தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு!
ஆய்வாளர் இல. கணபதிமுருகன்
மனிதனின் இறை நம்பிக்கையும் தொடர்ந்து எழுந்த வழிபாட்டு முறைகளும் பயத்தின் அடிப்படையில் எழுந்தன.
- இடி,
- மின்னல்,
- மழை,
- சூரிய வெப்பம்,
- கொடிய விலங்குகள்
ஆகியன மனிதனை பயமுறுத்தின. அதே வேளை மரங்கள் நிழலையும் கனிகளையும் தந்தன. இப்படித்தான் இறைபக்தி ஏற்பட்டது. அப்பக்தி பரிணமித்து வழிபாட்டு முறைகளாய் எழுந்தது. மரங்கள் மனிதனின் குலக்குறி நம்பிக்கையின் (Totemism)அடையாளமாக விளங்கின. இறைவனென்று கொண்டவற்றுக்குப் படையல்கள், பலிகள் இட்டு வழிபட்டனர். இயற்கை வழிபாடு உருவ வழிபாடாக வளர்ச்சியடைந்து நிலைத்தது. எனினும் நடுகல் வழிபாடு மற்றும் சதிகல் வழிபாடு போன்றவையும் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன.
நடுகல் வழிபாட்டின் தோற்றம்:
கற்களை அடையாளமாக நடுவதால் "நடுகல்" எனப்பட்டது. இம்முறை ஒரு வகையில் சிவநெறியில் லிங்கத்தை நடுவது போன்றதாகும். நடுகல் நாட்டுப்புற முறையாகவும், பள்ளிப்படைகோயில் (மன்னர்கள் இறந்த இடத்தில் கல்நட்டு கோயில் எழுப்புதல்) அரசபாணியாகவும் கருதப்பட்டது. சங்க காலத்தில் தன்னால் இயன்றவரையில் போர்புரிந்து உயிர்விட்ட வீரனது உடலைப் புதைத்த இடத்தில் (அ) எரித்த இடத்தில் ஒரு கல்லை நடுவர். அக்கல்லில் அவனது உருவத்தையும், பெயரையும் இன்னபோரில், இவ்வாறு போர்புரிந்து மாண்டான் என்ற விவரத்தையும் பொறிப்பர். இக்கல்லே நடுகல் எனப்படும்.
கற்குவைகளால் மூடப்பட்ட நடுகல், "கற்பதுக்கை" என்னும் பெயரில் அழைக்கப்பட்டது. போரில் ஈடுபடும் வீரர்கள் வெற்றிவாகை சூடி வரவேண்டுமென்று அவர்தம் மனைவிமார்கள் தம் குடி முன்னோரின் நடுகல் முன் அமர்ந்து வழிபட்டனர். நன்னனுடைய மலைகள் மீது இத்தகைய நடுகற்கள் அதிகளவில் இருந்தன. அவ்வழியாகச் சென்ற கூத்தர், பாணர் போன்றோர் யாழ் வாசித்து அத்தகைய நடுகல் வீரர்களை வழிபட்டுச் சென்றனர்.
நடுகல் எடுப்பு விழா:
நடுகல் எடுப்பு விழா அறுவகைப்படும். அவை:-
- கற்காண்டல்,
- கால்கோள்,
- கல்லை நீர்ப்படுத்துதல்,
- கல்லை நடுதல்,
- வீரன்-பெயர்-செயல் பொறித்தல்,
- கால் கொண்ட தெய்வத்திற்கு சிறப்பு செய்து வாழ்த்துதல்.
செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் எடுத்தமை இதே மரபினதாகும்.
