சனி, 19 டிசம்பர், 2020

சின்னசேலம் கொற்றவை

 சின்னசேலம் கொற்றவை

      


ஆறகழூர் பொன்.வெங்கடேசன் M.A(HIS),M.A(JMC),M.A(PU.AD), M.PHIL
தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம்
செல் எண் : 9047514844, 7010580752




சின்னசேலத்தில் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட  பழமையான கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு

     
சின்னசேலம் கொற்றவை


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஏரிக்கரையில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.

   சேலம் வரலாற்று ஆய்வுமையத்தலைவர் ஆறகளூர் பொன்.வெங்கடேசன் சின்னசேலம் ஏரிக்கரைப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டார்.அப்போது ஏரிக்கரையின் கிழக்குப்பகுதியில் 700 ஆண்டுகள் பழமையான கொற்றவை சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


கொற்றவை


    கொற்றவை ஒரு பழமையான பெண் தெய்வமாகும். தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் கொற்றவை பற்றிய குறிப்புகள் உண்டு. பழையோள்,கானமர் செல்வி,பாய்கலைப்பாவை,காடுகிழாள் என்ற பெயர்களும் கொற்றவைக்கு உண்டு.கொற்றவையின் உருவ அமைப்பை சிலப்பதிகாரம் விரிவாக எடுத்துரைக்கிறது.மதுரை காண்டத்தின் இரண்டாவது காதையான வேட்டுவ வரியில் கொற்றவை வழிபாடு குறித்து இளங்கோ அடிகள் விரிவாக விளக்கி உள்ளார்.

      


  
    கானகத்தில் வசித்த வேட்டுவர்கள் தாங்கள் வேட்டைக்குச்செல்லும் முன் வேட்டையில் வெற்றி கிடைக்க கொற்றவையை வழிபட்டு சென்றுள்ளனர். மன்னர்கள் போருக்கு செல்லும் முன் கொற்றவைக்கு வீரன் ஒருவனை நவகண்டம் கொடுக்க செய்துள்ளனர். பல்லவர்கள் காலத்தில் கொற்றவை வழிபாடு சிறப்பாக இருந்துள்ளது. இவர் பாலை நிலத்துக்கு உரிய கடவுளாக அறியப்படுகிறார். பிற்காலத்தில் துர்க்கை,காளி என்ற பெயரில் கொற்றவை வழிபாடானது மாற்றமடைந்தது. பெரும்பாலும் ஏரி, ஆறு, ஓடை போன்ற நீர் நிலைகளின் அருகிலேயே கொற்றவை சிற்பங்கள் அமைக்கப்பட்டன.

 
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி


சின்னசேலம் கொற்றவை


   சின்னசேலம் ஏரியின் கிழக்கு கரையில் ஒரு கொற்றவை சிற்பமானது காணப்படுகிறது. இது கிராமிய பாணியில் அமைந்துள்ளது. உள்ளூர் தலைவர்களால் உள்ளூர் சிற்பிகள் மூலம் இது அமைக்கப்பட்டிருக்கலாம். 13 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியானது மகதை நாட்டில் இருந்துள்ளது. மகதை மன்னர் பொன்பரப்பின வாணகோவரையன் என்பவர் இப்பகுதியை ஆண்டு வந்தார்.அவர் காலத்தில் செய்யப்பட்ட கொற்றவையாக இதை கருதலாம். பல்லவர் கால பாணியை பின்பற்றி இச்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

    
டைம்ஸ் ஆப் இந்தியா

  
  இதன் உயரம் 83 செ.மீ,அகலம் 73 செ.மீ ஆகும். கால்பாதமும் அதற்கு கீழ் உள்ள பகுதியும் பூமியில் புதைந்துள்ளது. எட்டுகரங்களுடன் நீண்ட மகுடம், காதுகளில் பத்ரகுண்டலம்,கழுத்தில் சரபளி,சவடி போன்ற அணிகலன்களும் அலங்கரிக்கின்றன. மார்புக்கச்சை காட்டப்பட்டுள்ளது. வலது பின்கரங்களில் பிரயோகசக்கரம்,நீண்டவாள்,அம்பு போன்ற ஆயுதங்கள் உள்ளது. வலது முன்கரம் இடுப்பின் மீது வைத்த நிலையில் உள்ளது. இடது மேற்கரங்களில் சங்கு,வில்,கேடயம் போன்றவை காணப்படுகின்றன.இடது முன்கரமானது சிங்கத்தின் தலை அருகே உள்ளது.வழக்கமாக கொற்றவையின் வயிறு ஒட்டிய நிலையில் காட்டப்படும்.ஆனால் இதில் சற்று பெரிதாக காட்டப்பட்டுள்ளது. இடுப்பில் அரையாடையும் ஆடை முடிச்சும் உள்ளது. வலதுகால் நேராகவும் இடதுகால் சற்று மடித்த நிலையிலும் உள்ளது.

  

தமிழ் இந்து
  
  பல்லவர்கால கொற்றவையில் காணப்படும் மானும், சிங்கமும் இச்சிற்பத்தில் இருப்பது சிறப்பான ஒன்றாகும். கொற்றவையின் வாகனமான மான் வலதுபுறம் உள்ளது. பாய்ந்து ஓடும் நிலையில் மான் உள்ளது. நீண்ட கொம்புகள், முன்கால் தாவும் நிலையிலும் பின்கால் தரையில் அழுத்திய நிலையிலும் பெரிய அளவில் மான் காட்டப்பட்டுள்ளது. 10 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கொற்றவை சிற்ப்பத்தில்தான் இப்படி மான் காட்டப்படுவது வழக்கமாகும். இடது புறம் சிங்கமானது சிறிய அளவில் உள்ளது. பாதத்திற்கு கீழ் மண்ணில் புதைந்துள்ளதால் காலுக்கு கீழ் காட்டப்படும் எருமை தலையும்,நவகண்டம் கொடுத்துகொள்ளும் வீரனும்,வணங்கிய நிலையில் இருக்கும் அடியாரும் நமக்கு தெரியவில்லை.இப்பகுதியை மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்றுத்தடயங்கள் கிடைக்கலாம் என ஆய்வாளர் தெரிவித்தார்.

    
தினகரன்


         
தினத்தந்தி

மாலைமலர்

சக்தி விகடன்

சக்தி விகடன்

இணையதள இணைப்புகள்

மாலைமலர்

  https://www.maalaimalar.com/news/district/2020/12/11153607/2148069/Tamil-News-Ancient-kotravai-stone-idol-found-in-Chinnasalem.vpf

தமிழ் இந்து

https://www.hindutamil.in/news/todays-paper/regional01/610023-.html









சனி, 28 நவம்பர், 2020

ஆறகளூர் அழிந்து போன சிவன் கோயில் கல்வெட்டு

ஆறகழூர் பொன்.வெங்கடேசன் M.A(HIS),M.A(JMC),M.A(PU.AD), M.PHIL
தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம்


    

கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,தலைவர் சேலம் வரலாற்று ஆய்வு மையம்

ஆறகழூர் பெருமாள் கோயிலில் அழிந்து போன சிவன் கோயிலின் கல்வெட்டு கண்டுபிடிப்பு

  சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் உள்ள கரி வரதராஜபெருமாள் கோயிலில் பாண்டியர் மற்றும் நாயக்கர் கால கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
 சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், ஆய்வுமையத்தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் ஆகியோர் கரிவரதராஜ பெருமாள் கோயிலில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கமலமங்கை நாச்சியார் கோயிலில் பாண்டியர் மற்றும் நாயக்கர் கால கல்வெட்டுகளை கண்டறிந்தனர்.

கமலமங்கை நாச்சியார் சன்னதி

மகதைமண்டலம்


12 ஆம் நூற்றாண்டில் ஆறகழூர் மகதை மண்டலத்தின் தலைநகராக விளங்கியது.பொன்பரப்பின வாணகோவரையன் என்ற மன்னர் மகதை நாட்டை ஆண்டு வந்தார். இவர் சோழமன்னர் மூன்றாம் குலோத்துங்கனின் படைத்தளபதியாகவும், மகதையின் குறுநில மன்னராகவும் விளங்கினார்.இவர் காலத்தில்தான் ஆறகழூர் காமநாத ஈஸ்வரர் கோயிலும், கரி வரதராஜ பெருமாள் கோயிலும் கட்டப்பட்டன. வாணகோவரையனின் மனைவி புண்ணியவாட்டி நாச்சியார் என்பவர் கரி வரதராஜபெருமாள் கோயில் கருவறை, அர்த்தமண்டபம் போன்றவற்றை கட்டி விமானமும் அமைத்தார் என இக்கோயிலின் கருவறையின் வடக்கே உள்ள வெளிப்புற கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய சேலம் மாவட்டத்தின் கிழக்குப்பகுதி,கள்ளக்குறிச்சி மாவட்டம்,பெரம்பலூர் மாவட்டம், கடலூர் மாவட்டத்தின் மேற்குப்பகுதிகள் மகதை நாட்டில் அடங்கி இருந்தது.
  
  13 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களும்,ஹெய்சாளர்களும், 15 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை விஜயநகர பேரரசு, நாயக்க மன்னர்களும் மகதை நாட்டை ஆட்சி செய்தனர்,



ஆறகளூர் கரி வரதராஜ பெருமாள்

அழிந்து போன சிவன் கோயில்


  ஆறகழூரில் உள்ள கால்நடை மருத்துவமனை அருகே இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடம் கைலாசநாதர் தோப்பு என அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் ஒரு சிவன்கோயில் இருந்து அழிந்து போனதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இங்கு ஒரு நந்தி சிலை இப்போதும் உள்ளது. இங்கு இருந்த 6 சிலைகள் 30 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போய்விட்டது. மேலும் இங்கு இருந்த பைரவர் சிலை அருகே உள்ள மாரியம்மன் கோயிலிலும், சண்டிகேசுவரர் சிலை தேர்முட்டி அருகே உள்ள அகழ்பள்ளத்தின் தெற்குகரையிலும் இன்றும் உள்ளது. 17 ஆம் நூற்றாண்டில் சிதைந்திருந்த இக்கோயிலில் இருந்த கற்களை பயன்படுத்தி கரிவரதராஜ பெருமாள் கோயிலின் உள்ளே கமலமங்கை நாச்சியார் கோயில் கட்டப்பட்டு உள்ளது. அதற்கு சான்றாக அந்த சிவன் கோயிலுக்கு பாண்டிய மன்னர் தானம் அளித்த கல்வெட்டு கமலமங்கை நாச்சியார் கோயிலில் காணப்படுகிறது.



கரி வரதராஜ பெருமாள்

பாண்டியர் கல்வெட்டு


   கமலமங்கை நாச்சியார் கோயிலின் அர்த்த மண்டபத்தின் தென்புற உபபீடத்தில் கல்வெட்டு 4 வரிகளில் உள்ளது. கி.பி 1269 ஆம் ஆண்டு முதலாம் சடையவர்மசுந்தரபாண்டியனின் 18 ஆம் ஆட்சி ஆண்டில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. ஆறகழூர் உடையார் வயி ராவண ஈஸ்வரமுடைய நாயனார் கோயில் திருப்பணிக்கும், பூசைக்கும் மகதை மண்டலத்தில் உள்ள தொழுவூர் (இன்றைய தொழுதூர்) என்ற ஊரில் பெரிய ஏரிக்கு அருகே முதல் தரத்தில் ஆயிரம் குழி நன்செய் நிலம் தானமாக தரப்பட்டுள்ளது. இந்த நிலமானது சொக்கன் தடி என்ற அளவுகோலால் அளந்து தரப்பட்டது. நிலத்துக்கான வரியும் நீக்கப்பட்டுள்ளது. நிலத்தின் எல்லைகளில் சூலக்கற்கள் நிறுவப்பட்டு எல்லைகள் உறுதி செய்யப்பட்டது. சந்திரன் உள்ள வரை இந்த தானம் நிலைத்திருக்க வேண்டும் என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி கல்வெட்டாகவும், செப்பேடாகவும் பொறிக்கப்படவேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. வாணாதிதேவன் என்பவர் இக்கல்வெட்டை பொறித்துள்ளார்.



  இக்கல்வெட்டின் மூலம் பல புதிய செய்திகள் நமக்கு தெரிய வந்துள்ளன. தற்போது கைலாசநாதர் தோப்பு என அழைக்கப்படும் இடத்தில் இருந்து அழிந்து போன சிவன் கோயிலின் பெயர் ராவண ஈஸ்வரமுடையநாயனார் கோயில் ஆகும். அக்காலத்தில் நிலங்களை அளக்க சொக்கன் தடி என்ற நில அளவுகோல் பயன்படுத்தப்பட்டு உள்ளது. வாணாதிதேவன் என்ற அதிகாரி இக்கல்வெட்டை வெட்டியிருப்பதால் பாண்டியர்கள் காலத்தில் வாணகோவரையர் இப்பகுதியில் ஆட்சியில் இருந்தது தெரிய வருகிறது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் செப்பேடு இப்போது ஊரில் யாரிடமும் இல்லை.இது அழிந்து போயிருக்கலாம்
.

சேலம் நாயக்கர்கள்


17 ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்க மன்னர்களின் கீழ் பாளையக்காரர்களாக  சேலம் நாயக்க மன்னர்கள் வாழப்பாடி அருகே உள்ள பேளூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர். சின்னம்மநாயக்கர் என்பவர் மன்னராக இருந்தார். இவருக்கு சின்னபூபாலர் என்ற பட்டப்பெயரும் உண்டு. இவருக்கு பெத்தநாயக்கன், திருமலைநாயக்கர், ராமன்,லட்சுமணன்,வேங்கடப்ப நாயக்கர், சின்னப்ப நாயக்கர் என ஆறு மகன்கள் இருந்ததாக செக்கடிப்பட்டி கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதில் ராமனும், லட்சுமணனும் இரட்டை பிள்ளைகள். இவர்கள் அனைவரின் பெயரிலும் பேளூர் மற்றும் ஆத்தூரை சுற்றி ஊர் பெயர்கள்  இன்றும் அமைந்துள்ளன. பெத்தநாயக்கன் பெயரால் அமைந்த ஊர் பெத்தநாயக்கன் பாளையம், சின்னம்மநாயக்கன் பாளையம்,ராமநாயக்கன் பாளையம்,லட்சுமண சமுத்திரம் போன்றவை இவர்கள் பெயரில் அமைந்த ஊர்களாகும்.சேலம்,வாலிகண்டாபுரம்,புதுக்கோட்டை,கள்ளக்குறிச்சி வரை இவர்கள் ஆட்சி செய்தனர். ஆறகழூரும் இவர்கள் ஆட்சிப்பகுதியில் இருந்தது.



சேலம் திருமலை நாயக்கர்

பெத்தநாயக்கன் கல்வெட்டு


  சின்னம்மநாயக்கரின் மகன் திருமலை நாயக்கர்.அவருக்கு பெத்தநாயக்கன் என்ற ஒரு மகன் இருந்தது ஆறகழூர் கல்வெட்டு மூலம் தெரியவந்துள்ளது. கரியபெருமாள் கோயிலில் உள்ள கமலமங்கை நாச்சியார் கோயிலில் வடக்குப்பக்கம் அர்த்தமண்டபம் முதல் கருவறை வரை செல்லும் குமுதப்படையில் மூன்று வரிகளில் கல்வெட்டு அமைந்துள்ளது. ஸ்வஸ்திஸ்ரீ மகாமண்டலேஸ்வரர் என கல்வெட்டு துவங்குகிறது.இக்கோயிலை கரிய பெருமாள் கோயில் என கல்வெட்டு குறிப்பிடுகிறது. மதுரையை ஆண்ட நாயக்க மன்னர் வீரராமதேவ மகராயரின் மெய்கீர்த்திகள் சொல்லப்பட்டுள்ளன.சேர,சோழ,பாண்டியரை வென்றவர் எனவும் குறிப்பிடப்பட்டு நட்சத்திர குறிப்புகளும் வருகின்றன.கி.பி. 1618 ஆம் ஆண்டு இந்த கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.சேலம் நாயக்க மன்னர்களுக்கு நரலோககண்டன் என்ற பட்டம் இருப்பதை கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.


  
   மகதை மண்டலம் ஜனநாத வளநாட்டு ஆற்றூர் கூற்றத்தில் உள்ள ஆறகழூர் கரிய பெருமாள் கோயிலில் புதிதாக கமலமங்கை நாச்சியாருக்கு என தனி கோயில் அமைக்கப்பட்டு கருவறை, அர்த்தமண்டபம்,மகாமண்டம், கட்டப்பட்டு இறை உருவங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மதனகோபாலசாமிக்கு என ஒரு தனி கோயில் கட்டப்பட்டு இறை உருவங்கள் நிறுவப்பட்டன. ஆண்டாளுக்கு என ஒரு தனி கோயிலும் கட்டப்பட்டு ஆண்டாள் உருவம் செய்து வைக்கப்பட்டது. ஆண்டாளை கிருஷ்ண உபய நாச்சியார் என கல்வெட்டு கூறுகிறது. சேனைமுதலியார் உருவமும் நிறுவப்பட்டது என கல்வெட்டு குறிப்பிடுகிறது. கல்வெட்டில் வடமொழி அதிகம் கலந்துள்ளது. இந்த கல்வெட்டை சேலம் திருமலை நாயக்கரின் மகன் பெத்தநாயக்கன் என்பவர் பொறித்துள்ளார். இதன் மூலம் கமலமங்கை நாச்சியார்,மதனகோபாலசாமி,ஆண்டாள் கோயில்களை பெத்தநாயக்கன் கட்டிஉள்ளார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இந்த தன்மம் காலம் முழுதும் நிற்கவேண்டும் என கல்வெட்டு குறிப்பிடுகிறது. 400 ஆண்டுகள் கடந்தும் இக்கோயில் இன்றும் நல்ல நிலையில் உள்ளது. இக்கோயிலை கட்டிய பெத்தநாயக்கன், அவர் தந்தை திருமலை நாயக்கர் ஆகியோரின் உருவங்கள் கோயிலில் உள்ள தூண்களில் காணப்படுகிறது. இவர்களின் உருவங்களுக்கு மேலே இவர்களின் அரசு சின்னமான சூரியன், பிறை நிலா நடுவே குறுவாள் கொண்ட முத்திரை காணப்படுகிறது. இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் பல வரலாற்றுத்தடயங்கள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
 


சேலம் பெத்தநாயக்கன்


சேலம் திருமலைநாயக்கர் மகன் பெத்தநாயக்கன் என்ற கல்வெட்டு


காலைக்கதிர் செய்தி


காலைக்கதிர் செய்தி

https://www.dinamalar.com/news_detail.asp?id=2655917

தினமலர் செய்தி

https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/11/22100132/At-the-Perumal-temple-Of-the-ruined-Shiva-temple-Inscription.vpf

தினத்தந்தி செய்தி

https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/nov/22/inscription-of-ruined-shiva-temple-found-in-perumal-temple-3508857.html?fbclid=IwAR2vxRRjvGJ_0r7zzl17qjThipUJTu4A-kc62uU0qqrly01IvV7f_Cj9jss

தினமணி செய்தி