நவகண்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நவகண்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 9 ஜனவரி, 2021

உலிபுரம் கல்வெட்டும், நவகண்ட சிற்பமும்

 உலிபுரம் கல்வெட்டும் நவகண்ட சிற்பமும்
   


 2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது மனைவிக்கு தேர்தல் பணி உலிபுரம் என்ற ஊரில் அளிக்கப்பட்டது.அதற்க்கு முன் உலிபுரம் என்ற ஊர் பெயரை கேள்விப்பட்டிருந்தாலும் அந்த ஊருக்கு போனதில்லை. தேர்தலுக்கு முதல் நாள் மனைவியை அழைத்துக்கொண்டு அந்த ஊருக்கு சென்றேன். மனைவி தேர்தல் பணியை கவனிக்க, நான் உள்ளூர் பிரமுகர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். என் மனைவி ஒருவரிடம் நான் வரலாறு மற்றும் கல்வெட்டு ஆய்வுகள் செய்து கொண்டிருப்பதை பற்றி சொல்லி விட்டு உங்க ஊரில் ஏதாவது கல்வெட்டு இருக்கா என கேட்டார்.

      



   எங்க ஊரில் ஒரு சிவன் கோயில் ஒரு காலத்தில் இருந்தது. ஆனா இப்ப இல்லை மேடம். ஆனா அங்க எழுத்து இருக்கிற மாதிரி ஒரு கல்லை பாத்த நினைவு இருக்கு.

  என் மனைவி என்னிடம் சொல்ல , இரவு 7 மணி ஆயிடுச்சே, சரி இருட்டாக இருந்தாலும் பரவாயில்லை என அவருடன் கிளம்பினேன். ஊருக்கு வெளியே 2 கி.மீ தொலைவில் ஸ்வேதா நதியின் தென்கரையில் இருந்த அந்த சிவன் கோயிலை சென்றடைந்தோம். கோயில் முற்றிலும் அழிந்து போய்விட்டது. மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மாதவன் என்பவர் முன்னெடுத்து புதிதாக கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளார்.

    



  அந்த கோயிலின் முன்பாக நடப்பட்டிருந்த ஒரு பலகைகல்லில் ஒரு கல்வெட்டும், லிங்கமும்,சில உதிரி சிற்பங்களும் மட்டுமே அங்கு ஏற்கனவே ஒரு கோயில் இருந்ததற்கு சான்றாக நின்றிருந்தது.


    



இரவு ஒன்பது மணிக்கு கிளம்பி பள்ளிக்கு சென்று உறங்கினேன். ஒரு வாரம் கழித்து விழுப்புரம் வீரராகவன் ஐயாவுக்கு தகவல் சொல்லி ,இருவரும் உலிபுரம் சென்று அந்த கல்வெட்டை படி எடுத்து படித்தோம்.

       



   அப்போது கொரானா வந்ததால் இந்த செய்தியை வெளியிட முடியவில்லை. கிட்டத்தட்ட ஓராண்டு கடந்தது. ஒருநாள் உலிபுரம் மாதவன் அவர்களிடம் இருந்து ஒரு போன்..

      



   சார் நம்ம கோயிலுக்கு முன்னாடி இருந்த ஒரு வயலில் இருந்த புதரில் 2 சிலை இருக்கு என சொல்லி புகைப்படம் அனுப்பினார்.அதை பார்த்ததும் நவகண்டம் என புரிந்து கொண்டேன்

   



  அடுத்த நாள் பைக் உலிபுரத்தை நோக்கி பறந்தது. நவகண்ட வீரர்களை படம் எடுத்து கொண்டேன்.

   



  பின் வந்த நாளிதழ், தொலைக்காட்சி செய்தி உங்களுக்காக
     

வணக்கம் நண்பர்களே. இந்த ஆண்டு 2021 . முதல் கண்டறிதல் இது.
*சேலம் வரலாற்று ஆய்வுமையம் கண்டறிந்த உலிபுரம் கல்வெட்டுகள், நவகண்டம் பற்றிய செய்தி இன்றைய காலைக்கதிர் நாளிதழ், தினமணி , தினமலர் இணைய தளம், ஜெயா பிளஸ் தொலைக்காட்சி, மாலை மலர் நாளிதழ், மாலை முரசு,நக்கீரன்,சன் செய்தி ஆகியவற்றில் வெளிவந்துள்ளது.செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனங்களுக்கும் செய்தியாளர்கள் திரு தமிழ்செல்வன், திரு சரவணன், திரு ஆரோக்கியராஜ், திரு சிற்றரசு , திரு
கவிஞர்.பெ.பெரியார் மன்னன்
ஆகியோருக்கு சேலம் வரலாற்று ஆய்வு மையம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது*
ஆறகழூர் பொன்.வெங்கடேசன் M.A(HIS),M.A(JMC),M.A(PU.AD), M.PHIL,D.pharm
தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம்
செல் எண் : 9047514844, 7010580752