நடுகல் வணக்கத்தின் பொருள்:
"தாய்நாட்டின் பொருட்டு போரிட்டு உயிர்நீத்த வீரத்தமிழனுக்கு நினைவுக்கல்லை நட்டு அவ்வீரனை போற்றுதல்," அவனை சான்றாகக்கொண்டு மற்ற தமிழர் நடக்கமுயலல், அவனது புகழ் உலகம் உள்ளளவும் நிலவுக! என்பனவேயாகும். வீரர்கள் மட்டுமல்லாது, விலங்குகளின் நினைவாகக்கூட நடுகற்கள் நடப்பட்டன. காளைகளின் நினைவாக நடப்பட்ட நடுகற்கள் தும்கூர் (கர்நாடக மாநிலம்) மாவட்டத்தில் அதிகளவில் காணப்படுகின்றன. தமிழகத்தில் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானுக்கு அருகிலுள்ள குப்புக்குறிச்சி என்னுமிடத்தில் "பசுக்கூட்டம்" என்றழைக்கப்படும் இத்தகைய நடுகற்கள் காணப்படுகின்றன.
தமிழகத்தின் முதல் நடுகல் கண்டுபிடிப்பு:
எகிப்து நாட்டில் பிரமிடுகள் எவ்வாறு வரலாற்றுச் சின்னங்களாகத் திகழ்கின்றனவோ, அதே போன்று தமிழகத்தில் "நடுகல்" திகழ்கிறது. இவ்வாறு எழுப்பப்பட்ட நடுகல்லை முதலில் கண்டெடுத்தவர் பேரா.சுந்தரம் பிள்ளை. ஆரல்வாய்மொழியை (கன்னியாகுமாரி மாவட்டம்) அடுத்துள்ள கோட்டைக்கரையில் பாண்டிய மன்னன் மாறன்சடையனின் (கி.பி 765-790) காலத்தில் வட்டெழுத்தில் செதுக்கப்பட்ட ஒரு நடுகல்லை பேராசிரியர் கண்டறிந்தார். இரணகீர்த்தி (மாறன் சடையனின் படையைச் சேர்ந்தவன்) என்ற வீரனது நினைவாக நடுகல் நடப்பட்டிருப்பதை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பல நடுகற்கள் தமிழகம் முழுவதும் வரலாற்றாளர்களால் கண்டறியப்பட்டன.
நடுகல் முறையின் சிறப்புகள்:
போரில் இறந்தவர் அல்லாமல், அறிவிலும் ஒழுக்கத்திலும் மிக்கார் நினைவின் பொருட்டு "கல் எடுத்தலும்" உண்டு. சங்கச் செய்யுள் ஒன்றில் மங்கையின் வீரம் பற்றிக் கூறும் போது, "எந்தை, முன் நடந்த போரில் இறந்துபட்டு கல் ஆனான்" என மங்கையின் கூற்றாகப் புலவர் குறிக்கிறார். "பன்றிகுத்திப்பட்டான் கல்" என்பது கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு நடுகல்லாகும்.
சதிகல் வழிபாடு:
நடுகல் வழிபாட்டிற்கும் சதிகல் வழிபாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கணவனது இறப்பினை அறிந்தவுடன், தீப்பாய்ந்து இறக்கும் பெண்களின் நினைவாக நடப்படும் கல் "சதிகல்" எனப்பட்டது. மணிமேகலையில் பத்தினிப்பெண்டிர் மூவகையினராகப் பிரிக்கப்படுகின்றனர்.
- கணவனுடன் எரிமூழ்கி இறப்பவர் முதலாமவர்,
- தனியே எரிவளர்த்து அதனில் வீழ்ந்து இறப்பவர் இரண்டாமவர்,
எஞ்சியவர் கணவனை நினைத்து அடுத்த பிறவியில் அவனுடன் வாழ்வதற்காக, கைம்மை நோன்பு நோற்பர்.
ரிக்வேதத்திலும், அதர்வண வேதத்திலும் "சதி" பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. உடன்கட்டை ஏறும்போது சொல்ல வேண்டிய மந்திரங்களும் இதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. (ரிக். 10.18.8: அத.28,3.1) இதன் வாயிலாக உடன்கட்டை ஏறுதல் வழக்கத்தின் பழைமையை உணரலாம்.
ரிக்வேதத்திலும், அதர்வண வேதத்திலும் "சதி" பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. உடன்கட்டை ஏறும்போது சொல்ல வேண்டிய மந்திரங்களும் இதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. (ரிக். 10.18.8: அத.28,3.1) இதன் வாயிலாக உடன்கட்டை ஏறுதல் வழக்கத்தின் பழைமையை உணரலாம்.
மன்னர்தம் ஆதரவு:
சேரன் செங்குட்டுவன் கி.பி 2-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். சேரன் செங்குட்டுவனின் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மறைந்தபோது, குலவழக்கப்படி நெடுஞ்சேரலாதனின் மனைவியான "நற்சோணை" என்ற சோழ மகள் உடன்கட்டை ஏறினாள். செங்குட்டுவன் தன் தாயாரின் நினைவாக கோயில் எடுக்க எண்ணி, இமயமலையிலிருந்து கல் கொண்டு வந்து கோயில் எடுத்தலே சிறப்பு எனக்கருதி இமயத்தின் மீது படையெடுத்து கல்லெடுத்து கங்கையில் நீராட்டி நாடு மீண்டான். "நற்சோணையம்மன்" சேரர் குலதெய்வம் ஆனாள். தீப்பாய்ந்து இறந்த மறப்பெண்டிர் வம்சத்தார்க்கு மன்னர்களும், செல்வந்தர்களும் நிலங்களைத் தானமாக வழங்கினார். அவ்வாறு வழங்கப்பட்ட நிலங்கள்
- உதிரப்பட்டி,
- ரத்தக்காணி,
- தீப்பாஞ்சகாணி
எனக் குறிக்கப்பட்டன.
பத்தினித் தெய்வ வழிபாடு:
உடன்கட்டை ஏறிய பெண்கள் பத்தினித் தெய்வமாகவும் வணங்கப்பட்டனர். கோவலனை இழந்த கண்ணகி மதுரையை விட்டுப் புறப்பட்டு வைகைக்கரை வழியே ஆவேசமாகச் சென்றாள், பின்னர் வருஷநாடு மலைவழியாக சுருளிமலையின் மேற்குத் தொடர்ச்சியான மங்கலதேவி மலைக்கு வருகிறாள், கண்ணகி, தெய்வமான இடம் இதுவேயாகும். சேரன் செங்குட்டுவன் கண்ணகியின் நினைவாக இவ்விடத்தில் கோயிலை உருவாக்கினான்.
பத்தினித் தெய்வ வழிபாட்டின் பரவல்:
முதலாம் இராசராசன், மங்கலதேவி கோட்டத்திற்கு வந்து கண்ணகியின் சிறப்பை உணர்ந்து, திருப்பணி செய்ததோடு மட்டுமல்லாது, பிடிமண் எடுத்துச் சென்று தஞ்சையில் பத்தினித் தெய்வ வழிபாட்டைத் தொடங்கி வைத்தான். இக்கோயில் சிங்கள நாச்சியார் - செங்கள நாச்சியார் என்று வழங்கி பின் செங்களாச்சியம்மன் கோயிலாக தற்போது உள்ளது.
யாழ்ப்பாணத்தில் முதலாவதாக கண்ணகிக்குக் கோயிலமைத்த இடம் "அங்கணக்கடவை" எனப்படும்.
சிங்களநாட்டில் "பத்தினி தெய்யோ" என வணங்கப்படும் தெய்வம் கண்ணகியே என்பது இலங்கையின் வரலாற்றாளரான செ. இராசநாயகத்தின் கருத்தாகும்.
நடுகல் வழிபாடும், சதிகல் வழிபாடும் இன்றைய காலகட்டத்தில் சிறுதெய்வ வழிபாடுகளாக மக்கள் மத்தியில் நிலைபெற்றுவிட்டதாகவே கூறவேண்டும். நன்றி:- தமிழ்மணி (தினமணி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக