சனி, 9 ஜனவரி, 2021

உலிபுரம் கல்வெட்டும், நவகண்ட சிற்பமும்

 உலிபுரம் கல்வெட்டும் நவகண்ட சிற்பமும்
   


 2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது மனைவிக்கு தேர்தல் பணி உலிபுரம் என்ற ஊரில் அளிக்கப்பட்டது.அதற்க்கு முன் உலிபுரம் என்ற ஊர் பெயரை கேள்விப்பட்டிருந்தாலும் அந்த ஊருக்கு போனதில்லை. தேர்தலுக்கு முதல் நாள் மனைவியை அழைத்துக்கொண்டு அந்த ஊருக்கு சென்றேன். மனைவி தேர்தல் பணியை கவனிக்க, நான் உள்ளூர் பிரமுகர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். என் மனைவி ஒருவரிடம் நான் வரலாறு மற்றும் கல்வெட்டு ஆய்வுகள் செய்து கொண்டிருப்பதை பற்றி சொல்லி விட்டு உங்க ஊரில் ஏதாவது கல்வெட்டு இருக்கா என கேட்டார்.

      



   எங்க ஊரில் ஒரு சிவன் கோயில் ஒரு காலத்தில் இருந்தது. ஆனா இப்ப இல்லை மேடம். ஆனா அங்க எழுத்து இருக்கிற மாதிரி ஒரு கல்லை பாத்த நினைவு இருக்கு.

  என் மனைவி என்னிடம் சொல்ல , இரவு 7 மணி ஆயிடுச்சே, சரி இருட்டாக இருந்தாலும் பரவாயில்லை என அவருடன் கிளம்பினேன். ஊருக்கு வெளியே 2 கி.மீ தொலைவில் ஸ்வேதா நதியின் தென்கரையில் இருந்த அந்த சிவன் கோயிலை சென்றடைந்தோம். கோயில் முற்றிலும் அழிந்து போய்விட்டது. மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மாதவன் என்பவர் முன்னெடுத்து புதிதாக கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளார்.

    



  அந்த கோயிலின் முன்பாக நடப்பட்டிருந்த ஒரு பலகைகல்லில் ஒரு கல்வெட்டும், லிங்கமும்,சில உதிரி சிற்பங்களும் மட்டுமே அங்கு ஏற்கனவே ஒரு கோயில் இருந்ததற்கு சான்றாக நின்றிருந்தது.


    



இரவு ஒன்பது மணிக்கு கிளம்பி பள்ளிக்கு சென்று உறங்கினேன். ஒரு வாரம் கழித்து விழுப்புரம் வீரராகவன் ஐயாவுக்கு தகவல் சொல்லி ,இருவரும் உலிபுரம் சென்று அந்த கல்வெட்டை படி எடுத்து படித்தோம்.

       



   அப்போது கொரானா வந்ததால் இந்த செய்தியை வெளியிட முடியவில்லை. கிட்டத்தட்ட ஓராண்டு கடந்தது. ஒருநாள் உலிபுரம் மாதவன் அவர்களிடம் இருந்து ஒரு போன்..

      



   சார் நம்ம கோயிலுக்கு முன்னாடி இருந்த ஒரு வயலில் இருந்த புதரில் 2 சிலை இருக்கு என சொல்லி புகைப்படம் அனுப்பினார்.அதை பார்த்ததும் நவகண்டம் என புரிந்து கொண்டேன்

   



  அடுத்த நாள் பைக் உலிபுரத்தை நோக்கி பறந்தது. நவகண்ட வீரர்களை படம் எடுத்து கொண்டேன்.

   



  பின் வந்த நாளிதழ், தொலைக்காட்சி செய்தி உங்களுக்காக
     

வணக்கம் நண்பர்களே. இந்த ஆண்டு 2021 . முதல் கண்டறிதல் இது.
*சேலம் வரலாற்று ஆய்வுமையம் கண்டறிந்த உலிபுரம் கல்வெட்டுகள், நவகண்டம் பற்றிய செய்தி இன்றைய காலைக்கதிர் நாளிதழ், தினமணி , தினமலர் இணைய தளம், ஜெயா பிளஸ் தொலைக்காட்சி, மாலை மலர் நாளிதழ், மாலை முரசு,நக்கீரன்,சன் செய்தி ஆகியவற்றில் வெளிவந்துள்ளது.செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனங்களுக்கும் செய்தியாளர்கள் திரு தமிழ்செல்வன், திரு சரவணன், திரு ஆரோக்கியராஜ், திரு சிற்றரசு , திரு
கவிஞர்.பெ.பெரியார் மன்னன்
ஆகியோருக்கு சேலம் வரலாற்று ஆய்வு மையம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது*
ஆறகழூர் பொன்.வெங்கடேசன் M.A(HIS),M.A(JMC),M.A(PU.AD), M.PHIL,D.pharm
தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம்
செல் எண் : 9047514844, 7010580752

உலிபுரத்தில் 489 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டும் நவகண்ட சிற்பங்களும் கண்டெடுப்பு

சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், ஆய்வுமையத்தலைவர் ஆறகளூர் பொன்.வெங்கடேசன் ஆகியோர் மாதவன் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் உலிபுரம் பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அங்குள்ள சுவேதா நதியின் தென்கரையில் 16 ஆம் நூற்றாண்டில் ஒரு சிவன் கோயில் இருந்து தற்போது அழிந்து விட்டது. அதை புதிதாக கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இக்கோயிலின் முன்பு இரு கல்வெட்டுகளும், முன்புறமுள்ள வயலில் இரு நவகண்ட சிற்பங்களும் கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

கல்வெட்டு

இக்கோயிலில் இரு கல்வெட்டுகள் காணப்படுகின்றது.இதில் ஒன்று முழுமையான கல்வெட்டு, மற்றொன்று துண்டு கல்வெட்டு ஆகும். இதன் காலம் 16 ஆம் நூற்றாண்டு ஆகும்.

துண்டு கல்வெட்டு

இக்கோயிலின் முன்பு உடைந்த நிலையில் ஒரு துண்டு கல்வெட்டு காணப்படுகிறது. இதன் முன்புறம் சூரியன்,பிறை நிலா, சூலம் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. சிதைந்த நிலையில் 3 வரிகள் உள்ளன. ஸ்வஸ்திஸ்ரீ சகாப்தம் என கல்வெட்டு துவங்குகிறது. இதன் மறுபுறத்தில் 13 வரிகளில் கல்வெட்டு உள்ளது. இங்கிருந்த கோயிலை அம்பலத்தாடி நாயனார் கோயில் என குறிக்கிறது.
16 ஆம் நூற்றாண்டில் ஆறகளூரை தலைநகராக கொண்ட மகதை மண்டலத்தின் ஒரு பகுதியாக உலிபுரம் இருந்துள்ளது. அப்போது மகதை மண்டலத்தின் பாளையக்காரராக துலுக்கண்ண நாயக்கர் என்பவர் இருந்துள்ளார். இவரின் கீழ் உலிபுரம் பகுதியை ஆண்ட தளவாய் திருமலையார் என்பவர் இங்குள்ள இறைவன் அம்பலத்தாடி நாயனாருக்கு மடம் ஒன்றை அமைக்க அரை மனையையும், இந்த மடத்தை நிர்வகிக்க ஆகும் செலவுக்காக தும்மலப்பட்டி என்ற ஊரில் நன்செய் நிலத்தையும் தானமாக கொடுத்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இரண்டாவது கல்வெட்டு

