வெள்ளி, 14 டிசம்பர், 2018

தேவியாக்குறிச்சி நடுகற்கள்- சேலம் ஆன்லைன் செய்தி

தேவியாக்குறிச்சி நடுகற்கள் சேலம் ஆன்லைன் செய்தி
Salem:
December 3
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தேவியாக்குறிச்சியில் இரண்டு நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,மருத்துவர் பொன்னம்பலம்,ஜீவநாராயணன், கவிஞர் மன்னன் ஆகியோர் ஆத்தூர் அரசினர் கலைக்கல்லூரியை சேர்ந்த மாணவர் செல்வகுமார்,மற்றும் மாணவ மாணவியர் கொடுத்த தகவலின் பேரில் தேவியாக்குறிச்சி பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
அப்போது தெற்குமேடு என்ற இடத்தில் ராமசாமி என்பவர் நிலம் அருகே ஏரிவாய்கால் கரையில் இரு நடுகற்கள் கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த இரு நடுகற்களும் அருகருகே காணப்படுகின்றன.
இடது பக்கம் உள்ள நடுகல்லானது 75 செ.மீ.உயரமும்,55 செ.மீ அகலமும், 12 செ.மீ தடிமனும் உள்ள ஒரு பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது. இடது புறம் சாய்ந்த கொண்டையானது அள்ளி முடியப்பட்டுள்ளது.கொண்டையின் முடிச்சு அருகே பறக்கும் நிலையில் உள்ளது. காதுகளில் காதணி,கழுத்தில் சரபளி,சவடி,போன்ற ஆபரணங்களும், மார்பில் சன்னவீரம் எனப்படும் வீரச்சங்கிலியும் காணப்படுகிறது. சன்ன வீரம் என்பது போருக்கு செல்லும் வீரர்கள் அணிவதாகும். முதுகில் அம்புக்கூட்டில் நான்கு அம்புகள் உள்ளன. வீரனின் இடது கை நீண்ட வில்லினை பற்றியுள்ளது. வலது கையில் அம்பு உள்ளது. இடைக்கட்டு மூன்று வரிகளில் உள்ளது. அரையாடையின் முடிச்சு நீண்டு வில் வரை உள்ளது. வீரனின் வலது பக்க இடுப்பில் குறுவாள் உள்ளது. பாதமானது பூமிக்கடியில் புதைந்துள்ளது. மிகவும் அலங்காரமான நிலையில் வீரக்கல் காட்டப்பட்டுள்ளது.
இது இந்தப்பகுதியில் நடந்த போரின்போது இறந்த வீரனுக்கு வைக்கப்பட்ட வீரக்கல்லாகும். 12 ஆம் நூற்றாண்டில் வாணகோவரையர் என்பவர்கள் ஆறகழூரை தலைநகராக கொண்டு மகதை நாட்டை ஆண்டு வந்தனர். தேவியாக்குறிச்சி என்ற இந்த ஊர் தேவியர் குறிச்சி என்ற பெயரில் ஆறகழூரின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.
ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோயிலில் பணிபுரிந்த தேவரடியார்களுக்கு தேவியர் குறிச்சியில் நிலம் தானமாக தரப்பட்டுள்ளது. வாணகோவரையர்கள் ஆட்சியின் போது ஹெய்சாளர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசு போன்றோருடன் போரில் ஈடுபட்டனர். அந்த போர்களில் ஈடுபட்டு இறந்த ஒரு வீரன் நினைவாக வைக்கப்பட்டுள்ள வீரக்கல் இதுவாகும். இதன் காலம் 14 ஆம் நூற்றாண்டு என கருதலாம். இந்த வீரனின் வலது புறம் மற்றொரு நடுகல் காணப்படுகிறது. இது 76 செ.மீ உயரமும், 58 செ.மீ அகலமும், 7 செ.மீ தடிமனும் உள்ள பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது.
இது 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம். அதிக அலங்காரம் இல்லாமல் எளிமையாக வீரக்கல் காட்டப்பட்டுள்ளது. நேரான கொண்டை, கழுத்தில் சவடி,சரபளி, காதுகளில் அணிகலன்கள் ,மார்பில் சன்னவீரத்துடன் காணப்படுகிறது. இடது கையில் நீண்ட வில்,வலது கையில் அம்பு,முதுகில் உள்ள அம்புக்கூட்டில் நான்கு அம்புடன் காட்டப்பட்டுள்ளது. அரையாடை, ஆடை முடிச்சு உள்ளது. இடுப்புக்கு கீழ் முழங்கால் வரை வலது கால் மேற்புறம் சிதைந்துள்ளது. இடது பாதமானது இடப்பக்கம் திரும்பி போருக்கு செல்லும் நிலையில் உள்ளது. மகதை நாட்டை ஆண்ட வாணகோவரையர்கள் சார்பாக போரிட்டு, போரில் வீர மரணம் அடைந்த வீரன் நினைவாக வைக்கப்பட்டுள்ள வீரக்கல் இதுவாகும்.
இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் பல வரலாற்று சான்றுகள் கிடைக்கலாம் என சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர்.