உலிபுரத்தில் 489 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டும் நவகண்ட சிற்பங்களும் கண்டெடுப்பு

சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், ஆய்வுமையத்தலைவர் ஆறகளூர் பொன்.வெங்கடேசன் ஆகியோர் மாதவன் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் உலிபுரம் பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அங்குள்ள சுவேதா நதியின் தென்கரையில் 16 ஆம் நூற்றாண்டில் ஒரு சிவன் கோயில் இருந்து தற்போது அழிந்து விட்டது. அதை புதிதாக கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இக்கோயிலின் முன்பு இரு கல்வெட்டுகளும், முன்புறமுள்ள வயலில் இரு நவகண்ட சிற்பங்களும் கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

கல்வெட்டு

இக்கோயிலில் இரு கல்வெட்டுகள் காணப்படுகின்றது.இதில் ஒன்று முழுமையான கல்வெட்டு, மற்றொன்று துண்டு கல்வெட்டு ஆகும். இதன் காலம் 16 ஆம் நூற்றாண்டு ஆகும்.

துண்டு கல்வெட்டு

இக்கோயிலின் முன்பு உடைந்த நிலையில் ஒரு துண்டு கல்வெட்டு காணப்படுகிறது. இதன் முன்புறம் சூரியன்,பிறை நிலா, சூலம் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. சிதைந்த நிலையில் 3 வரிகள் உள்ளன. ஸ்வஸ்திஸ்ரீ சகாப்தம் என கல்வெட்டு துவங்குகிறது. இதன் மறுபுறத்தில் 13 வரிகளில் கல்வெட்டு உள்ளது. இங்கிருந்த கோயிலை அம்பலத்தாடி நாயனார் கோயில் என குறிக்கிறது.
16 ஆம் நூற்றாண்டில் ஆறகளூரை தலைநகராக கொண்ட மகதை மண்டலத்தின் ஒரு பகுதியாக உலிபுரம் இருந்துள்ளது. அப்போது மகதை மண்டலத்தின் பாளையக்காரராக துலுக்கண்ண நாயக்கர் என்பவர் இருந்துள்ளார். இவரின் கீழ் உலிபுரம் பகுதியை ஆண்ட தளவாய் திருமலையார் என்பவர் இங்குள்ள இறைவன் அம்பலத்தாடி நாயனாருக்கு மடம் ஒன்றை அமைக்க அரை மனையையும், இந்த மடத்தை நிர்வகிக்க ஆகும் செலவுக்காக தும்மலப்பட்டி என்ற ஊரில் நன்செய் நிலத்தையும் தானமாக கொடுத்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இரண்டாவது கல்வெட்டு

கோயிலின் முன்புறம் நடப்பட்டுள்ள ஒரு பலகைக்கல்லில் இரு புறமும் 44 வரிகளில் இக்கல்வெட்டு காணப்படுகிறது. இக்கல்வெட்டு கி.பி.1531 ஆம் ஆண்டு அச்சுததேவ மகராயர் காலத்தில் வெட்டப்பட்டுள்ளது. உலிபுரம் என்றழைக்கப்படும் ஊர் அப்போது புலியுரம்பூர் எனவும், இறைவன் திருஅம்பலமுடைய தம்பிரான் என்றும் அழைக்கப்பட்டுள்ளனர். அச்சுததேவ மகராயர் காலத்தில் மகதை மண்டலத்து ஆத்தூர் கூற்றத்தில் புலியுரம்பூர் அமைந்திருந்தது. இப்பகுதிக்கு மாதைய நாயக்கர் என்பவர் அப்போது பாளையக்காரராக இருந்துள்ளார். அவர் திரு அம்பலமுடைய தம்பிரான் கோயில் பூசைக்கும், திருப்பணிக்கும் அனந்தாழ்வார் பிள்ளை என்பவருக்கு தன்மமாக செக்கடிக்கோம்பை, தும்பலப்பட்டி என்ற இரு கிராமங்களை தானமாக தந்துள்ளார். இக்கிராமங்களின் நான்கு எல்லைகளுக்கு உட்பட்ட நஞ்சை, புஞ்சை நிலங்களின் எல்லைகளை அளவிட்டு அங்கு சூலக்கல் எனப்படும் எல்லை கற்கள் நடப்பட்டன. அந்த நிலங்களில் வரும் வருவாய் இறைவனின் பூசைக்கும்,திருப்பணிக்கும் செலவிடப்படவேண்டும். இந்த தானத்தை போற்றி அழியாமல் காப்பவர்கள் கங்கை கரையிலே காரம் பசுவை தானமாக கொடுத்த புண்ணியத்தை பெறுவார்கள். இந்த தானத்தை அழிப்பவர்கள் கங்கை கரையிலே தன் தாய், தந்தை, குருவை, கொன்ற பாவத்தை அடைவார்கள் என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தானம் செய்யப்பட்ட இரு ஊர்களும் இன்றும் அதே பெயரில் வழங்கி வருகிறது.

நவகண்டம்

நவகண்டம் கொடுத்துக்கொள்ளும் வழக்கம் பல்லவர்கள் காலத்தில் இருந்தே இருந்து வந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே போர் நடக்கும் போது தன் நாடு வெற்றி பெற கொற்றவையின் துணை வேண்டி அத்தெய்வத்துக்கு ஒரு வீரன் தன்னயே சுயபலி கொடுத்துக்கொள்வது வழக்கமாகும். போர் நடக்கும் முன் கொற்றவை கோயிலுக்கு வீரர்கள் சென்று பூசை செய்வர். அப்போது நவகண்டம் கொடுத்துக்கொள்ளும் வீரர் தன் உடலில் உள்ள ஒன்பது இடங்களில் இருந்து சதையை அறிந்து கொற்றவையின் முன் வைப்பர், ஒன்பதாவதாக தன் தலையை தானே அரிந்து சுயபலி கொடுத்துக்கொள்வர். இப்படி பலி கொடுத்துக்கொள்ளும் வீரர்களுக்கு வைக்கப்படும் நடுகல்லே நவகண்டம் எனப்படும்.இந்த வீரர்களுக்கு உதிரப்பட்டியாக வீடும், நிலமும் வழங்கும் வழக்கமும் இருந்துள்ளது.

உலிபுரம் நவகண்ட நடுகல்

உலிபுரம் அம்பலத்தாடி நாயனார் சிவன் கோயில் இருந்த இடத்திற்கு முன்புறம் உள்ள வயலில் ஒரு புதருக்குள் இரு நவகண்ட நடுகல் சிற்பங்கள் கண்டறியப்பட்டன. இரண்டும் ஒரே மாதிரியான சிற்ப அமைதியை கொண்டுள்ளன. இதன் காலம் 16 ஆம் நூற்றாண்டாக கருதலாம். ஒரே போரில் வெற்றிபெற நவகண்டம் கொடுத்துக்கொண்ட வீரர்களாக இவர்கள் இருக்கலாம். பல்லவர்கள் ,சோழர்கள் காலத்தில் நடுகல்லில் அந்த வீரனின் பெயர்,ஊர்,எதற்காக இறந்தான் போன்ற விவரங்கள் கல்வெட்டாக பொறிக்கப்பட்டு இருக்கும். ஆனால் 12 ஆம் நூற்றாண்டுக்குப்பின் நடுகல்லில் கல்வெட்டை வெட்டி வைக்கும் வழக்கம் மறைந்து விட்டது. இந்த இரு நவகண்ட நடுகல்லிலும் எழுத்துக்கள் ஏதும் காணப்படவில்லை.

3 அடி உயரம், நேரான கொண்டை,கொண்டை முடிச்சுடன் உள்ளது. முகமானது சற்று தேய்ந்து சிதைந்துள்ளது. காதணிகள், கழுத்தில் சவடி,சரபளி போன்ற அணிகலன்கள் காணப்படுகிறது. வலது கையில் ஒரு நீண்ட வாளானது கழுத்துக்கு நேராக காட்டப்பட்டுள்ளது. ஒரு நடுகல் நவகண்டம் என உறுதி செய்ய இப்படி கழுத்துக்கு நேரே கத்தி காட்டப்படும்.இடது கையில் ஒரு நீண்ட வாள் பூமியை தொட்ட நிலையிலும் உள்ளது. தோள்களில் தோள் வளையம், மணிக்கட்டில் கை வளையம், கால்களில் வீரக்கழலும் காணப்படுகிறது. அரையாடை ஆடை முடிச்சுடன் உள்ளது. வலது காலானது சற்று மடித்தும், பாதம் வலதுபக்கம் திரும்பிய நிலையிலும் உள்ளது. இப்பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்று தடயங்கள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

பத்திரிக்கை செய்திகளும் இணைய இணைப்புகளும்

காலைக்கதிர்

                              தினமணி
                



                                டைம்ஸ் ஆப் இந்தியா

                                      மாலைமலர்

                                மாலைமுரசு
                                
   இணைய தள இணைப்புகள்

    etc பாரத் சேனல்

     https://react.etvbharat.com/tamil/tamil-nadu/state/salem/the-salem-historical-research-center-is-conducting-research-on-the-inscriptions-and-navakanda-sculptures/tamil-nadu20210110110935930

டைம்ஸ் ஆப் இந்தியா

             https://timesofindia.indiatimes.com/city/chennai/two-16th-century-hero-stones-found-at-tamil-nadus-ulipuram/articleshow/80126521.cms?fbclid=IwAR2Bk2gHcpZ4oTn_Nl6jJV33POzemSvt2zk7CzierYO3DLanDicXcWYbah4


தினமணி

https://www.dinamani.com/latest-news/sirappu-seithigal/2021/jan/02/discovery-of-2-inscriptions-and-2-navakanda-sculptures-dating-back-to-489-years-at-ulipuram-3536131.html?fbclid=IwAR1xMeb1YQKpRtSpfe49n9jd9p8VXRupIgs_n04p28psO_VyMePP_fQlxZU


தினமலர்

https://www.dinamalar.com/news_detail.asp?id=2682147&fbclid=IwAR1bn1Le3mEHuutWjOGXCM3B-7roelr_wzig-UmsoXBREsTwz4uz8_6Qy1Y

நக்கீரன்

https://nakkheeran.in/special-articles/special-article/discovery-489-year-old-inscriptions-and-navakanda-sculptures?fbclid=IwAR1YiCoSCUJ-SPsvjhgusVB4tqHig649tKauApZ6l_EwaHHypgzjWtmEOPo


ஜெயாபிளஸ் தொலைக்காட்சி

https://www.youtube.com/watch?reload=9&v=JitpqNfb-eo&feature=share&fbclid=IwAR2SGT9jSaRtmxGPFDlSFYSlbVLbjhXF4-a6su8lTW7o3fTZ3sK_VKWfLFE

news next இணையதளம்
https://tamil.newsnext.live/the-salem-historical-research-center-is-conducting-research-on-the-inscriptions-and-navakanda-sculptures/





ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

தமிழகத்தில் நடுகல் சதிகல் வழிபாடு

தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு!
ஆய்வாளர் இல. கணபதிமுருகன்


மனிதனின் இறை நம்பிக்கையும் தொடர்ந்து எழுந்த வழிபாட்டு முறைகளும் பயத்தின் அடிப்படையில் எழுந்தன.

  • இடி,
  • மின்னல்,
  • மழை,
  • சூரிய வெப்பம்,
  • கொடிய விலங்குகள்
ஆகியன மனிதனை பயமுறுத்தின. அதே வேளை மரங்கள் நிழலையும் கனிகளையும் தந்தன. இப்படித்தான் இறைபக்தி ஏற்பட்டது. அப்பக்தி பரிணமித்து வழிபாட்டு முறைகளாய் எழுந்தது. மரங்கள் மனிதனின் குலக்குறி நம்பிக்கையின் (Totemism)அடையாளமாக விளங்கின. இறைவனென்று கொண்டவற்றுக்குப் படையல்கள், பலிகள் இட்டு வழிபட்டனர். இயற்கை வழிபாடு உருவ வழிபாடாக வளர்ச்சியடைந்து நிலைத்தது. எனினும் நடுகல் வழிபாடு மற்றும் சதிகல் வழிபாடு போன்றவையும் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன.

நடுகல் வழிபாட்டின் தோற்றம்:

கற்களை அடையாளமாக நடுவதால் "நடுகல்" எனப்பட்டது. இம்முறை ஒரு வகையில் சிவநெறியில் லிங்கத்தை நடுவது போன்றதாகும். நடுகல் நாட்டுப்புற முறையாகவும், பள்ளிப்படைகோயில் (மன்னர்கள் இறந்த இடத்தில் கல்நட்டு கோயில் எழுப்புதல்) அரசபாணியாகவும் கருதப்பட்டது. சங்க காலத்தில் தன்னால் இயன்றவரையில் போர்புரிந்து உயிர்விட்ட வீரனது உடலைப் புதைத்த இடத்தில் (அ) எரித்த இடத்தில் ஒரு கல்லை நடுவர். அக்கல்லில் அவனது உருவத்தையும், பெயரையும் இன்னபோரில், இவ்வாறு போர்புரிந்து மாண்டான் என்ற விவரத்தையும் பொறிப்பர். இக்கல்லே நடுகல் எனப்படும்.
கற்குவைகளால் மூடப்பட்ட நடுகல், "கற்பதுக்கை" என்னும் பெயரில் அழைக்கப்பட்டது. போரில் ஈடுபடும் வீரர்கள் வெற்றிவாகை சூடி வரவேண்டுமென்று அவர்தம் மனைவிமார்கள் தம் குடி முன்னோரின் நடுகல் முன் அமர்ந்து வழிபட்டனர். நன்னனுடைய மலைகள் மீது இத்தகைய நடுகற்கள் அதிகளவில் இருந்தன. அவ்வழியாகச் சென்ற கூத்தர், பாணர் போன்றோர் யாழ் வாசித்து அத்தகைய நடுகல் வீரர்களை வழிபட்டுச் சென்றனர்.
நடுகல் எடுப்பு விழா:

நடுகல் எடுப்பு விழா அறுவகைப்படும். அவை:-
  1. கற்காண்டல்,
  2. கால்கோள்,
  3. கல்லை நீர்ப்படுத்துதல்,
  4. கல்லை நடுதல்,
  5. வீரன்-பெயர்-செயல் பொறித்தல்,
  6. கால் கொண்ட தெய்வத்திற்கு சிறப்பு செய்து வாழ்த்துதல்.
செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் எடுத்தமை இதே மரபினதாகும்.

நடுகல் வணக்கத்தின் பொருள்:

"தாய்நாட்டின் பொருட்டு போரிட்டு உயிர்நீத்த வீரத்தமிழனுக்கு நினைவுக்கல்லை நட்டு அவ்வீரனை போற்றுதல்," அவனை சான்றாகக்கொண்டு மற்ற தமிழர் நடக்கமுயலல், அவனது புகழ் உலகம் உள்ளளவும் நிலவுக! என்பனவேயாகும். வீரர்கள் மட்டுமல்லாது, விலங்குகளின் நினைவாகக்கூட நடுகற்கள் நடப்பட்டன. காளைகளின் நினைவாக நடப்பட்ட நடுகற்கள் தும்கூர் (கர்நாடக மாநிலம்) மாவட்டத்தில் அதிகளவில் காணப்படுகின்றன. தமிழகத்தில் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானுக்கு அருகிலுள்ள குப்புக்குறிச்சி என்னுமிடத்தில் "பசுக்கூட்டம்" என்றழைக்கப்படும் இத்தகைய நடுகற்கள் காணப்படுகின்றன.

தமிழகத்தின் முதல் நடுகல் கண்டுபிடிப்பு:

எகிப்து நாட்டில் பிரமிடுகள் எவ்வாறு வரலாற்றுச் சின்னங்களாகத் திகழ்கின்றனவோ, அதே போன்று தமிழகத்தில் "நடுகல்" திகழ்கிறது. இவ்வாறு எழுப்பப்பட்ட நடுகல்லை முதலில் கண்டெடுத்தவர் பேரா.சுந்தரம் பிள்ளை. ஆரல்வாய்மொழியை (கன்னியாகுமாரி மாவட்டம்) அடுத்துள்ள கோட்டைக்கரையில் பாண்டிய மன்னன் மாறன்சடையனின் (கி.பி 765-790) காலத்தில் வட்டெழுத்தில் செதுக்கப்பட்ட ஒரு நடுகல்லை பேராசிரியர் கண்டறிந்தார். இரணகீர்த்தி (மாறன் சடையனின் படையைச் சேர்ந்தவன்) என்ற வீரனது நினைவாக நடுகல் நடப்பட்டிருப்பதை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பல நடுகற்கள் தமிழகம் முழுவதும் வரலாற்றாளர்களால் கண்டறியப்பட்டன.