கோயிலின் முன்புறம் நடப்பட்டுள்ள ஒரு பலகைக்கல்லில் இரு புறமும் 44 வரிகளில் இக்கல்வெட்டு காணப்படுகிறது. இக்கல்வெட்டு கி.பி.1531 ஆம் ஆண்டு அச்சுததேவ மகராயர் காலத்தில் வெட்டப்பட்டுள்ளது. உலிபுரம் என்றழைக்கப்படும் ஊர் அப்போது புலியுரம்பூர் எனவும், இறைவன் திருஅம்பலமுடைய தம்பிரான் என்றும் அழைக்கப்பட்டுள்ளனர். அச்சுததேவ மகராயர் காலத்தில் மகதை மண்டலத்து ஆத்தூர் கூற்றத்தில் புலியுரம்பூர் அமைந்திருந்தது. இப்பகுதிக்கு மாதைய நாயக்கர் என்பவர் அப்போது பாளையக்காரராக இருந்துள்ளார். அவர் திரு அம்பலமுடைய தம்பிரான் கோயில் பூசைக்கும், திருப்பணிக்கும் அனந்தாழ்வார் பிள்ளை என்பவருக்கு தன்மமாக செக்கடிக்கோம்பை, தும்பலப்பட்டி என்ற இரு கிராமங்களை தானமாக தந்துள்ளார். இக்கிராமங்களின் நான்கு எல்லைகளுக்கு உட்பட்ட நஞ்சை, புஞ்சை நிலங்களின் எல்லைகளை அளவிட்டு அங்கு சூலக்கல் எனப்படும் எல்லை கற்கள் நடப்பட்டன. அந்த நிலங்களில் வரும் வருவாய் இறைவனின் பூசைக்கும்,திருப்பணிக்கும் செலவிடப்படவேண்டும். இந்த தானத்தை போற்றி அழியாமல் காப்பவர்கள் கங்கை கரையிலே காரம் பசுவை தானமாக கொடுத்த புண்ணியத்தை பெறுவார்கள். இந்த தானத்தை அழிப்பவர்கள் கங்கை கரையிலே தன் தாய், தந்தை, குருவை, கொன்ற பாவத்தை அடைவார்கள் என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தானம் செய்யப்பட்ட இரு ஊர்களும் இன்றும் அதே பெயரில் வழங்கி வருகிறது.

நவகண்டம்

நவகண்டம் கொடுத்துக்கொள்ளும் வழக்கம் பல்லவர்கள் காலத்தில் இருந்தே இருந்து வந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே போர் நடக்கும் போது தன் நாடு வெற்றி பெற கொற்றவையின் துணை வேண்டி அத்தெய்வத்துக்கு ஒரு வீரன் தன்னயே சுயபலி கொடுத்துக்கொள்வது வழக்கமாகும். போர் நடக்கும் முன் கொற்றவை கோயிலுக்கு வீரர்கள் சென்று பூசை செய்வர். அப்போது நவகண்டம் கொடுத்துக்கொள்ளும் வீரர் தன் உடலில் உள்ள ஒன்பது இடங்களில் இருந்து சதையை அறிந்து கொற்றவையின் முன் வைப்பர், ஒன்பதாவதாக தன் தலையை தானே அரிந்து சுயபலி கொடுத்துக்கொள்வர். இப்படி பலி கொடுத்துக்கொள்ளும் வீரர்களுக்கு வைக்கப்படும் நடுகல்லே நவகண்டம் எனப்படும்.இந்த வீரர்களுக்கு உதிரப்பட்டியாக வீடும், நிலமும் வழங்கும் வழக்கமும் இருந்துள்ளது.

