புதன், 13 டிசம்பர், 2017

Aragalur ஆறகழூர் கல்வெட்டுக்கள்


ஆறகழூர் கல்வெட்டு எண் 2



ஆறகழூர் கல்வெட்டுக்கள்
எண் 2 - தன்மதாவள கல்வெட்டு

வழக்கம் போல் காலை 7 மணி ஆறகழூர் டீக்கடையில் சூடா ஒரு வடை சாப்பிட்டுவிட்டு டீ குடித்து கொண்டிருந்தேன். உள்ளூர் அரசியல் தொடங்கி உலக அரசியல் வரை ஓடிக்கொண்டிருந்தது. காரசாரமான விவாதம் பண்ணிட்டு இருந்தாங்க. அப்ப ஊர்காரர் ஒருவர்..
என்னப்பா நீ கல்லு கல்லா தேடிகிட்டு இருக்கன்னு பேசிகிறாங்க....
ஆமாண்ணே...நம்ம ஊரு வரலாற்றை தெரிஞ்சிக்க கல்வெட்டுகளை தேடிகிட்டு இருக்கேன்...
கல்வெட்டுன்னா...?
கல்லுல எழுதிருப்பாங்கண்ணே.....
அதுதான் நம்ம செவன் கோயிலுல நிறைய எழுதியிருக்கே....
அதெல்லாம் படிச்சிட்டாங்கண்ணே...அதை தவிர ஊருல வாய்க்க வரப்புல ஏதாவது இருக்கான்னு தேடிகிட்டு இருக்கேன்..
அட...ஆமாம்..எங்க வயலுக்கு பக்கத்துல வரப்புல ஒரு கல்லு கெடக்கு..அதிலியும் ஏதோ எழுத்து இருக்குற மாதிரிதான் தோணுது..
ஆஹா....சூப்பருண்ணு..உடனே அதை நான் பாக்கணுமே...!!!!
இன்னிக்கி கொஞ்சம் வேலையிருக்கு நாளைக்கு வா காட்டுறேன்...
அந்த வயலில் 5 வருசம் முன்னாடி உழவு ஓட்டும்போது டிராக்டர் பொதுக்குன்னு உள்ள இறங்கிடுச்சி.. அந்த இடத்தில் கிணறு இருந்திருக்கும் போல...அதுவுமில்லாம நிறைய பானை ஓடெல்லாம் கிடக்கு...இந்த இடத்தில் தலையில் கூடை மாதிரி (முக்குடை) வச்சிகிட்டு ஒரு ஆணும் பொண்ணும் நிண்ணாங்க..அதை தோட்டி சிலை..தோட்டிச்சி சிலை(சமண தீர்த்தங்கரரும் அம்பிகா யட்சியும்) ந்னு சொல்லுவாங்க.. 30 வருசத்துக்கு முன்னாடி அது காணாபோச்சி..
இனம் புரியாத சந்தோசம்..அதை கொண்டாட மொறு மொறுன்னு இன்னும் 2 வடையை வயித்துக்குள் அனுப்பிட்டு..பொழப்பை பாத்தேன். ராத்திரியெல்லாம் தூக்கமே வரல...அந்த கல்வெட்டுல என்ன இருக்கும். இந்த இடத்திலதானே நாம ஜினாலய கல்வெட்டு கண்டுபிடிச்சோம்..எப்படா விடியுமுன்னு அப்படியே தூங்கிப்போனேன்...
கோழி கூவுறத்துக்கு முன்னாடியே எந்திறிச்சி வயக்காட்டு பக்கம் ஓடினேன். சுத்தி சுத்தி தேடினேன்..கல்வெட்டு கண்ணுல சிக்கல . ஒரு மணி நேர தேடலுக்கு பின் ஒரு வரப்பில் மண் மூடிய நிலையில் ஒரு கல்லு தெரிஞ்சிச்சி..ஓடிப்போய்..அந்த மண்ணை எல்லாம் தொடச்சிட்டு பாத்தா..எழுத்துக்கள்..
சந்தோசத்துல தலைகால் புரியல..அப்ப மைதா மாவு டெக்னிக் எல்லாம் வரல..பக்கத்தில் இருந்த செடி கொடியெல்லாம் பறிச்சேன்..கல்வெட்டை சுத்தமா மண்ணெல்லாம் அகற்றி தொடச்சிட்டு இலை தழை எல்லாம் வச்சி தேச்சேன்..ஓரளவு எழுத்து தெரிந்தது. அதை அப்படியே செல்லிலும் கேமிராவிலும் கிளிக்கினேன்..
புதியவர்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் பேசி..துறையில் ஈடுபாடு கொள்ள வைக்கும் பேராசிரியர் ஐயா Rajagopal Subbiahஅவர்களுக்கு அனுப்பி வைத்தேன்.. ஐயா அதை படித்துக்கொடுத்து பொருளும் சொன்னார்..2016 ஆவணத்திலும் பதிவு செய்தார்
இந்த கல்வெட்டின் இறுதியில் தன்ம தாவளம் என்ற சொல் வருகிறது. தாவளம் என்பது வணிகம் செய்யும் இடத்தை குறிப்பதாகும். அதியமான் பெருவழி கல்வெட்டில் நாவற்தாவளம் என்று வருகிறது..அந்த நாவற்தாவளம் எங்கிருக்கிறது என்பதை இன்னும் அறிய முடியவில்லை.இந்த ஆறகழூர் கல்வெட்டில் வரும் தன்மதாவளம் என்ன..? எது என்பது நேற்று வரை தெரியவில்லை இன்று திரு KPichaipillaiஅவர்கள் திருவண்ணாமலையில் இருந்த ஒரு செப்பேட்டு செய்தியை பகிர்ந்திருந்தார் அதில்

சாலிவாகன சகாப்தம் வருஷம் 1613 மேல் பிரசோத்பத்தி வரு.தைமாதம் 3 தேதிசுபமஸ்து ஸ்ரீமது சகலகுண சம்பண்ணரான. அயோத்தி மதுரா மாயா காசி காஞ்சு அவந்திகாபுரி தவராள்பதி சப்தநகரப் பிரதாபரான கிஸகிந்த மலைக்குடையவரான. பம்பாநதிக்கு அதிபரான வைகுண்ட வளநாதரான. மாருதப் புரவிக்குடைய வரான கமலாகாந்தி கெய்ட் தேருக்குடையவரான. கெருடக்கொடிக்கு உடையவரான. பஞ்ச காவியத் தலைவரான எற்றா கைக்கு மாற்றாடவரான. தன்மதா வளரான. மணலூர்ப்பேட்டை பச்சையப்ப செட்டியாரய்யன் முதலான ஆயிரவர் நகரத்தாரும் திருவண்ணாமலை அருணாசலேசுவர. சுவாமியாருக்கு உச்சிக்கால கட்டளைக்கும் மடத்து தர்மத்துக்கும் மகமை உண்டுபண்ணி அம்பத்தாறு தேசத்து நகரத்தாறும் சித்திலிங்கப் பண்டாரத்தின் கையில் தாம்பிர சாசனம் எழுதிக் குடுத்த விபரம்.
என்று வருவதில் தன்மதா வளரான. மணலூர்ப்பேட்டை பச்சையப்ப செட்டியாரய்யன் முதலான ஆயிரவர் நகரத்தாரும் என்பவர்கள்தான் ஆறகழூர் கல்வெட்டில் தன்மதாவள தந்மம் என குறிப்பிடபட்டிருக்கலாம் என யூகிக்க முடிகிறது..
கல்வெட்டு வாசகம்
ஆறகழூர் கல்வெட்டுக்கள்
1.2 தன்ம தாவளம் கல்வெட்டு
ஆறகழூர் பொன்.வெங்கடேசன்
பேராசிரியர் சு.இராசகோபால் , சென்னை
இடம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் கோட்டைக்கரைக்கு அருகே இராமன் என்பவரின் வயலில் உள்ள கல்வெட்டு
காலம்: 13-14 ஆம் நூற்றாண்டு
செய்தி : வாணியர் செலுத்த வேண்டிய வரிகளுக்கு விலக்களித்து அவ்வரி வருவாயை உலகங்காத்த சோளீஸ்வரர் கோயில் பூசை மற்றும் திருப்பணிகளுக்கு முதலாக(உடல்) வைத்துக்கொள்ள கையெழுத்திட்டு களப்பாளராயர் கொடுத்த ஆணை(திருமுகம்) கல்வெட்டாக வெட்டப்பட்டுள்ளது. தன்மதாவளம் என்ற சொல் வருவது சிறப்பான செய்தி.
ஆறகழூர் ஒரு வணிக நகரமாக இருந்ததை இக்கல்வெட்டு உறுதி செய்கிறது.

கல்வெட்டு பாடம்:
1.ஸ்வஸ்திஸ்ரீ களப்
2.பாளராயனும் புரவ
3.ரியாருக்கு செய்யும்படி
4.வடக்கில் வாயிலில் உலக
5.ங்காத்த சோளீச்0வரமு
ஆறகழூர் தன்மதாவள கல்வெட்டை சுத்தம் செய்தபோது

தன்மதாவள கல்வெட்டுடன் நான்

தன்மதாவள கல்வெட்டு ஆறகழூர்

ஆவணம் 2016

6.டைய னாயனார்கு வா
7.ணியர்கு முந்பு நம் ஒன்
8.பதாவது தை மாதம் மு
9.தல் இ நாயனார்கு பூ
10.ஜைக்குந் திருப்பணி
11.க்குமுடலாகக் குடுத்
12.தோம் என்று திருவெழு
13.த்துச் சாத்தின திருமுகப்
14.படிக்கு கல்வெட்டு
15. இது தன்ம தாவ
16.ளந் தந்மம்

#ஆறகழூர்பொன்.வெங்கடேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக