வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

ஆத்தூர்: சேலம் அருகே, வேம்படித்தாளம் கிராமத்தில், பழங்கால வட்ட புதிர்நிலை- தினமலர்

ஆத்தூர்: சேலம் அருகே, வேம்படித்தாளம் கிராமத்தில், பழங்கால வட்ட புதிர்நிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட வரலாற்றுத் தேடல் குழுவை சேர்ந்த, தொல்லியல் ஆய்வாளர்கள் சுகவனமுருகன், விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன் ஆகியோர், சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள வேம்படிதாளம், கோட்டைபுதூர் கிராமத்தில், ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:உலகின் மிகப்பெரிய புதிர்நிலைகளில் வேம்படித்தாளம் ஒன்றாகும். பெரிய புதிர்நிலை வட்ட வடிவில் இருப்பதுடன், 15 மீ., வட்டம், 140 மீட்டர் சுற்றளவு என்ற அளவில், 700 சதுர அடி பரப்பில் உள்ளது. பெருங்கற்கால புதிர்நிலை குறித்து, பாறை ஓவியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெருங்கற்கால வட்டப்புதிர்நிலை ஒன்று, தெற்கு கோவா, உஸ்கலிமோல் பகுதியில் உள்ளது. ஏழு நிலைப் பாதைகளைக் கொண்டதாக பாறையில் கீறப்பட்டிருக்கும். பெருங்கற்கால மக்களின் பண்பாட்டை அறிவதில் அகழாய்வு மட்டுமின்றி, புதிர்நிலை பற்றிய ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. வட்ட புதிர்நிலைகள், சுருள்வழி புதிர்நிலைகள், சதுர மற்றும் செவ்வக புதிர்நிலைகளும் உள்ளன. பெருங்காலப் புதிர்நிலைகள், 2,000 ஆண்டு பழமையானதாகும். மகாபாரதத்தில் அபிமன்யு சிக்கிக்கொண்டு, உயிரிழந்த சக்கரவியூகம், இவ்வாறான புதிர்நிலையாகும். வட்ட புதிர்நிலை, கிருஷ்ணகிரி பகுதியில் உள்ளது. பெருங்கற்கால வட்ட புதைகுழிகள், இதுவரை ஆராயப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது. வேம்படித்தாளத்தில் கண்டறிந்த வட்டப் புதிர்நிலை, கம்பையநல்லூர் புதிர் நிலையை விட, 64 ச.மீ., பெரியதாகும். புதிர் நிலைகளில், அமாவாசை, பவுர்ணமி நாளில் வழிபடுகின்றனர். கோட்டைப்புதூரில் கண்டறிந்த புதிர்நிலையானது, ஒரிசா மாநிலம், ராணிபூர் ஜஹாரியாவில் மலை மேலுள்ள சவுன்சாத் யோகினி கோவிலுக்கருகில் இருக்கும் புதிர்நிலையை போலவே உள்ளது. தமிழகப் புதிர்நிலைகள் வரலாற்றில், வேம்படித்தாவளம் புதிர்நிலை மிக, மிக அரியவையாகும். இவ்வாறு கூறினர்.




சேலம் ஆத்தூர் அருகே 16 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு -- ஆறகழூர் பொன்.வெங்கடேசன்

சேலம் ஆத்தூர் அருகே 16 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு


-- ஆறகழூர் பொன்.வெங்கடேசன்.


தொல்லியல் படிவம்: 
சேலம் ஆத்தூர் அருகே 16 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு

கண்டுபிடித்தவர்:  
தொல்லியல் முனைவோர்  திரு. ஆறகழூர் பொன்.வெங்கடேசன் 

இடம்: 
சேலம் மாவட்டம் தலைவாசலுக்கு அருகே உள்ள நத்தக்கரை கிராமம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே உள்ள வரலாற்று புகழ் மிக்க ஊர் ஆறகளூர். இந்த ஊருக்கு வடக்கு பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊர் நத்தக்கரை.

கல்வெட்டு: 

நத்தக்கரையில் வசிக்கும் தலைமை ஆசிரியர் மனோகரன் என்பவரின் வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் 85 செ.மீ நீளமும், 45 செ.மீ. அகலமும் உள்ள கற்பலகையில் இரு புறங்களிலும் 49 வரிகளில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது 

இக்கல்வெட்டு கி.பி.1585 ஆம் ஆண்டு வெட்டப்பட்டுள்ளது. சுபமஸ்து ஸ்வஸ்திஸ்ரீ சகாப்தம் என நட்சத்திர குறிப்புகளோடு இக்கல்வெட்டு ஆரம்பமாகிறது.

ஆறகளூரில் உள்ள காமநாகேஸ்வரர் கோயிலில் உள்ள பெரியநாயகிக்கு, நத்தக்கரை கிராமம் நாயக்க மன்னர்களால் ஆற்றூர் (தற்போதைய ஆத்தூர்) நட்டவாரிடம் தானமாக தாரை வார்த்து வழங்கப்பட்டது என கல்வெட்டு தெரிவிக்கிறது.

மேலும், இக்கல்வெட்டு குறிப்பிடும் தானத்தை அழிவு செய்வோர் கங்கை கரையிலே சினைப் பசுவை கொன்ற பாவத்திற்கு உள்ளாவார்கள் என கல்வெட்டு தெரிவிக்கிறது.

இக்கல்வெட்டை நாட்டவர்கள் சொல்ல ஆற்றூரை (தற்போதைய ஆத்தூர்) சேர்ந்த நாட்டு கணக்கணான காமீஸ்வரன் பொறித்துள்ளார் என்பதை இக்கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.

தலைவாசலுக்கு கிழக்கு, நாவல்குறிச்சிக்கு தெற்கு, பெரியேரிக்கு மேற்கு, இடைப்பட்ட நத்தகரை கிராமம் என கிராமத்தின் நான்கு எல்லைகளையும் கல்வெட்டு தெரிவிக்கிறது.

11 ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு வரை ஆறகளூர் மகதை நாடு என்ற குறுநில நாட்டின் தலைநகராய் இருந்தது.

மூன்றாம் குலோத்துங்க சோழனின் தளபதியாய் இருந்த பொன் பரப்பின வாணகோவரையன் என்பவர் ஆறகளூரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து வந்துள்ளார். சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசு, நாயக்கர்கள் கீழ் ஆட்சி நடந்துள்ளது.

எனவே, ஆறகளூரை சுற்றி உள்ள பகுதிகளில் இன்னும் புதிய கல்வெட்டுக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆய்வாளர்கள்: 
கல்வெட்டு ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், மங்கை வீரராகவன், பொன்.வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய குழு இந்த கல்வெட்டை ஆய்வு செய்தது
http://mymintamil.blogspot.in/2016/02/16.html

சேலத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்திட்டை, கற்குவை கண்டுபிடிப்பு