உலிபுரம் நவகண்ட நடுகல்

உலிபுரம் அம்பலத்தாடி நாயனார் சிவன் கோயில் இருந்த இடத்திற்கு முன்புறம் உள்ள வயலில் ஒரு புதருக்குள் இரு நவகண்ட நடுகல் சிற்பங்கள் கண்டறியப்பட்டன. இரண்டும் ஒரே மாதிரியான சிற்ப அமைதியை கொண்டுள்ளன. இதன் காலம் 16 ஆம் நூற்றாண்டாக கருதலாம். ஒரே போரில் வெற்றிபெற நவகண்டம் கொடுத்துக்கொண்ட வீரர்களாக இவர்கள் இருக்கலாம். பல்லவர்கள் ,சோழர்கள் காலத்தில் நடுகல்லில் அந்த வீரனின் பெயர்,ஊர்,எதற்காக இறந்தான் போன்ற விவரங்கள் கல்வெட்டாக பொறிக்கப்பட்டு இருக்கும். ஆனால் 12 ஆம் நூற்றாண்டுக்குப்பின் நடுகல்லில் கல்வெட்டை வெட்டி வைக்கும் வழக்கம் மறைந்து விட்டது. இந்த இரு நவகண்ட நடுகல்லிலும் எழுத்துக்கள் ஏதும் காணப்படவில்லை.

3 அடி உயரம், நேரான கொண்டை,கொண்டை முடிச்சுடன் உள்ளது. முகமானது சற்று தேய்ந்து சிதைந்துள்ளது. காதணிகள், கழுத்தில் சவடி,சரபளி போன்ற அணிகலன்கள் காணப்படுகிறது. வலது கையில் ஒரு நீண்ட வாளானது கழுத்துக்கு நேராக காட்டப்பட்டுள்ளது. ஒரு நடுகல் நவகண்டம் என உறுதி செய்ய இப்படி கழுத்துக்கு நேரே கத்தி காட்டப்படும்.இடது கையில் ஒரு நீண்ட வாள் பூமியை தொட்ட நிலையிலும் உள்ளது. தோள்களில் தோள் வளையம், மணிக்கட்டில் கை வளையம், கால்களில் வீரக்கழலும் காணப்படுகிறது. அரையாடை ஆடை முடிச்சுடன் உள்ளது. வலது காலானது சற்று மடித்தும், பாதம் வலதுபக்கம் திரும்பிய நிலையிலும் உள்ளது. இப்பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்று தடயங்கள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

பத்திரிக்கை செய்திகளும் இணைய இணைப்புகளும்

காலைக்கதிர்

                              தினமணி
                



                                டைம்ஸ் ஆப் இந்தியா

                                      மாலைமலர்

                                மாலைமுரசு
                                
   இணைய தள இணைப்புகள்

    etc பாரத் சேனல்

     https://react.etvbharat.com/tamil/tamil-nadu/state/salem/the-salem-historical-research-center-is-conducting-research-on-the-inscriptions-and-navakanda-sculptures/tamil-nadu20210110110935930

டைம்ஸ் ஆப் இந்தியா

             https://timesofindia.indiatimes.com/city/chennai/two-16th-century-hero-stones-found-at-tamil-nadus-ulipuram/articleshow/80126521.cms?fbclid=IwAR2Bk2gHcpZ4oTn_Nl6jJV33POzemSvt2zk7CzierYO3DLanDicXcWYbah4


தினமணி

https://www.dinamani.com/latest-news/sirappu-seithigal/2021/jan/02/discovery-of-2-inscriptions-and-2-navakanda-sculptures-dating-back-to-489-years-at-ulipuram-3536131.html?fbclid=IwAR1xMeb1YQKpRtSpfe49n9jd9p8VXRupIgs_n04p28psO_VyMePP_fQlxZU


தினமலர்

https://www.dinamalar.com/news_detail.asp?id=2682147&fbclid=IwAR1bn1Le3mEHuutWjOGXCM3B-7roelr_wzig-UmsoXBREsTwz4uz8_6Qy1Y

நக்கீரன்

https://nakkheeran.in/special-articles/special-article/discovery-489-year-old-inscriptions-and-navakanda-sculptures?fbclid=IwAR1YiCoSCUJ-SPsvjhgusVB4tqHig649tKauApZ6l_EwaHHypgzjWtmEOPo


ஜெயாபிளஸ் தொலைக்காட்சி

https://www.youtube.com/watch?reload=9&v=JitpqNfb-eo&feature=share&fbclid=IwAR2SGT9jSaRtmxGPFDlSFYSlbVLbjhXF4-a6su8lTW7o3fTZ3sK_VKWfLFE

news next இணையதளம்
https://tamil.newsnext.live/the-salem-historical-research-center-is-conducting-research-on-the-inscriptions-and-navakanda-sculptures/





சனி, 19 டிசம்பர், 2020

சின்னசேலம் கொற்றவை

 சின்னசேலம் கொற்றவை

      


ஆறகழூர் பொன்.வெங்கடேசன் M.A(HIS),M.A(JMC),M.A(PU.AD), M.PHIL
தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம்
செல் எண் : 9047514844, 7010580752




சின்னசேலத்தில் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட  பழமையான கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு

     
சின்னசேலம் கொற்றவை


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஏரிக்கரையில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.

   சேலம் வரலாற்று ஆய்வுமையத்தலைவர் ஆறகளூர் பொன்.வெங்கடேசன் சின்னசேலம் ஏரிக்கரைப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டார்.அப்போது ஏரிக்கரையின் கிழக்குப்பகுதியில் 700 ஆண்டுகள் பழமையான கொற்றவை சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


கொற்றவை


    கொற்றவை ஒரு பழமையான பெண் தெய்வமாகும். தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் கொற்றவை பற்றிய குறிப்புகள் உண்டு. பழையோள்,கானமர் செல்வி,பாய்கலைப்பாவை,காடுகிழாள் என்ற பெயர்களும் கொற்றவைக்கு உண்டு.கொற்றவையின் உருவ அமைப்பை சிலப்பதிகாரம் விரிவாக எடுத்துரைக்கிறது.மதுரை காண்டத்தின் இரண்டாவது காதையான வேட்டுவ வரியில் கொற்றவை வழிபாடு குறித்து இளங்கோ அடிகள் விரிவாக விளக்கி உள்ளார்.

      


  
    கானகத்தில் வசித்த வேட்டுவர்கள் தாங்கள் வேட்டைக்குச்செல்லும் முன் வேட்டையில் வெற்றி கிடைக்க கொற்றவையை வழிபட்டு சென்றுள்ளனர். மன்னர்கள் போருக்கு செல்லும் முன் கொற்றவைக்கு வீரன் ஒருவனை நவகண்டம் கொடுக்க செய்துள்ளனர். பல்லவர்கள் காலத்தில் கொற்றவை வழிபாடு சிறப்பாக இருந்துள்ளது. இவர் பாலை நிலத்துக்கு உரிய கடவுளாக அறியப்படுகிறார். பிற்காலத்தில் துர்க்கை,காளி என்ற பெயரில் கொற்றவை வழிபாடானது மாற்றமடைந்தது. பெரும்பாலும் ஏரி, ஆறு, ஓடை போன்ற நீர் நிலைகளின் அருகிலேயே கொற்றவை சிற்பங்கள் அமைக்கப்பட்டன.

 
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி


சின்னசேலம் கொற்றவை


   சின்னசேலம் ஏரியின் கிழக்கு கரையில் ஒரு கொற்றவை சிற்பமானது காணப்படுகிறது. இது கிராமிய பாணியில் அமைந்துள்ளது. உள்ளூர் தலைவர்களால் உள்ளூர் சிற்பிகள் மூலம் இது அமைக்கப்பட்டிருக்கலாம். 13 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியானது மகதை நாட்டில் இருந்துள்ளது. மகதை மன்னர் பொன்பரப்பின வாணகோவரையன் என்பவர் இப்பகுதியை ஆண்டு வந்தார்.அவர் காலத்தில் செய்யப்பட்ட கொற்றவையாக இதை கருதலாம். பல்லவர் கால பாணியை பின்பற்றி இச்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

