வரலாற்று செய்திகள்..
---------------------------------
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே 12-ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
12-ம் நூற்றாண்டு சிற்பம்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுகா முதுகாடு கிராமத்தில் கி.பி.1213-ம்
நூற்றாண்டை சேர்ந்த காடுகிழாள் சிற்பம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இந்த
சிற்பத்தில் காடுகிழாள் 8 கைகளோடு வீராசனத்தில் அமர்ந்துள்ள நிலையில்
நிசும்பன் என்னும் அரக்கனை தன் காலால் மிதித்த வண்ணம் காணப்படுகிறது.
கைகளில் முறையே கபாலம், வாள், கேடயம், திரிசூலம், உடுக்கை, வில், கைமணி
ஆகியவை திகழ ஒரு கை உயர்ந்து விஸ்மயம் என்றும் வியப்பு முத்திரையை
காட்டுகின்றது.
இந்த சிற்பத்தை முதுகாட்டை சேர்ந்த குழ.செல்லையா,
மங்கள நாட்டை சேர்ந்த அருணாசலம் ஆகியோர் துணையுடன் தஞ்சையை சேர்ந்த
வரலாற்று ஆய்வாளர் குடவாயில்பாலசுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர்
குடவாயில் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கொற்றவை
என்னும் தேவியின் வழிபாடு சங்க காலத்தில் இருந்து தொடர்வதாகும். தமிழின்
இலக்கண நூலான தொல்காப்பியம், பெரும்பணாற்றுப்படை, சிலப்பதிகாரம் போன்ற பழைய
நூல்களில் கொற்றவை பற்றி விவரிக்கப்பெற்றுள்ளன.
காடுகளின் தெய்வம்
அந்தகொற்றவையின் ஒரு வடிவமே காடுகிழாள் என்பதாகும். பொதுவாக காடுகளின்
தெய்வமாகவும், போரில் வெற்றி தரும் தெய்வமாகவும் காடுகிழாள்
வணங்கப்பெற்றாள். கி.பி. 8-ம் நூற்றாண்டில் சோழ நாட்டு கோடியக்கரைக்கு வந்த
சுந்தரர், அக்காட்டில் சிவலிங்க உருவம், காடுகிழாள் உருவத்தின் துணையோடு
மட்டும் திகழ்ந்ததாக அவருடைய தேவாரத்தில் குறிப்பிட்டு உள்ளார். முதுகாடு
என்னும் இந்த தொன்மையான ஊர் சோழர் காலத்தில் சோழநாட்டுக்கும், பாண்டிய
நாட்டுக்கும், எல்லையாக திகழ்ந்த வெள்ளாற்றின் வடகரையிலும்,
அம்புலியாற்றுக்குத்தென்கரையும் திகழ்ந்த வடகரை வெள்ளாற்று நாட்டில்
திகழ்ந்த ஊராகும். சோழநாட்டின் காடு அரணாக திகழ்ந்த முதுகாட்டின் காவல்
தெய்வமே இந்த காடுகிழாள் சிற்பமாகும். அந்த காலத்தில் எவ்வாறு கோவில்
இல்லாமல் காட்டின் நடுவே காடுகிழாள் காட்சி தருவாளோ அதே போன்று இன்னும்
முதுகாட்டில் இந்த சிற்பம் காணப்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.
மூலம் இன்றைய தினதந்தி நாளிதழ்..தஞ்சை பதிப்பு...