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே எருமைநாயக்கன் பாளையத்தில் உள்ள பொன்சொரி மலையில் 2,500 ஆண்டுக்கு முற்பட்ட கல்திட்டை, கற்குவை இருப்பதை சேலம் வரலாற்று சங்கம் மற்றும் சேலம் மாவட்ட வரலாற்று தேடல் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
சேலம் மாவட்ட வரலாற்று தேடல் குழு மற்றும் வரலாற்று சங்கத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் வீரராகவன், தொல்லியல் ஆர்வலர்கள் ஆறகழூர் பொன்.வெங்கடேசன், கலைச்செல்வன், சீனிவாசன் ஆகியோர் தலைமையிலான 20 பேர் கொண்ட குழுவினர் சேலம் மாவட்டம் எருமைநாயக்கன் பாளையத்தில் உள்ள பொன்சொரி மலையில் களஆய்வு செய்தனர்.
தாமரைப்பாழி சுனை
அப்போது, அம்மலையில் 2,250 அடி உயரத்தில், ‘தாமரைப்பாழி’ என்ற சுனைக்கு அருகே ஒரு கல்திட்டை மற்றும் கற்குவை இருப்பதை கண்டறிந்தனர். இதுகுறித்து நடத்திய ஆய்வில், அவை சுமார் 2,500 ஆண்டுக்கு முற்பட்ட சங்ககாலத்துக்கு முந்தைய பெருங்கற்காலத்தை சேர்ந்தவைகள் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் வீரராகவன் மற்றும் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் கூறியதாவது:
பெருங்கற்காலத்தில் குறுநில மன்னர்கள், படை தளபதிகள், படைப்பிரிவில் சிறப்புற இயங்கி, எதிரிகளை திணறடித்து ஓட ஓட விரட்டிய மாவீரர்கள் மற்றும் அரசு பொறுப்பில் முக்கிய பங்காற்றிய பிரமுகர்கள் இறந்தால், அவர்களை பூமியில் குழிதோண்டி புதைத்துவிட்டு நான்கு புறமும் பலகை கற்கள் வைத்து, மேற்புறமும் ஒரு பலகை கல்லால் மூடி புறா கூண்டுபோல் அமைத்துவிடுவர். இதில் அவர்கள் நினைவாக அவர்கள் பயன்படுத்திய சில பொருட்களையும் வைத்து அடக்கம் செய்யும் வழக்கம் இருந்தது.
உடல் அடக்கம்
இந்த முறைக்கு கல்திட்டை என்று பெயர். இங்கு காணப்படும் இந்த கல்திட்டை ஒரே பலகைக்கல்லால் அமைக்கப்படாமல் சிற்சில துண்டுகற்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. வடபுறம் உள்ள பக்கவாட்டுகல்லும் மூடும் கல்லும் சிதைக்கப்பட்டுள்ளன. மூடுகற்கள் 5 துண்டுகற்களால் மூடப்பட்டுள்ளது.
பழங்காலத்தில் இறந்தவர்களை புதைக்க கல்பதுக்கை, கல்திட்டை, கல்வட்டம், ஈமப்பேழை, கல்குவை, முதுமக்கள்தாழி போன்ற முறைகளை பயன்படுத்தி உள்ளதை வரலாற்று ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தி யுள்ளனர்.
பெருங்கற்காலம்
இதுபோன்ற கல்திட்டை ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்னர் மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, அம்மன் மலையில் கல்திட்டையும், இருபது அடி தொலைவில் சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு கற்குவையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெருங்கற்காலத்தில் இறந்தவர் களை பூமியில் புதைத்து மூடிவிட்டு அந்த இடத்தை அடையாளப்படுத்த கூம்பு வடிவில் கற்களை அடுக்கி வைப்பது, கற்குவை என்று அழைக்கப்படுகிறது. 5 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட எகிப்து பிரமிடுகள் இன்றளவும் போற்றி காப்பாற்றப்பட்டு வரும்நிலையில், தமிழகத்தில் பழங்கால புரதான சின்னங்கள் பல இடங்களில் கேட்பாரின்றி கிடக்கிறது. இதுபோன்ற அரிய பொக்கிஷங்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
நினைவுச் சின்னம்
இதுகுறித்து தமிழ்நாடு தொல்லியல் துறை முன்னாள் உதவி இயக்குநர் ர.பூங்குன்றன் கூறியதாவது:
பெருங்கற்காலத்தில் அரசர்கள், குறுநில மன்னர்கள், படை தளபதிகள், மாவீரர்கள் மறைவை நினைவு கூறும் விதமாக நடுகற்கள் ஏற்படுத்தி, அவர்கள் புகழை காலத்தால் அழியாத வகையில் நினைவுச் சின்னமாக போற்றி காத்து வந்துள்ளனர். இன்றளவும், ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட தஞ்சை பெரிய கோயில் உள்ள புராதன சின்னங்களில் உள்ள கல்வெட்டுகள் மூலம் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்கிறோம்.
தற்போது, சேலம் மாவட்டத்தில் பொன்சொரி மலையில் வரலாற்று தேடல் குழுவினர் கண்டு பிடித்துள்ள 2,500 ஆண்டுக்கு முற்பட்ட கற்குவை, கல்திட்டை தொல்லியல் துறை மூலம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தினால், மேலும், பல புதிய தகவல்கள் கிடைக்கும்.
கற்பிக்க உத்தரவு
கடந்த 1976-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, பழங்கால சின்னங்களை பாதுகாக்க அந்தந்த பகுதியில் கிடைக்கும் சின்னங்களை அப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் எடுத்து வந்து பாதுகாத்து, குழந்தைகளுக்கு, வரலாற்று சம்பவங்களை கற்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
காலப்போக்கில் இந்த உத்தரவு நடைமுறைக்கு வராமலே போனதால், பழங்கால புராதன சின்னங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பதே தொல்லியல் துறை மற்றும் வரலாற்று ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2500-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8795549.ece