தேவியாக்குறிச்சி நடுகற்கள்- ஆறகழூர் பொன்.வெங்கடேசன்

தேவியாக்குறிச்சி நடுகற்கள்- ஆறகழூர் பொன்.வெங்கடேசன்

நடுகல் இறந்தவர்களின் நினைவாக நடப்படும் கற்கள் நினைவுக் கற்கள் எனப்படுகின்றன. இவற்றை "வீரக் கற்கள்" என்றும் கூறுவர். இறந்தவர் அனைவருக்கும் நடுகற்கள் நடப்படலாம் என்றாலும், போரில் வீரமரணம் அடைந்தவர்களுடைய நடுகற்களுக்கே பெருமதிப்புக் கொடுக்கப்பட்டு வந்தது. வீரர்கள் நினைவாக அமைக்கப்படும் நடுகற்களை பண்டைக்கால மக்கள் வணங்கி வந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தேவியாக்குறிச்சியில் இந்தவகையான நடுகற்கள் இரண்டு தற்போது கண்டறியப்பட்டுள்ளன. ஆத்தூர் அரசினர் கலைக்கல்லூரியை சேர்ந்த மாணவர் செல்வகுமார்,மற்றும் மாணவ மாணவியர் கொடுத்த தகவலின் பேரில் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,மருத்துவர் பொன்னம்பலம்,ஜீவநாராயணன், கவிஞர் மன்னன் ஆகியோர் தேவியாக்குறிச்சி பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சியில் தெற்குமேடு என்ற இடத்தில் ராமசாமி என்பவர் நிலம் அருகே ஏரிவாய்கால் கரையில் இரு நடுகற்கள் கண்டறியப்பட்டு அவை ஆய்வு செய்யப்பட்டன. அருகருகே காணப்படும் இந்த இரு நடுகற்களில் இடது பக்கம் உள்ள நடுகல்லானது 75 செ.மீ.உயரமும்,55 செ.மீ அகலமும், 12 செ.மீ தடிமனும் உள்ள ஒரு பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது.
இடது புறம் சாய்ந்த கொண்டையானது அள்ளி முடியப்பட்டுள்ளது. கொண்டையின் முடிச்சு அருகே பறக்கும் நிலையில் உள்ளது. காதுகளில் காதணி,கழுத்தில் சரபளி,சவடி,போன்ற ஆபரணங்களும், மார்பில் சன்னவீரம் எனப்படும் வீரச்சங்கிலியும் காணப்படுகிறது.
சன்ன வீரம் என்பது போருக்கு செல்லும் வீரர்கள் அணிவதாகும். முதுகில் அம்புக்கூட்டில் நான்கு அம்புகள் உள்ளன. வீரனின் இடது கை நீண்ட வில்லினை பற்றியுள்ளது. வலது கையில் அம்பு உள்ளது. இடைக்கட்டு மூன்று வரிகளில் உள்ளது. அரையாடையின் முடிச்சு நீண்டு வில் வரை உள்ளது. வீரனின் வலது பக்க இடுப்பில் குறுவாள் உள்ளது. பாதமானது பூமிக்கடியில் புதைந்துள்ளது. மிகவும் அலங்காரமான நிலையில் வீரக்கல் காட்டப்பட்டுள்ளது. இது இந்தப்பகுதியில் நடந்த போரின்போது இறந்த வீரனுக்கு வைக்கப்பட்ட வீரக்கல்லாகும்.
12 ஆம் நூற்றாண்டில் வாணகோவரையர் என்பவர்கள் ஆறகழூரை தலைநகராக கொண்டு மகதை நாட்டை ஆண்டு வந்தனர். தேவியாக்குறிச்சி என்ற இந்த ஊர் தேவியர் குறிச்சி என்ற பெயரில் ஆறகழூரின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோயிலில் பணிபுரிந்த தேவரடியார்களுக்கு தேவியர் குறிச்சியில் நிலம் தானமாக தரப்பட்டுள்ளது. வாணகோவரையர்கள் ஆட்சியின் போது ஹொய்சாளர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசு போன்றோருடன் போரில் ஈடுபட்டனர். அந்த போர்களில் ஈடுபட்டு இறந்த ஒரு வீரன் நினைவாக வைக்கப்பட்டுள்ள வீரக்கல் இதுவாகும். இதன் காலம் 14 ஆம் நூற்றாண்டு என கருதலாம்.
இந்த வீரனின் வலது புறம் மற்றொரு நடுகல் காணப்படுகிறது. இது 76 செ.மீ உயரமும், 58 செ.மீ அகலமும், 7 செ.மீ தடிமனும் உள்ள பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது. இது 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம். அதிக அலங்காரம் இல்லாமல் எளிமையாக வீரக்கல் காட்டப்பட்டுள்ளது.
நேரான கொண்டை, கழுத்தில் சவடி,சரபளி, காதுகளில் அணிகலன்கள் ,மார்பில் சன்னவீரத்துடன் காணப்படுகிறது. இடது கையில் நீண்ட வில்,வலது கையில் அம்பு,முதுகில் உள்ள அம்புக்கூட்டில் நான்கு அம்புடன் காட்டப்பட்டுள்ளது. அரையாடை, ஆடை முடிச்சு உள்ளது. இடுப்புக்கு கீழ் முழங்கால் வரை வலது கால் மேற்புறம் சிதைந்துள்ளது. இடது பாதமானது இடப்பக்கம் திரும்பி போருக்கு செல்லும் நிலையில் உள்ளது.
மகதை நாட்டை ஆண்ட வாணகோவரையர்கள் சார்பாக போரிட்டு, போரில் வீர மரணம் அடைந்த வீரன் நினைவாக வைக்கப்பட்டுள்ள வீரக்கல் இதுவாகும். இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் பல வரலாற்று சான்றுகள் கிடைக்கலாம் என சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர்.
தகவல்: ஆறகழூர் பொன்.வெங்கடேசன் M.A(HIS),M.A.(PU.AD),M.A.(J.M.C),M.PHIL,D.PHARM