நடுகல் முறையின் சிறப்புகள்:

போரில் இறந்தவர் அல்லாமல், அறிவிலும் ஒழுக்கத்திலும் மிக்கார் நினைவின் பொருட்டு "கல் எடுத்தலும்" உண்டு. சங்கச் செய்யுள் ஒன்றில் மங்கையின் வீரம் பற்றிக் கூறும் போது, "எந்தை, முன் நடந்த போரில் இறந்துபட்டு கல் ஆனான்" என மங்கையின் கூற்றாகப் புலவர் குறிக்கிறார். "பன்றிகுத்திப்பட்டான் கல்" என்பது கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு நடுகல்லாகும்.

சதிகல் வழிபாடு: 
நடுகல் வழிபாட்டிற்கும் சதிகல் வழிபாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கணவனது இறப்பினை அறிந்தவுடன், தீப்பாய்ந்து இறக்கும் பெண்களின் நினைவாக நடப்படும் கல் "சதிகல்" எனப்பட்டது. மணிமேகலையில் பத்தினிப்பெண்டிர் மூவகையினராகப் பிரிக்கப்படுகின்றனர்.

  • கணவனுடன் எரிமூழ்கி இறப்பவர் முதலாமவர்,
  • தனியே எரிவளர்த்து அதனில் வீழ்ந்து இறப்பவர் இரண்டாமவர்,
எஞ்சியவர் கணவனை நினைத்து அடுத்த பிறவியில் அவனுடன் வாழ்வதற்காக, கைம்மை நோன்பு நோற்பர்.
ரிக்வேதத்திலும், அதர்வண வேதத்திலும் "சதி" பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. உடன்கட்டை ஏறும்போது சொல்ல வேண்டிய மந்திரங்களும் இதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. (ரிக். 10.18.8: அத.28,3.1) இதன் வாயிலாக உடன்கட்டை ஏறுதல் வழக்கத்தின் பழைமையை உணரலாம்.

மன்னர்தம் ஆதரவு: 

சேரன் செங்குட்டுவன் கி.பி 2-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். சேரன் செங்குட்டுவனின் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மறைந்தபோது, குலவழக்கப்படி நெடுஞ்சேரலாதனின் மனைவியான "நற்சோணை" என்ற சோழ மகள் உடன்கட்டை ஏறினாள். செங்குட்டுவன் தன் தாயாரின் நினைவாக கோயில் எடுக்க எண்ணி, இமயமலையிலிருந்து கல் கொண்டு வந்து கோயில் எடுத்தலே சிறப்பு எனக்கருதி இமயத்தின் மீது படையெடுத்து கல்லெடுத்து கங்கையில் நீராட்டி நாடு மீண்டான். "நற்சோணையம்மன்" சேரர் குலதெய்வம் ஆனாள். தீப்பாய்ந்து இறந்த மறப்பெண்டிர் வம்சத்தார்க்கு மன்னர்களும், செல்வந்தர்களும் நிலங்களைத் தானமாக வழங்கினார். அவ்வாறு வழங்கப்பட்ட நிலங்கள்
  • உதிரப்பட்டி,
  • ரத்தக்காணி,
  • தீப்பாஞ்சகாணி
எனக் குறிக்கப்பட்டன.

பத்தினித் தெய்வ வழிபாடு: 
உடன்கட்டை ஏறிய பெண்கள் பத்தினித் தெய்வமாகவும் வணங்கப்பட்டனர். கோவலனை இழந்த கண்ணகி மதுரையை விட்டுப் புறப்பட்டு வைகைக்கரை வழியே ஆவேசமாகச் சென்றாள், பின்னர் வருஷநாடு மலைவழியாக சுருளிமலையின் மேற்குத் தொடர்ச்சியான மங்கலதேவி மலைக்கு வருகிறாள், கண்ணகி, தெய்வமான இடம் இதுவேயாகும். சேரன் செங்குட்டுவன் கண்ணகியின் நினைவாக இவ்விடத்தில் கோயிலை உருவாக்கினான்.

பத்தினித் தெய்வ வழிபாட்டின் பரவல்: 

முதலாம் இராசராசன், மங்கலதேவி கோட்டத்திற்கு வந்து கண்ணகியின் சிறப்பை உணர்ந்து, திருப்பணி செய்ததோடு மட்டுமல்லாது, பிடிமண் எடுத்துச் சென்று தஞ்சையில் பத்தினித் தெய்வ வழிபாட்டைத் தொடங்கி வைத்தான். இக்கோயில் சிங்கள நாச்சியார் - செங்கள நாச்சியார் என்று வழங்கி பின் செங்களாச்சியம்மன் கோயிலாக தற்போது உள்ளது.
யாழ்ப்பாணத்தில் முதலாவதாக கண்ணகிக்குக் கோயிலமைத்த இடம் "அங்கணக்கடவை" எனப்படும்.

சிங்களநாட்டில் "பத்தினி தெய்யோ" என வணங்கப்படும் தெய்வம் கண்ணகியே என்பது இலங்கையின் வரலாற்றாளரான செ. இராசநாயகத்தின் கருத்தாகும்.

நடுகல் வழிபாடும், சதிகல் வழிபாடும் இன்றைய காலகட்டத்தில் சிறுதெய்வ வழிபாடுகளாக மக்கள் மத்தியில் நிலைபெற்றுவிட்டதாகவே கூறவேண்டும். நன்றி:- தமிழ்மணி (தினமணி)
 

 


சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் உள்ள 6 நடுகற்கள்  (நவகண்டம்)






வியாழன், 12 மார்ச், 2015

aragalur-சேலம் மாவட்டம் ஆறகழூர் வட்டம் ஆறகழூர் நவகண்டம் (தலைபலி)சிலைகள்

.சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் உள்ள நவகண்ட சிலைகள்.


.சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் உள்ள நவகண்ட சிலைகள்...
.
....மொத்தம் 6

..இவை இன்னும் முறைப்படி முழுமையாக ஆவணப்படுத்த படவில்லை..பேஸ்புக்கில் மட்டுமே என்னால் பதியப்பட்டுள்ளது... இவற்றை எப்படி ஆவணப்படுத்துவது..??
.....மொத்தம் 6..இவை இன்னும் முறைப்படி முழுமையாக ஆவணப்படுத்த படவில்லை..பேஸ்புக்கில் மட்டுமே என்னால் பதியப்பட்டுள்ளது... இவற்றை எப்படி ஆவணப்படுத்துவது..??


---------------------------------------------------------------------------------------------------------------
கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரை நவகண்டமுன்னா என்னான்னே எனக்கு தெரியாது...நான் பிறந்த மண்ணான ஆறகழூரின் வரலாற்றை அறிய ஆர்வம் வந்த போது ஆங்காங்கே சிதறி கவனிப்பார் இன்றி இருந்த சில சிலைகளை உற்று கவனித்தேன்...சின்ன வயசில் இருந்து பார்த்ததுதான் என்றாலும் ஊன்றி அதை கவனித்ததில்லை...
பேஸ்புக்கில் நடுகற்கள் குழுவில் பதியப்படும் படங்களை பார்த்த பின்னரே இவையும் நவ கண்டம் என புரிந்தது ..இது வரை 6 நவகண்ட சிலைகள் பார்வைக்கு வந்துள்ளது...
இந்த சிற்பங்கள் ஒன்றிலும் எழுத்துக்கள் இல்லை...அதனால் அவர்கள் யார்..?அவர்களின் வரலாறு என்ன என்று அறிந்து கொள்ள முடியவில்லை.....
சிற்பங்களின் அமைப்பை வைத்து அதன் காலத்தை வல்லுனர்கள் மதிப்பிட்டால் ஒரளவு வரலாறு விளங்கும்....
மொத்தம் 6 நவகண்டங்கள்..
1.திருகாமீச்சுரமுடைய நாயனார் கோவில் முன் அரசு ஆரம்ப பள்ளின் முன்2.வெளிப்பாளயத்தில் காட்டுக்குள்3,4,5...மூன்றும் அம்பாயிரம்மன் கோயிலின் உள்ளே..
6.திருக்காமீசுர நாயனார் கோவிலின் உள்ளே......


நவகண்டம் அரி கண்டம் என்றால் என்ன ..?ஒரு விளக்கம்..
-------------------------------------------------------------------------------------------------
நவகண்டம் என்பது தன் கழுத்தை தானே அறுத்து பலியிட்டுக் கொள்வதாகும். இம் மரபு தமிழகத்தில் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது. கொற்றவையின் முன்பாகத் தன் வேண்டுதலை நிறைவேற்ற தலையை அறுத்துப் பலியிட்டு கொண்டவர்களைப் பற்றிய குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் உள்ளன, குறிப்பாக கலிங்கத்துபரணியில் சோழ அரசின் வெற்றிக்காக இப்படி தலையை அறுத்து பலிகொண்ட வீரனைப் பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது. இது போலவே தண்டனையாகவும் தன் தலையைத் தானே அறுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது.............
தனது தலையை ஒரே முயற்சியில் தானே அரிந்து பலியிடுவதற்க்கு அரிகண்டம் என்று பெயர். இது ஒரு விழாப் போல் நடத்தப்படும். நவகண்டம் ‍‍/ அரிகண்டம் கொடுப்பதற்க்கு முன் உறவினர்கள் அனைவரும் அழைக்கப்படுவர். நவகண்டம் ‍கொடுப்பவர் இடையில் உடைவாளும், மார்பில் கவசமும் தரித்து போர்வீரன் போல் போர்க்கோலம் பூண்டு இருப்பார். கொற்றவைக்கு பூசை முடித்து பின்பு, தனது இடது கையினால் முடியைப் பிடித்து வலது கையினால் கழுத்தை வெட்டிக் கொண்டு இறப்பார்.
இந்த மாதிரி நவகண்டம் கொடுப்பதற்க்கு பல காரணங்கள் உண்டு:
1. வலிமையான‌ எதிரி நாட்டுடன் போர் புரிய நேரும் போது, வெல்வதற்க்கு வாய்ப்பே இல்லை என்ற‌ தருணங்களில் தெய்வத்தின் அருள் நாடப்படுகிறது. துர்க்கைக்கு பலி கொடுத்தால் தெய்வத்தின் அருள் கிட்டும் என்ற நம்பிக்கையில் நவகண்டம் கொடுக்கப்பட்டது.
2. சில சமயங்களில் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாக கிடக்கும் அரசனுக்கு, அவன் நலம் திரும்ப அவரது விசுவாசிகளால் நவகண்டம் கொடுக்கப்பட்டது.
3. நோயினால் சாவை எதிர் நோக்கி காத்திருக்கும் ஒருவன், நோயினால் சாக விரும்பாமல் வீர சொர்க்கம் அடைய விரும்பி நவகண்டம் கொடுத்துக் கொள்வது.
4. குற்றவாளி ஒருவன் தான் செய்த குற்றத்தினால் மரண தண்டனைக்கு உள்ளாகும்போது, அவ்வாறு சாகாமல் அரசன் அனுமதியுடன் நவகண்டம் கொடுத்துக் கொண்டு வீர சொர்க்கம் அடைவ‌து.
5. ஒருவன் போர்க்காயத்தினாலோ, நோயினாலோ சாகும் தருவாயில் அவனுக்கு முடிக்க வேண்டிய கடமைகள் ஏதும் இருக்குமாயின் தனது இறப்பை தள்ளிப் போடுமாறு இறைவனிடம் வேண்டுவது. அப்படி நடக்கும் பட்சத்தில் அந்தக் கடமை நிறைவேறியதும் நவகண்டம் கொடுத்துக் கொள்வது.
6. ஒருவன் மிகப் பெரிய அவமானத்தை பெற்றபின் அதற்க்கு மேல் வாழ விரும்பாமல் சாக விரும்புகிறான். ஆனால் கோழை மாதிரி சாக விரும்பாமல், வீரச்சாவை விரும்பி நவகண்டம் கொடுத்துக் கொள்வது.
இப்பொழுது முக்கியமானவர்களுக்கு பூனைப்படை பாதுகாப்பு மாதிரி முன்பு சோழர்களுக்கு "வேளக்கார படைகள்" மற்றும் பாண்டியர்களுக்கு "தென்னவன் ஆபத்துதவிகள்" என்ற இருவிதமான படைகள் இருந்தன. தங்கள் கவனக்குறைவினாலோ, தங்களை மீறியோ, அரசர் உயிருக்கு அபாயம் நேர்ந்து விட்டால், துர்க்கையின் சந்நிதியில் தங்களுடைய தலையைத் தங்கள் கையினாலேயே வெட்டிக் கொண்டு பலியாவதாகச் சபதம் எடுத்துக் கொண்டவர்கள்.
ஆனால் பிற்காலங்களில் கோவில் கட்டுவதற்க்கு, தடைபட்ட தேரோட்டத்தை நடத்த இன்னும் பல காரணங்களுக்காக நவகண்டம் நடந்தது.......
ஆறகழூரில் உள்ள இந்த 6 பேரும் எதற்காக சுய தலை பலி கொடுத்து கொண்டார்கள்..?????
ஆய்வாளர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்..