aragalur-ஆறகழூர் சோழீசுவரன் கோயில் கல்வெட்டு

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் பழம் பெருமை வாய்ந்தது
12 ஆம் நூர்றாண்டில் மகதை நாட்டின் தலைநகராக இருந்தது
பொன்பரப்பின வானகோவரையன் என்ற குறுநில மன்னர் ஆறகழூரை ஆண்டு வந்தார்
ஆறகழூரில் உள்ள சோழீசுரமுடைய நாயனார் கோயில் இவர் காலத்தில்  கட்டப்பட்டுள்ளது
இந்த சோழீசுரமுடைய நாயனார் கோயில் முன் உடைந்த நிலையில் ஓர் கல்வெட்டு உள்ளது

இதன் வாசகம்
.சேவிக்க வ(டச்ச)... பெருஞ்சிற்ப புள்(ளன்) சொக்கு நாயனார்...


ஆறகழூர் பொன்.வெங்கடேசன்


ஆத்தூர் நரசிங்கபுரம் நரசிம்மர் ?



சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஊர் நரசிங்கபுரம். இப்போது இது ஒரு நகராட்சி
12 ஆம் நூற்றாண்டில் ஆறகழூரை தலைநகராக கொண்டு ஆண்ட வாணகோவரையரின் மகதை நாட்டின் ஒரு பகுதியாக இருந்துள்ளது
12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாணகோவரையர்களுக்கும் ஹெய்சாள வீர நரசிம்மனுக்கும் இந்த பகுதியில் போர் நடந்ததாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் உள்ளன..
இந்த போரில் வென்ற வீரநரசிம்மனுக்கு இந்த இடத்தில் ஒரு பட்டம் கொடுத்திருக்கிறார்கள் 
இவரின் நினைவாகவே நரசிங்கபுரம் என்ற ஊர் ஏற்படுத்தபட்டிருக்க கூடும்
இவற்றிற்க்கு இன்னும் உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை.
நரசிங்கபுரம் ஆட்கொல்லி பாலம் அருகே உள்ள நரசிம்மர் சிலையும் இந்த ஊரில் உள்ள பழமையான பெருமாள் கோயிலும் இந்த கருத்துக்கு வலு சேர்கின்றன
இப்பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல புதிய விவரங்கள் கிடைக்க கூடும்
ஆறகழூர் வெங்கடேசன் பொன்

புதன், 24 ஆகஸ்ட், 2016

ஓமலூர் குத்துக்கல் கல்படை,கல்வட்டம்,கல்குவை,கல்திட்டை,குத்துக்கள் முதுமக்கள் தாழி



கல்படை,கல்வட்டம்,கல்குவை,கல்திட்டை,குத்துக்கள் முதுமக்கள் தாழி

ஒரு மாதம் முன்பு ஓமலூரை அடுத்த #அம்மன்கோயில்பட்டி#பிராமிகல்வெட்டை காண நான் Kalai SelvanKaliyappan SrinivasanManonmani Pudhuezuthu வீரராகவன் அய்யா ஆகியோர் சென்றிருந்தோம்...
பிராமி கல்வெட்டை பார்த்துவிட்டு வரும் வழியில் சிறிய அளவிலான சில #குத்துகற்கள் விளைநிலத்திலும் ஒரு#குத்துக்கல் ஒரு மேடையில் சிறிய அளவிலான பந்தல் அமைப்பின் உள்ளும் இருந்தது...
சரி இந்த குத்துக்கல் என்றால் என்ன..?
இந்த குத்துக்கல் என்றால் என்ன..?இதை அமைக்கவேண்டும் என மனிதனுக்கு ஏன்?எப்படி ஒரு என்ணம் தோன்றியது..?
கல்படை,கல்வட்டம்,கல்குவை,கல்திட்டை,குத்துக்கல் முதுமக்கள் தாழி
---------------------------------------------------------------------------------------------
பழங்காலத்தில் இருந்தே மனிதனுக்கு இறப்பின் மீது மிகுந்த பயம் இருந்தது...நாம் இறந்த பின் என்ன ஆவோம் என்ற கேள்வி அவன் முன் பெரிய கேள்விக்குறியாய் நின்றது....
இறந்த பின்னும் ஒரு வாழ்கை இருக்ககூடும் என்ற எண்ணம் சிலருக்கு ஏற்பட்டது..இறந்த உடல்களை பாதுகாப்பாய் வைக்க எண்ணினர்..
எகிப்தில் பிரமீடுகள் கட்டினர்
நம் தமிழ் முன்னோர்கள்..இறந்தோரின் உடலை
கல்படை,கல்வட்டம்,கல்குவை,கல்திட்டை,குத்துக்கள் முதுமக்கள் தாழி போன்றவை மூலம் பாதுகாத்து அந்த இடத்தை அடையாளப்படுத்த முயன்றனர்..அது பற்றிய ஒரு பார்வை...தகவல்கள் இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டவை...
சாட்சி – 1
இறந்தோரைப் புதைப்பது தமிழர் மரபு. அவ்வாறு தமிழரைப் புதைத்த இடங்கள் பல அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை ஈமக்குழிகள் என்பர். இவற்றைக் கற்பாறைகளைக் கொண்டு மூடிவைத்துப் பாதுகாக்கும் வழக்கம் இருந்துள்ளது. மூடப்படும் கல்லின் அளவு, மூடப்பட்ட விதம் ஆகியவற்றைக்கொண்டு இவற்றைக் கல்படை, கல்அறை, கல்குவை, கற்கிடை, கல்வட்டம், கல்திட்டை என்ற பெயர்களால் அழைக்கின்றனர். ஒரு வகையில் இறந்தோர் உடலைப் பதுக்கி, மறைத்து, புதைத்து வைப்பதால் இவற்றைப் பதுக்கைகள் என்று பொதுப்பெயரால் சுட்டினர். கல்லால் பதுக்கப்பட்டதால் கல்பதுக்கை, கற்பதுக்கை என்றனர்.
அப்பதுக்கைகளுக்குள் இறந்தோரின் உடல், அவருக்கு உணவுப்பொருட்கள் சிலவும் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் எனச் சிலவற்றையும் வைத்திருந்தனர். அகழ்வாய்வின் வழியாக அப்பதுக்கைகளுக்குள்ளிருந்து கண்டெடுக்கப்பட்ட பொருள்களை கார்பன் டேட்டிங் (C14) பரிசோதனை செய்ததில், அவற்றின் காலம் ஏறத்தாழ பொ.யு.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று அறியமுடிந்தது. இப்பதுக்கைகள் பற்றிய குறிப்புகள் புறநானூறு – 3, அகநானூறு – 109, கலித்தொகை – 12 ஆகிய சங்க இலக்கியச் செய்யுள் அடிகளில் காணப்படுகின்றன.
சாட்சி – 2
பதுக்கைகள் பெருகியபின்னர் அல்லது அவற்றில் புதர் மண்டுவதால் அவை இருந்த இடம் பற்றிய தெளிவுக்காக, அடையாளத்துக்காகப் புதிய பதுக்கைகளைத் தோற்றுவிக்கும் போது அவற்றின் அருகில் உயர்ந்த செங்குத்தான கல்லினை நிறுத்தினர். இதனை நெடுகல் என்றனர். ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டோ நெடுகல் நிறுத்தும் வழக்கம் இருந்துள்ளது. இத்தகைய நெடுகல் பற்றிய செய்திகளைப் புறநானூறு – 264, அகநானூறு – 269, 289 ஆகிய செய்யுள் அடிகள் தெரிவிக்கின்றன.
சாட்சி – 3
இறந்தோரைப் புதைத்த இடத்தில் அவரது உருவத்தையும் அவரின் சிறப்பையும் மக்களுக்கும் அடுத்த தலைமுறைக்கு அறிவிக்கவேண்டும் என்ற தொலைநோக்குச் சிந்தனையோடு அகன்ற கல்லில் அவரது உருவினைச் சிற்பமாகச் செதுக்கியும் அவரின் சிறப்பினைத் ‘தமிழி’ எழுத்தில் எழுதியும் வைத்துள்ளனர். அக்கல்லுக்கு நடுகல் என்று பெயர். இதற்கு நினைவுக்கல் என்ற பொதுப்பெயர் உண்டு. குத்துக்கல் என்றும் சுட்டுகின்றனர். இறந்தோர் வீரராக இருந்தால் இக்கல்லுக்கு வீரக்கல், வீரன்கல் என்றும் பெயரிட்டனர்.
நடுகல் பற்றிய குறிப்புகளைப் புறநானூறு – 221,223,232,335 அகநானூறு – 53,67,179, ஐங்குறுநூறு – 352, மலைபடுகடாம் – 386-389 ஆகிய செய்யுள் அடிகளில் காணமுடிகின்றது. நடுகல்லினைச் சிறுதெய்வமாகவும் வழிபட்டுள்ளனர்.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் அமைந்துள்ள புலிமான்கோம்பையில் கண்டெடுக்கப்பட்ட மூன்று நடுகற்கலிலும் உருவம் செதுக்கப்பட்டும் சிறப்பு எழுதப்பெற்றும் உள்ளன. தமிழி எழுத்தில் தூய தமிழ்ச்சொற்களில் எழுதப்பெற்றுள்ள அவ்வாசகங்களைப் படித்தறிந்த நடன. காசிநாதன் அவை பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டும் அதற்கு முன்னரும் என்று காலக்கணிப்பினைச் செய்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள தாதப்பட்டியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு நடுகல்லும் ஏறக்குறைய இதே காலக்கட்டத்தைச் சார்ந்ததே.
அப்படியானால் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டும் அதற்கு முன்னரும் பொதுவாகவே அனைவருக்கும் எழுத்தறிவு இருந்தது என்பது தெளிவாகின்றது.
சாட்சி – 4
இறந்தோரை ஒரு பெரிய பானையில் வைத்துப் புதைக்கும் வழக்கமும் இருந்துள்ளது. அந்தப் பெரிய பானைக்குத் தாழி என்று பெயர். அத்தாழிக்குள் இறந்தோரை அமர்ந்த நிலையிலோ அல்லது குத்தவைத்த நிலையிலோ வைத்துப் புதைத்துள்ளனர். அகழ்வாய்வில் பெரும்பான்மையாக இத்தாழிக்குள் இறந்தோரின் எலும்புகளும் அணி, மணிகள் சிலவும் தானியத் துகள்களும் கிடைத்துள்ளன.
மிக அண்மையில், மதுரை அருகே அயன்பாப்பாக்குடி பகுதியில் உள்ள சின்ன உடைப்பு என்ற இடத்தில் உள்ள கண்மாயின் மறுகால் வடிநிலப்பகுதி, அய்த்திரும்புக்கண்மாய் ஓடையின் வடிநிலப்பகுதி, கூடல்செங்குளம் மேட்டுப்பகுதி ஆகிய மூன்று நீர்நிலைகள் சூழ்ந்த பகுதியில் தொல்பழங்காலப் புதைமேடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இப்புதைமேட்டில் முதுமக்கள் தாழிகள் பல புதைக்கப்பட்டுள்ளன. இவை பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவை.
தாழியிலிட்டுப் புதைக்கும் வழக்கத்தைப் புறநானூறு – 228,236,256,364, பதிற்றுப்பத்து – 44, நற்றிணை – 271, அகநானூறு – 275 ஆகிய செய்யுள் அடிகளில் சுட்டியுள்ளன.

