன் என்ற தலைவன் காலத்தில் ஒரு வீரன் தன்னுடைய பகுதியை பாதுகாக்க எதிரிகளுடன் போரிட்டு இறந்த செய்தியை இந்த கல்வெட்டு கூறுகிறது. இதில் வரும் மலையகுலம் என்பது சங்க காலம் முதலே திருக்கோயிலூரை தலைநகராக கொண்டு ஆண்ட மலையமான்களை குறிப்பதாகும். சோழர்கள் காலத்தில் இவர்கள் மலையகுல ராயர்கள் என்று அழைக்கப்பட்டனர். இக்கல்வெட்டில் வரும் சந்திராதித்த பேரரையன் என்ற சொல் மிக முக்கியமான ஒன்றாகும். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சூரிய குலம், சந்திர குலம் என்ற இரண்டு பிரிவு அரசர்கள் இருந்தார்கள். சில ஊர் கல்வெட்டுக்களில் மட்டுமே இந்த சந்திரகுலம் என்ற பெயர் வருகிறது. இக்கல்வெட்டில் வரும் சந்திராதித்த பேரரையன் என்பது சூரிய குலத்தையும், சந்திர குலத்தையும் இணைத்து ஒரு புதிய குலமாக உருவாகி இருக்கலாம். அதற்கு சான்றான இந்த கல்வெட்டு தமிழக வரலாற்றுக்கு முக்கியமான ஒன்றாகும்.
இந்த கல்வெட்டில் ஈச்சம்பாடி, பரித்தியூர் என்ற ஊர்களின் பெயர்கள் வருகிறது. இந்த ஊர்கள் இப்போதும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரூர் வட்டத்தில் இதே பெயரில் வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடதக்கது. இந்த ஊர்களின் வழியாக மாவூர் என்ற ஊர்வரை சென்று இவர்கள் போரிட்டுள்ளனர். இப்போரில் கணியன் என்பவனின் மகன் சேனான் என்ற வீரன் இறந்துள்ளான். அவனுக்காக எடுக்கப்பட்ட நடுகல்லே இதுவாகும்.
12 ஆம் நூற்றாண்டு நடுகல்
சேனான் என்பவனுக்கு எடுக்கப்பட்ட நடுகல்லுக்கு அருகே மற்றொரு நடுகல்லும் உள்ளது. இது 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்கால நடுகல்லாகும். இதில் எழுத்துக்கள் ஏதும் காணப்படவில்லை. வீரனின் தலையின் வலது புறம் கொண்டை காட்டப்பட்டுள்ளது. வலது கையில் குறுவாள் உள்ளது. இடது கையில் வில் அம்புடன் இணைந்து உள்ளது. போருக்கு தயாராக செல்லும் நிலையில் வீரன் காட்டப்பட்டுள்ளான். காதணிகளும், இடை ஆடையும் காட்டப்பட்டுள்ளது. இடுப்பில் ஒர் அம்பு பாய்ந்த நிலையில் உள்ளது. இடுப்பின் ஒருபுறம் குறுவாள் காட்டப்பட்டுள்ளது. சமபங்க நிலையில் வீரன் உள்ளான். இப்பகுதியில் நடந்த போரில் இவன் எதிரிகளை கொன்று இவனும் வீர மரணம் அடைந்துள்ளான். இவனுக்காக வைக்கப்பட்ட நடுகல் இதுவாகும்.
இப்பகுதியில் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டால் இன்னும் பல வரலாற்று செய்திகள் கிடைக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்..
அலைபேசி 9047514844

http://m.dailyhunt.in/news/india/tamil/dinamani-epaper-dinamani/vazhappadi+aruke+900+aandukalukku+murbatta+sozharkala+nadukarkal+selam+mavatta+varalarru+aayvu+maiyak+kuzhu+kandarinthathu-newsid-70626486?ss=wsp&s=a
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2017/jul/21/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-900-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-2741584.html


http://www.dinamalar.com/district_detail.asp?id=1816881










செவ்வாய், 11 ஜூலை, 2017

தியாகனூர் கல்வெட்டுக்கள்





தலைவாசல் அருகே 5 புதிய கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு

சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன்.மருத்துவர் பொன்னம்பலம்,கலைச்செல்வன்,பெருமாள்,சீனிவாசன்,ஜீவநாராயணன்,பெரியார் மன்னன் ஆகியோர் அடங்கிய குழு சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தியாகனூரில் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது அங்குள்ள மலை மண்டல பெருமாள் கோயிலில் 5 புதிய கல்வெட்டுக்களை கண்டுபிடித்தனர். இவை 13 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்டத்தை சேர்ந்ததாகும்.
13 ஆம் நூற்றாண்டில் ஆறகழூரின் ஒரு பகுதியாகவே தியாகனூர் இருந்துள்ளது. 15 ஆம் நூற்றாண்டுக்கு பின்னரே தியாகனூர் என பெயர் பெற்றது. இங்குள்ள கல்வெட்டுக்கள் இக்கோயிலை ஆறகழூர் மலைமண்டல பெருமாள் கோயில் என்றே குறிப்பிடுகின்றன. 12 ஆம் நூற்றாண்டில் ஆறகழூரை தலை நகராக கொண்டு வாணகோவரையர்கள் மகதை மண்டலத்தை ஆட்சி செய்துள்ளனர். இவர்கள் காலத்தில் செய்யப்பட்ட தமிழகத்திலே மிக்கப்பெரிய இரண்டு புத்தர் சிலைகள் தியாகனூரில் உள்ளன.
கல்வெட்டு செய்தி;
இக்கோயிலின் வடக்கு சுவரில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வாணகோவரையரின் கல்வெட்டு காணப்படுகிறது. ஆறகழூர் மலைமண்டல பெருமாள் ஆராதனைக்கும், திருப்பணிக்கும், முதலீடாக மகதை மண்டலத்தை சேர்ந்த தொழுதூரில் ஆயிரம் குழி நன்செய் நிலம் தானமாக தரப்பட்டுள்ளது. இந்நிலத்தை முதலீடாக கொண்டு அந்நிலங்களில் வரும் விளைச்சல், பொன் வரி, நிலவரி உட்பட அனைத்து ஆதாயங்களையும் கொண்டு மலை மண்டல பெருமாளுக்கு பூசையும் திருப்பணியும் செய்ய வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த செய்தி கல்வெட்டாகவும் செப்பு பட்டயமாகவும் வெளியிடவும் வாணகோவரையன் ஆணை பிறப்பித்துள்ளார்.
இக்கோயிலின் வடக்கு அர்த்தமண்டபம் கருவறை நாளம் முதல் அதிட்டானம் வரை 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழமன்னன் மூன்றாம் இராசேந்திரனின் கல்வெட்டு காணப்படுகிறது. இதில் உள்ள செய்தி என்னவென்றால் வாணகோவரையனின் ஆணைப்படி ஆத்தூர் பழம் பற்றில் இருந்த கல்பூண்டி என்ற ஊர் ஆறகழூர் மலைமண்டல பெருமாள் கோயிலுக்கு தானமாக விட்ட ஊராக இருந்துள்ளது. அப்போது அது நடைமுறையில் இல்லாத காரணத்தால் மீண்டும் கல்பூண்டி என்ற ஊரின் நான்கு எல்லைகளையும் அளந்து அங்குள்ள நன்செய் ,புன் செய் நிலங்களை மீண்டும் மலைமண்டல பெருமாள் கோயிலுக்கு தானமாக கொடுத்ததை இந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது.குடி நீங்கா திருவிடையாட்டமாக இதை இராமசந்திர தேவர், மாகாயன் பேராயன்,திருவேங்கடன் ஆகிய மூவர் எழுதிக்கொடுத்துள்ளனர். இவர்களில் திருவேங்கடன் பரம்பரையினர் இன்றும் ஆறகழூரில் வசித்து வருகின்றனர்.
இக்கோயிலின் கருவறை மேற்கு அதிட்டானத்தில் 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு காணப்படுகிறது. அதில் ஆறகழூர் மலைமண்டல பெருமாள் கோயிலுக்கும் அங்கு பணிபுரியும் நம்பிமார்க்கும், வைஷ்ணவ கண்காணிகளுக்கும் கல்லக்குறிச்சி வட்டத்தில் உள்ள பிள்ளை ஏந்தல் என்ற இடத்தில் ஆயிரம் குழி நன்செய் நிலம் திருநாமத்து காணியாக தானமாக தரப்பட்டுள்ளது. இச்செய்தி கல்வெட்டாகவும், செப்பேடாகவும் வெட்டப்பட்டதாய் இந்த கல்வெட்டு தெரிவிக்கிறது.
இக்கோயிலின் தென்புறம் உள்ள சுவரில் கி.பி. 1469 ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று காண கிடைக்கிறது. விசய நகரபேரரசு காலத்தில் நரசிங்கராய உடையார், ஈஸ்வர நாயனார் என்பவவர்களால் இந்த கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. 7 வரிகளில் கல்வெட்டு உள்ளது.
ஆத்தூர் கூற்றம் ஆறகழூர் மலைமண்டலபெருமாள் கோயிலை புதுப்பித்து தியாகசமுத்திரம் என்ற ஏரியை வெட்டி ஆறகழூரில் இருந்த கைக்கோளர்களையும் ,தேவரடியார்களையும் இங்கு குடி அமர்த்தி அவர்களுக்கு கல்லக்குறிச்சி பற்று ராயப்ப நல்லூரில் நன்செய்,புன்செய் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம்,இருஞ்சிபுரம்,தேவதானபுரம், திருக்கோயிலூர் போன்ற பகுதிகளில் இருந்து கைக்கோளர்களும், தேவரடியார்களும் வரவழைக்கப்பட்டு இங்கு குடி அமர்த்தப்பட்டனர்.அவர்களுக்கு நிலங்களும் தறிகளும் அளிக்கப்பட்டன. கைக்கோளர்கள் இக்கோயிலுக்கு திருமெய்காவலர்களாக நியமிக்கப்பட்டனர்.இந்த தர்மத்தை அழிப்பவர்கள் கங்கை கரையிலே காராம் பசுவை கொன்ற பாவத்தையும்,தன் தாய் தந்தையை தன் கையாலே கொன்ற பாவத்தையும் அடைவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தியாகன நாயக்கர் என்பவர் இந்த பகுதிக்கு பொறுப்பாளராக இருந்துள்ளார், ஏரியை வெட்டி, கோயிலை புதுப்பித்து புதிய குடிமக்களையும் இங்கு குடி அமர்த்தியதால் அவர் பெயரில் தியாகனூர் என்று ஊர் பெயர் உருவாகியிருக்க கூடும்.
இக்கோயிலின் கருவறை மேற்கு விருத்த குமுதத்தில் கி.பி. 1503 ஆம் ஆண்டை சேர்ந்த விஜயநகர பேரரசு கால கல்வெட்டு காணப்படுகிறது.
ஆற்றூர் கூற்றம் தியாகசமுத்திரம் மலைமண்டல பெருமாள் கோயிலில் பணிபுரிந்த வென்று மாலையிட்ட பெருமான் திருமலை அப்பன், வேங்கடத்துறைவார் பூதன் சறுக்காயர், ஆழ்வார் பூதான கரியவர், என்ற மூன்று பேருக்கு கல்லக்குறிச்சி வட்டம் நாரியப்பனூருக்கு மேற்கே ஏரியின் கீழ் நன்செய் நிலம் 1500 குழி நிலம் சர்வமானிய இறையிலியாக கொடுத்ததை இந்த கல்வெட்டு தெரிவிக்கிறது.
இக்கோயிலின் நுழைவாயிலின் அருகே 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்செட்டு ஒன்று பலகை கல்லில் நான்கு புறமும் வெட்டப்பட்டுள்ளது.
மகதை மண்டலத்து ஆற்றூர் கூற்றத்தில் உள்ள பெரியேரி என்னும் ஊரில் பெரியபெருமான் என்னும் பெருமாள் கோயிலையும் மடையையும் கட்டுவித்து அக்கோயிலுக்கு பூசை செய்யவும், பூஜைக்கு எண்ணெய் மற்றும் இசைக்கருவிகள் இசைக்கவும்,சங்கு,சேமக்கலம்,சேகண்டி இசைப்பவர்களுக்கும் ஏரிக்கு அருகே நிலதானம் செய்ததை இந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது. சூரியன் சந்திரன் உள்ளவரை இந்த தானத்தை காப்பாற்ற வேண்டும் எனவும், இந்த தானத்துக்கு அழிவு செய்பவர்கள் பாவத்தில் போவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செய்தி கல்வெட்டாகவும் செப்பேடாகவும் பதிவு செய்யப்பட்டதாய் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது இந்தபகுதியில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் சரித்திர சான்றுகள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் கூறினார்கள்
cell no-9047514844,




http://m.tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-5-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/article9757164.ece

http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/DINAMALAR/2017/07/10/ArticleHtmls/10072017011008.shtml?Mode=1


http://www.dinamalar.com/news_detail.asp?id=1808430