தலைவர், சேலம் வரலாற்று ஆய்வுமையம்

http://www.nntweb.com/news-view.php?nid=484&nalias=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D....

ஞாயிறு, 22 ஜூலை, 2018

mukkaruppu inscription-மூக்கறுப்பு கல்வெட்டு பேளூர்

மூக்கறுப்பு கல்வெட்டு - சேலம் மாவட்டம் பேளூர்
ஆறகழூர் பொன்.வெங்கடேசன்

வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,கிருஷ்ணமூர்த்தி
சேலம் வரலாற்று ஆய்வுமையம்
திராவிட மண்ணில் மூக்கறுப்பு போர்! – சேலம் கல்வெட்டில் ஆதாரம்
August 8, 2017 by புதிய அகராதி


பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்? என்பதைவிட பல திடுக்கிடும் திருப்பங்களும், மர்ம முடிச்சுகளும் கொண்டது, மூக்கறுப்புப் போர். யுத்தத்தில் வீரர்கள் வெல்வர்; அல்லது, மடிவர். ஆனால் எதிரிகளை மட்டுமின்றி எதிரி நாட்டில் எதிர்ப்படும் எல்லோரின் மூக்கையும், மேலுதட்டையும் அறுத்து, மூட்டையில் கட்டிச்செல்லும் யுத்தமும் நம் திராவிட மண்ணில் நடந்திருக்கிறது



இப்படி ஒரு மூர்க்கத்தனமான போர், மதுரை திருமலை நாயக்கருக்கும், மைசூர் அரசன் கந்தீரவனுக்கும் இடையே நடந்துள்ளதாகச் சொல்கிறார், சேலம் வரலாற்று ஆய்வாளர் ஆறகழூர் வெங்கடேசன். போர்க்களம், சேலம் அல்ல; ஆனால் மூக்கறுப்பு யுத்தம் நடந்ததற்கான ஆதாரம் சேலத்தில்தான் கிடைத்திருக்கிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆறகழூரை சேர்ந்த வெங்கடேசன், அடிப்படையில் ஒரு மருந்தாளுநர். தீவிர கடவுள் மறுப்பாளர்; அறிவியல் சிந்தனையாளர். ஆனால், தற்போது கோயில் கோயிலாக சுற்றிக்கொண்டிருக்கிறார். வழிபாட்டிற்காக அல்ல; வரலாற்று ஆராய்ச்சிக்காக.
முகநூல் பக்கங்களில் சிலர், அவரவர் சொந்த ஊர் குறித்த வரலாற்று பெருமைகளை பதிவிடுவர். அதைப்படிக்கும்போது ஏன் நாம் நம் ஊரைப்பற்றி ஆராய்ச்சி செய்யக்கூடாது என்று யோசித்தேன். அதன்பின், தீவிரமாக வரலாற்று ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினேன்.
நாயக்கர் குறுவாள்
ஆறகழூரின் வரலாற்றுப் பின்னணி பற்றி, குறித்து சின்ன வயதில் இருந்தே கேள்விப்பட்டு வந்திருக்கிறேன். இப்போது சின்ன கிராமமாக சுருங்கிக் கிடக்கும் ஆறகழூர், கி.பி. 12ம் நூற்றாண்டில் மகதை நாட்டின் தலைநகரமாக திகழ்ந்து இருக்கிறது.
மூக்கறுப்பு கல்வெட்டு
பொன்பரப்பி வாணகோவரையன் என்ற சிற்றரசன், மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் ஆளுகையின் கீழ் இந்த பகுதியை ஆண்டு வந்திருக்கிறான். இதுபற்றிய தகவல்கள் தெரியவர, வரலாற்று ஆராய்ச்சியின் மீது மேலும் ஆர்வம் அதிகரித்தது.
ஒருநாள் நண்பர் ஒருவர், “மாப்ள, வயலில் ஒரு நடுகல் கிடக்கு மாப்ள. அதுல ஏதோ பொம்ம வரைஞ்சிருக்கு” என்று தகவல் கொடுத்தார். ஆர்வத்துடன், அந்த நடுகல்லை அகழ்ந்து எடுத்து ஆய்வு செய்தோம்.
அதில் இரண்டு குத்துவிளக்குகளும், அமர்ந்த நிலையில் கடவுள் சிற்பமும் இருந்தது. தொல்லியல்துறை ஆய்வாளர் ராஜகோபால் மூலம் ஆய்வு செய்தபோது, அந்தக் கல்வெட்டு, 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், வணிகக்குழு கல்வெட்டு என்பதும் தெரியவந்தது.
கல்வெட்டு பதிந்துள்ள மண்
காமநாதீஸ்வரர் கோயிலில் இருந்து உலோகத்தால் ஆன மூன்று சமணர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆறகழூர், தியாகனூர் சுற்றுவட்டார பகுதிகளில் பவுத்தம், சமண மதங்கள் செழிப்புடன் இருந்ததற்கான ஆதாரங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன.
எங்கள் ஆய்வில் முக்கியமான கல்வெட்டு என, பெரியேரி வண்ணான்குளம் பகுதியில் கிடைத்ததைச் சொல்லலாம். அந்தக் கல்வெட்டில் பெருச்சாளி உருவம் பொறிக்கப்பட்டு இருந்தது.
கல்வெட்டு படி
எங்களைப் போன்ற வரலாற்று ஆர்வலர்களுக்கு விழுப்புரம் வீரராகவன் அய்யாதான் குரு போன்றவர். அவர் மூலம் அந்தக் கல்வெட்டை ஆய்வு செய்தோம். பெருச்சாளி உருவத்துடன் தமிழகத்தில் கிடைத்த முதல் கல்வெட்டு இதுதான் என்பதும், 12ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதும் தெரியவந்தது. ஆறகழூர் பைரவர் கோயிலுக்கு 5000 குழி நிலத்தை தானமாக கொடுத்த செய்தி அந்த கல்வெட்டில் இருந்தது.
வாணகோவரையர்கள் 11ம் நூற்றாண்டு முதல் 14ம் நூற்றாண்டு வரை ஆறகழூரை தலைநகராகக் கொண்டு, மகத நாட்டை ஆட்சி செய்து வந்தனர். முன்ஜென்மத்தில், ஒரு சிவாலயத்தில் உள்ள விளக்கு அணையாமல் இருக்க, அதன் திரியை ஒரு பெருச்சாளி தூண்டிவிட்டுக் கொண்டே இருந்ததாம்.
அதன் பலனாக அடுத்த ஜென்மத்தில் அந்த பெருச்சாளி மாவலி மன்னனாக அவதரித்தது. மாவலி மன்னன் வம்சத்தைச் சேர்ந்த வாணகோவரையர்கள் (வாணர்கள்), பெருச்சாளியை குலச்சின்னமாக கொண்டதாக ஆய்வில் தெரியவந்தது,” என்கிறார் வெங்கடேசன்.

சேலம் வரலாற்று ஆய்வுமையம்
காமக்காபாளையத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கு தனிச்சிறப்பு உள்ளதாக கூறும் வெங்கடேசன், அந்தக் கல்வெட்டில் முழுவதும் கன்னட எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்த தாகச் சொன்னார். நாயக்கர்கள் காலத்தில், மைசூர் மன்னர்களின் ஆட்சிப்பரப்பளவு சேலம் வரை நீண்டிருந்ததற்கான ஆதாரமாக இந்தக் கல்வெட்டைச் சொல்லலாம் என்றார்.
காமக்காபாளையம் வழியாக திருச்சிக்கு செல்லும்போது, வழியில் உள்ள 8 கிராமங்களில் வரிவசூல் செய்ததற்கான செய்திகள் அந்தக் கல்வெட்டில் இருந்துள்ளது. இந்தக் கல்வெட்டு, 16ம் நூற்றாண்டுக்குரியது.
இதுவரை தனித்து செயல்பட்டு வந்த வெங்கடேசன், தன்னைப்போல் வரலாற்றுத் தேடலில் இயங்கிக் கொண்டிருக்கும் நண்பர்களை ஒருங்கிணைக்கிறார்.
, டாக்டர் பொன்னம்பலம், பெருமாள் ஆசிரியர்,பெரியார்மன்னன்,ஜீவநாராயணன்,வீரமணி விழுப்புரம் வீரராகவன் ஆகியோர் கொண்ட குழுவாக வரலாற்றுத் தகவல்களைத் தேடத் தொடங்கினார்.
இக்குழுவின் தேடலுக்கு கைமேல் பலன். 10ம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டு ஒன்று உடைந்த நிலையில் கிடைக்கிறது. பேளூரில் கண்டெடுக்கப்பட்ட இக்கல்வெட்டு, முதலாம் பராந்தகச்சோழன் ஆட்சிக் காலத்துக்குரியது. ‘நரசிங்கபுரம் சிவன் கோயில் விளக்கு எரிக்க தானம்’ ஆகிய விவரங்கள் மட்டுமே அதன்மூலம் அறிய முடிந்தது. எதை தானமாகக் கொடுத்தனர்? என்ற விவரங்கள் அறிய இயலவில்லை.
அதேநேரம், பேளூர் அங்காளம்மன் கோயில் முன்பு, கிருஷ்ணமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான விளை நிலத்தில், பூமிக்கு மேல் மூன்று அடி நீண்டிருக்கும் ஒரு கல்வெட்டு இருக்கும் தகவல் கிடைக்கிறது.
பொக்லின் இயந்திர உதவியுடன் கல்வெட்டை தோண்டி எடுத்தபோது, அது 6 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட கல்வெட்டாக இருந்தது. கல்வெட்டின் நாலாபுறங்களிலும் ஏராளமான வட்டெழுத்துகள் இருந்தன.
பூமிக்கு மேல் நீண்டிருந்த கல்வெட்டு பகுதியில், “மீசையுடன் மூக்கறுப்பிச்சே” என்று மட்டுமே தெரிந்தது. ஆனால், பல திடுக்கிடும் கதைகளும், மர்மங்களும் நிறைந்த தகவல்கள் இருக்கும் என கல்வெட்டைத் தோண்டி எடுக்கும்வரை அந்தக் குழுவினர் கொஞ்சமும் யூகித்திருக்கவில்லை.
ராமாயண கதையில் ராவணன் தங்கை சூர்ப்பனகையின் மூக்கை, ராமன் தம்பி லட்சுமணன் துண்டித்திடுவான். இதிகாசத்தில் மட்டுமே கேட்டுப்பழகிய இதுபோன்ற மூக்கறுப்பு சம்பவம், நிஜத்திலும் நடந்ததற்கான ஒரே ஆதாரம் இந்தக் கல்வெட்டு என்றே சொல்லலாம்.
“மீசையுடன் மூக்கறுப்பிச்சே” வரிகளின் பின்னணியில் உள்ள கதைகளையும், கல்வெட்டு தகவல்களையும் ஆறகழூர் வெங்கடேசனே சொன்னார்…
“கல்வெட்டின் முதல் பக்கத்திலும், இரண்டாம் பக்கத்திலும் தலா 29 வரிகளும், மூன்றாம் பக்கத்தில் 41 வரிகளும், நான்காம் பக்கத்தில் 32 வரிகளும் பொறிக்கப்பட்டு இருந்தன. மூக்கறுப்புப் போர் பற்றிய தகவல் அடங்கிய முதல் கல்வெட்டு இதுதான்.
மைசூர் நாட்டு மன்னன் கந்தீரவனுக்கும், மதுரை திருமலை நாயக்கருக்கும் இடையே ஏற்பட்ட மூக்கறுப்பு போர் பற்றிய தகவல்கள் அதில் இருந்தன. கந்தீரவனுக்கு எதிராக திருமலை நாயக்கர் தொடர்ந்து வாலாட்டிய தால் கடும் ஆத்திரம் அடைந்த மைசூர் மன்னன், அவர் மீது போர் தொடுக்கிறான்.
போரில் வீரர்களைக் கொல்வது தான் மரபு. ஆனால், எதிரி நாட்டில் எதிர்ப்படுவது யாராக இருந்தாலும் அவர்களின் மூக்கையும், மேல் உதட்டையும் அறுத்துக் கொண்டு வந்தால் வெகுமதிகள் அளிக்கப்படும் என்று அறிவிக் கிறான். அப்படி கொண்டு வரப்படும் மூக்கு, மேலுதட்டுடன் மீசையும் இருந்தால் வெகுமதிகள் இன்னும் அதிகமாகக் கிடைக்கும். மூக்கறுப்புக்காக விசேஷ கருவியையும் வீரர்கள் வைத்திருந்தனர். கந்தீரவனின் படை வீரர்கள், தமிழ்நாட்டில் புகுந்து பலரின் மூக்கு, மேலுதடுகளையும் அறுத்துச் செல்கின்றனர்.
அடுத்து, கந்தீரவனின் பாணியிலேயே இதற்கு பதிலடி கொடுத்தார் திருமலை நாயக்கர்.
அவருடைய ஆணையின் பேரில், ராமநாதபுரம் ரகுநாதசேதுபதி தலைமையில் 25000 படை வீரர்கள், பாளையக்காரர்களின் 35000 படை வீரர்கள் என 60 ஆயிரம் வீரர்கள் மைசூர் ஆட்சிப் பகுதிக்குள் நுழைந்து, எதிரிகளின் மூக்குகளை அரிந்து சாக்குப்பையில் கட்டி திருமலை நாயக்கருக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தப் போர் 1656ம் ஆண்டு நடந்துள்ளதாக, ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அப்போது பேளூர் பகுதியில் பாளையக்காரர்கள் ஆட்சி நடத்தி வந்துள்ளனர். அதனால், மூக்கறுப்பு போர் குறித்த கல்வெட்டு, இந்தப் பகுதியில் வைக்கப்பட்டு இருக்கலாம்,” என்கிறார் ஆறகழூர் வெங்கடேசன்.
//தமிழகத்துடன்
உரசும் கர்நாடகா//
“மைசூர் மன்னன் கந்தீரவன், பிறவியிலேயே வாய் பேச இயலாதவன்; காதுகளும் கேட்காது. அவரை பலர் கேலி செய்திருக்கலாம். அந்த வன்மத்தைத் தீர்த்துக்கொள்ள, எதிரி நாட்டவர்களின் மூக்கையும், மேல் உதட்டையும் அறுத்துக் கொண்டு வரச்சொல்லி இருக்கலாம்,” என்றும் சொல்கிறார் ஆறகழூர் வெங்கடேசன்.
இது ஒருபுறம் இருக்க, மைசூர் மன்னன் கந்தீரவனின் முக்கையும் மேல் உதட்டையும் ரகுநாதசேதுபதியின் படை வீரர்கள் அறுத்து வந்து திருமலை நாயக்கரிடம் ஒப்படைத்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.
பிறரை அவமானப்படுத்துதலை இன்றும் ‘அவனை எப்படியாவது மூக்குடைக்க வேண்டும்’ என்றே சொல்கிறோம்.
எனில், மூக்கறுத்தல் என்பது ஒருவரை மானமிழக்கச் செய்தல் என்பதாகத்தான் இந்தச் சமூகம் கருதி வந்திருக்கிறது. அதன் வெளிப்பாடாகத்தான் மூக்கையும் மேல் உதட்டையும் அறுத்து வரச்சொல்லி இருக்கலாம்.
எனினும், மைசூர்க்காரர்களுக்கு (கர்நாடகா), தமிழ்நாட்டுடன் 360 ஆண்டுகளுக்கு முன்பே பகை இருந்து வந்திருக்கிறது என்பதற்கு இந்த கல்வெட்டு ஒரு சான்று.
கட்டுரை: இளையராஜா எஸ்.
ஆறகழூர் வெங்கடேசனை தொடர்பு கொள்ள: 90475 14844.