புதன், 13 ஜனவரி, 2016

kural-வாணகோவரையரின் கோயில் கலைப்பாணி மகதை மண்டலம்

வி.கூட்டுரோடு- வேப்பூர் சாலையில் பைக் சீறி பாய்ந்து கொண்டிருந்தது...மனமோ மகதை தேசத்தை பற்றி சிந்தித்து கொண்டிருந்தது..இந்த சாலை வழியாகத்தானே நம் மன்னர் பொன் பரப்பின வாணகோவரையன் எத்தனையோ முறை பயணித்திருப்பார் என்று என்ணியபடியே பயணித்தேன்..நெடுஞ்சாலைத்துறையால் வைக்கப்பட்டிருந்த ஊர் பெயர்களை கவனித்தபடியே சென்றேன்....
குரால்...............
எங்க ஊரிலிருந்து வெறும் 13 கி.மீ தொலைவுதான்...ஆனா இதுவரை அங்கு போனதில்லை..ஊர் பெயர் பலகையை பார்த்தவுடன் பைக் நான் சொல்லாமலேயே அந்தப்பாதையில் வளைந்தது....
ஒரு சின்ன கிராமம்தான்..இயற்கை எழிலோடும் கொஞ்சும் புன்னகையோடும் என்னை வரவேற்றது....
எதிர்பார்த்தது வீண்போகவில்லை..பழமை மாறாமல் அப்படியே இருந்தது..எங்க ஊர் ராசா பொன்பரப்பின வாணகோவரயன்..மகதை மண்டல ராசா மகதைப்பெருமாள் கட்டிய கோயில் அப்படியே இருந்தது...ஆனால் ரொம்பவும் சிதைந்து போய்....
இதை கட்ட எம்மன்னர் எவ்வளவு உழைத்திருப்பார் எவ்வளவு பணம் செலவாயிருக்கும் எவ்வளவு மனித உழைப்பு தேவைப்பட்டிருக்கும்..ஆனால் இன்று வணங்குவோரின்றி சீந்துவாரின்றி பாழடைந்து கிடக்கிறது..
கோவில் சிலைகளும் கடவுள் சிற்பங்களும் கூட கொள்வாறின்றி பராமரிப்பின்றி அம்போ என நின்றன....
ஒரே ஒரு சின்ன ஆறுதல் அந்த கோவில் புணரமைப்புக்கும் வரலாற்றை பதியும் முயற்சியையும் அந்த ஊரைச்சார்ந்த தலமை ஆசிரியர் துரைசாமி அவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளார்..அங்குள்ள 4 கல்வெட்டுக்களும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு சிறு நூலாக வரலாற்று மலராக ..போடப்பட்டுள்ளது...
கோவிலின் பெயர் திரு புவனேசுவரன் கோயில்
பாதி கற்றளியாகவும் பாதி செங்கல் தளியாகவும் உள்ளது..
இந்த கோயிலில் சிவலிங்கம்,காலபைரவர்,யக்ரீவர்,,லட்சுமி,சரஸ்வதி,சண்டிகேசுவரர்,மகாகணபதி,முருகன்,திரிபுவனேசுவரியம்மன்,தட்சிணாமூர்த்தி,வக்கரகாளியம்மன்(நிசும்பசூதனி..?),விஷ்ணுதுர்க்கை போன்ற சிலைகளும் உள்ளன..
இங்கு வாணகோவரையர் கல்வெட்டு மட்டுமே காணப்படுகிறது அதற்க்கு பின் வந்த பாண்டியர்,விஜயநகர பேரரசு,நாயக்கர்கால கல்வெட்டுக்கள் ஏதும் காணப்படவில்லை..
மூன்றாம் குலோத்துங்கன்,மூன்றாம் ராசராசன் பெயர்கள் கல்வெட்டில் வருவதால் அப்போது அவர்கள் கீழ் மகதை நாட்டின் தலைநகராய் ஆறகளூரை கொண்டு ஆண்ட பொன்பரப்பின வாணகோவரையன் கட்டிய கோயில் இது என்று உறுதியாகிறது
வாணகோவரையனுக்கு பின் கட்டுமானமும் பராமரிப்பும் நடைபெறாததால் இது ஒரிஜினல் கலப்பில்லா வாணகோவரையரின் முத்திரை...இங்கு பொன் பரப்பின வாணகோவரையனின் சிற்பமும் ஓரிடத்தில் காணப்படுகிறது..
காக்க வேண்டிய பொக்கிசம் இது..