செவ்வாய், 19 ஜூன், 2018

வாழப்பாடி சென்றாயபெருமாள் கோயில் கல்வெட்டு

Salem:
June 18
வாழப்பாடி சென்றாயபெருமாள் கோயில் கல்வெட்டு
சேலம் மாவட்டம் வாழப்பாடி சென்றாயப்பெருமாள் கோயிலில் 148 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு சேலம் வரலாற்று ஆய்வு மையத்தால் படி எடுக்கப்பட்டு படிக்கப்பட்டது.
சேலம் வரலாற்று ஆய்வுமைத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன்,ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,கவிஞர் பெரியார் மன்னன்,மருத்துவர் பொன்னம்பலம்,பெருமாள் ஆசிரியர்,ஜீவநாரயணன் ஆகியோர் அடங்கிய குழு வாழப்பாடி பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது அக்ரகாரத்தில் உள்ள சென்றாயப்பெருமாள் கோயிலில் வெளிப்புற வாயிலின் அருகே உள்ள ஒரு கல்வெட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இது வரை அக்கல்வெட்டில் உள்ள வாசகங்கள் அறியப்படாமல் இருந்து வந்தது. கல்வெட்டானது 20 வரிகளில் வெட்டப்பட்டுள்ளது. கல்வெட்டின் மேற்பகுதியில் சக்கரம்,சங்கு,நாமம் போன்றவை செதுக்கப்பட்டுள்ளது. கலியுகம் 4971 சாலிவாகன வருடம்( 1792) வைகாசி 13 ஆம் தேதி என கல்வெட்டு துவங்குறது. இது தற்போதைய கணக்கில் கி.பி 1870ஆம் ஆண்டு ஆகும்.
வாழப்பாடியில் அப்போது வாழ்ந்த தவசி வன்னியன் மகன் தொப்ள வன்னியன் மனைவி அலமேலு அவர்களின் பெரு முயற்சியால் அங்கமுத்து வன்னியன் என்பவர் தான் சேர்த்து வைத்திருந்த செல்வத்தாலும் உடல் வலிமையாலும் வாழப்பாடி அக்ரகாரத்தில் அமைந்துள்ள சென்றாயப்பெருமாள் கோயிலில் கர்ப்பகிரகம் அமைத்து திருப்பணி செய்துள்ளார்.
சேலம் வரலாற்று ஆய்வு மைய குழுவினர்

கோயிலுக்கு ஒரு நந்தவனம் அமைத்து கொடுத்து ஒரு கிணறும் வெட்டி கொடுத்துள்ளார். கோயில் வாகனங்களையும் புதுப்பித்து கொடுத்துள்ளார்.திருப்பதியிலிரு ந்து சென்றாயப்பெருமாள், அலமேலு திரு உருவை செய்து கொண்டுவந்து இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார். பூசைக்காக நஞ்சை,புஞ்சை நிலங்களை தானமாக அளித்து தேர் ஒன்றும் செய்து கொடுத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் பெளர்ணமி அன்று இங்கு தேர்திருவிழா நடத்தப்படவேண்டும். கோயிலின் வெளியே போடப்பட்டுள்ள கடைகளின் வாடகையிலிருந்து 500 ரூபாய் எடுத்து தேர்திருவிழா நடத்தப்பட வேண்டும் என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தர்மத்தை அனைவரும் மதித்து தொடர்ச்சியாக செயல்படுத்த வேண்டும். இந்த தர்மத்துக்கு யாராவது இடையூறு செய்தால் அவர்கள் இந்த பிறவியிலே மதி இழந்து ஏழெழு நரகத்துக்கு செல்வார்கள் என கல்வெட்டில் வெட்டப்பட்டுள்ளது.தவசி வன்னியன் என்பவர் இக்கல்வெட்டை எழுதியுள்ளார்.
வாழப்பாடி பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்று தடயங்கள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

http://www.dinakaran.com/District_Detail.asp?
Nid=863623
http://www.dinamani.com/tamilnadu/2018/jun/19/148-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2942770.html
http://www.dinamalar.com/district_detail.asp?id=2044333

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

சேலம் வரலாற்று கருத்தரங்கம்

அன்புடையீர்
வணக்கம்.

சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் (Salem Historical Research Center/SHRC) இரண்டாமாண்டு வரலாற்று கருத்தரங்கம் எதிர்வரும் மே மாதம் 13ம் தேதி (13.5.18) ஞாயிற்றுக்கிழமை அன்று சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள கருத்தரங்க கூடத்தில் (A/C) நடைபெற உள்ளது.

இந்த வரலாற்றுக் கருத்தரங்கில்
அறிஞர் பெருமக்கள்
1.முனைவர் பேராசிரியர் திரு. ராசவேலு ஐயா அவர்கள், ( துறைத்தலைவர், கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்)

2.மூத்த கல்வெட்டாய்வாளர் விழுப்புரம் திரு.வீரராகவன் ஐயா அவர்கள்

3.சமண/பவுத்தவியல் ஆய்வாளர் முனைவர்.மகாத்மா செல்வபாண்டியன் அவர்கள் ( Mahathma Selvapandiyan)

4.வரலாறு.காம் ஆசிரியர் குழுவினர்
திரு. ச.கமலக்கண்ணன் அவர்கள் மற்றும்
5. திரு.சு.சீதாராமன் அவர்கள்
( Seetharaman Subramanian)
ஆகியோர் செறிவான தலைப்புகளில் வரலாற்றுரையாற்ற உள்ளனர்.
( தலைப்புகளை அழைப்பிதழில் காண்க)

அன்றைய தினம் எமது ஆய்வு மையம் இதுவரை கண்டறிந்த நடுகற்கள் அனைத்தையும் தொகுத்து
"சேலம் மாவட்ட நடுகற்கள்
(புதிய கண்டறிதல்கள்)" என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

மூத்த கல்வெட்டாய்வாளரும் எமது ஆய்வு மையத்தின் ஆலோசகருமான விழுப்புரம் திரு.வீரராகவன் ஐயாவின் "ஏமப்பேர் வேதபுரீசுவரர் திருக்கோயில்" என்ற புத்தக வெளியீடும் அன்றைய தினம் நடைபெற உள்ளது.

முத்தாய்ப்பாக தொல்லியல் அறிஞர்கள் 1.விழுப்புரம் திரு.வீரராகவன் ஐயா,
2.திரு. குழந்தை வேலவன் ஐயா,
3.வெள்ளக்கல்பட்டி திரு. துரைசாமிஐயா,
4.திரு.சுகவன.முருகன் ஐயா ( Manonmani Pudhuezuthu) ஆகிய நால்வருக்கும்
சேலம் வரலாற்று ஆய்வு மையம்
"வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கி சிறப்பிக்க உள்ளது.

மேலும் திருமதி.மங்கை வீரராகவன்( Mangai Ragavan) அவர்களது தொல்லியல் கண்காட்சியும்
பேளூர் புலவர் திரு.வீரமணி வீராசாமி ஐயா( Veeramani Veeraswami) அவர்களின் நாணயங்கள் மற்றும் தபால் தலைகள் கண்காட்சியும் இடம் பெறுகின்றன.

இம்முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள வரலாற்று ஆர்வலர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

கருத்தரங்க கூடம் இடவசதி, மதிய உணவு ஏற்பாடு , பதிவு செய்வோருக்கு விழாவில் வெளியிடப்படும் "சேலம் மாவட்ட நடுகற்கள் "புத்தகம் வழங்குதல் போன்ற முன்னேற்பாடுகள் செய்யும் பொருட்டு வருகை புரிவோரின் முன்பதிவு மிக இன்றியமையானதாகிறது.
எனவே அழைப்பிதழில் கொடுக்கப்பட்டுள்ள அலைபேசி எண்ணிற்கு அழைத்து தங்களது வருகையை முன்கூட்டியே பதிவு செய்து உறுதிப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!
.......................................................................
#மே_13
அனைவரும் வருக..
வரலாற்றமிர்தம் பருக.!

அழைத்து மகிழும்..

ஆறகழூர் பொன்.வெங்கடேசன்
தலைவர்/சேலம் வரலாற்று ஆய்வுமையம்
மற்றும்




நிர்வாகிகள்

வெள்ளி, 5 ஜனவரி, 2018

புத்தூர் நடுகல்

தலைவாசல் அருகே புத்தூர் கிராமத்தில் கண்டறியப்பட்ட 2 நடுகற்கள் பற்றிய செய்தி இன்றைய 3/01/2018 காலைக்கதிர், தினமணி,தினத்தந்தி,தினகரன் நாளிதழ்களில் வெளிவந்துள்ளது. செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனங்களுக்கும் செய்தியாளர்கள் திரு காலைக்கதிர் தமிழ்செல்வன்,திரு தினமணி சரவணன்,திரு தினத்தந்தி வேலுமணி, திரு தினகரன் சேகர் ஆகியோருக்கு சேலம் வரலாற்று ஆய்வு மையம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
காலைக்கதிர் செய்தி

தலைவாசல் அருகே 2 நடுகற்கள் கண்டுபிடிப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே புத்தூர் என்ற கிராமத்தில் 2 நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளது.
தினத்தந்தி
சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் ஆகியோர் புத்தூர் கிராமத்தில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது புத்தூர் அரசுப்பள்ளி முன்புறம் உள்ள மரத்தடியில் இரண்டு நடுகற்கள் கண்டறியப்பட்டன
இந்தியன் எக்ஸ்பிரஸ்
.
நடுகல்
ஆநிரை கவர்தல் அல்லது ஆநிரை மீட்டல், போரில் வீர மரணம் அடைந்தவர்கள், மக்களுக்கு தீங்கு செய்த புலி , பயிர்களை நாசம் செய்த காட்டுப்பன்றி போன்ற கொடிய மிருகங்களை வேட்டையாடும்போது இறந்தவர்கள், தன் நாடு போரில் வெற்றி பெற கொற்றவையின் முன் தன் உயிரை தானே பலி கொடுத்து கொண்டவர்கள், மக்கள் நலனுக்காக உயிரிழந்தவர்கள் இவர்களுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் பழங்காலத்தில் இருந்தே இருந்து வந்துள்ளது.
தினமணி
புத்தூரில் காணப்படும் நடுகற்கள் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்காக எடுக்கப்பட்டிருக்கலாம். இவை 40 செ.மீ உயரம் 35 செ.மீ அகலம் உடையதாக உள்ளது. இதில் ஒரு நடுகல் தலை இல்லாமல் உள்ளது. இதை தலைவெட்டி சாமி என ஊர் மக்கள் அழைக்கிறார்கள். முதல் நடுகல்லானது பின்னோக்கிய இடது பக்க கொண்டையுடனும் ,இடது கையில் வில் பற்றி வலது கையில் நாணில் அம்பை பூட்டி தொடுக்கும் நிலையில் உள்ளது. முதுகு பக்கம் அம்புக்கூடு ,இடையில் அரையாடை இடுப்பில் குறுவாளுடன் இடது பக்கம் எதிரியை தாக்கும் நிலையில் காட்டப்பட்டுள்ளது. இதன் காலம் 18 ஆம் நூற்றாண்டாகலாம்.
18ஆம் நூற்றாண்டு நடுகல் வீரன்

இரண்டாவது நடுகல்லானது தலை சிதைக்கப்பட்ட நிலையில் உள்ளது . கழுத்தில் சரபளியும் சவடியும் காட்டப்பட்டுள்ளது .மார்பில் சன்னவீரம் வலது கையில் கத்தி , இடது கையில் வில் ஏந்தியும், வயிற்றுக்கட்டும் (உதிரபந்தம்) காட்டப்பட்டுள்ளது. வயிற்று கட்டின் சுங்கு முடிச்சு இடது பக்கம் காட்டப்பட்டுள்ளது. இடை முதல் தொடை வரை அரையாடையும் , வலதுகால் நேராகவும் இடது கால் இடப்பக்கம் திரும்பிய நிலையிலும் உள்ளது.
17ஆம் நூற்றாண்டு நடுகல்
சன்ன வீரம்
இந்த நடுகல்லில் காணப்படும் சன்னவீரம் முக்கியமான ஒன்றாகும் .சன்னவீரத்துடன் காணப்படும் நடுகற்கள் அரிதாகவே உள்ளது. சன்னவீரம் போர்கடவுளான முருகன் அணிவதாகும். இது வீரத்தின் சின்னம் ,வீரச்சங்கிலியில் அமையும் ஓர் உறுப்பாகும். கழுத்தினை சுற்றியும் மார்பணிகளை சுற்றியும் ஒரு மூலையிலிருந்து எதிர்மூலைக்கு குறுக்கே சென்று முதுகிலும் அப்படியே அமைந்த இரு சங்கிலிகள் சன்ன வீரம் எனப்படும். இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் பல வரலாற்று தரவுகள் கிடைக்கலாம். இவ்வாறு ஆய்வாளர்கள் கூறினார்கள்.
ஆறகழூர் பொன்.வெங்கடேசன், வீரராகவன் ஐயா
ஆறகழூர் பொன்.வெங்கடேசன்