    
டைம்ஸ் ஆப் இந்தியா

  
  இதன் உயரம் 83 செ.மீ,அகலம் 73 செ.மீ ஆகும். கால்பாதமும் அதற்கு கீழ் உள்ள பகுதியும் பூமியில் புதைந்துள்ளது. எட்டுகரங்களுடன் நீண்ட மகுடம், காதுகளில் பத்ரகுண்டலம்,கழுத்தில் சரபளி,சவடி போன்ற அணிகலன்களும் அலங்கரிக்கின்றன. மார்புக்கச்சை காட்டப்பட்டுள்ளது. வலது பின்கரங்களில் பிரயோகசக்கரம்,நீண்டவாள்,அம்பு போன்ற ஆயுதங்கள் உள்ளது. வலது முன்கரம் இடுப்பின் மீது வைத்த நிலையில் உள்ளது. இடது மேற்கரங்களில் சங்கு,வில்,கேடயம் போன்றவை காணப்படுகின்றன.இடது முன்கரமானது சிங்கத்தின் தலை அருகே உள்ளது.வழக்கமாக கொற்றவையின் வயிறு ஒட்டிய நிலையில் காட்டப்படும்.ஆனால் இதில் சற்று பெரிதாக காட்டப்பட்டுள்ளது. இடுப்பில் அரையாடையும் ஆடை முடிச்சும் உள்ளது. வலதுகால் நேராகவும் இடதுகால் சற்று மடித்த நிலையிலும் உள்ளது.

  

தமிழ் இந்து
  
  பல்லவர்கால கொற்றவையில் காணப்படும் மானும், சிங்கமும் இச்சிற்பத்தில் இருப்பது சிறப்பான ஒன்றாகும். கொற்றவையின் வாகனமான மான் வலதுபுறம் உள்ளது. பாய்ந்து ஓடும் நிலையில் மான் உள்ளது. நீண்ட கொம்புகள், முன்கால் தாவும் நிலையிலும் பின்கால் தரையில் அழுத்திய நிலையிலும் பெரிய அளவில் மான் காட்டப்பட்டுள்ளது. 10 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கொற்றவை சிற்ப்பத்தில்தான் இப்படி மான் காட்டப்படுவது வழக்கமாகும். இடது புறம் சிங்கமானது சிறிய அளவில் உள்ளது. பாதத்திற்கு கீழ் மண்ணில் புதைந்துள்ளதால் காலுக்கு கீழ் காட்டப்படும் எருமை தலையும்,நவகண்டம் கொடுத்துகொள்ளும் வீரனும்,வணங்கிய நிலையில் இருக்கும் அடியாரும் நமக்கு தெரியவில்லை.இப்பகுதியை மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்றுத்தடயங்கள் கிடைக்கலாம் என ஆய்வாளர் தெரிவித்தார்.

    
தினகரன்


         
தினத்தந்தி

மாலைமலர்

சக்தி விகடன்

சக்தி விகடன்

இணையதள இணைப்புகள்

மாலைமலர்

  https://www.maalaimalar.com/news/district/2020/12/11153607/2148069/Tamil-News-Ancient-kotravai-stone-idol-found-in-Chinnasalem.vpf

தமிழ் இந்து

https://www.hindutamil.in/news/todays-paper/regional01/610023-.html









சனி, 28 நவம்பர், 2020

ஆறகளூர் அழிந்து போன சிவன் கோயில் கல்வெட்டு

ஆறகழூர் பொன்.வெங்கடேசன் M.A(HIS),M.A(JMC),M.A(PU.AD), M.PHIL
தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம்


    

கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,தலைவர் சேலம் வரலாற்று ஆய்வு மையம்

ஆறகழூர் பெருமாள் கோயிலில் அழிந்து போன சிவன் கோயிலின் கல்வெட்டு கண்டுபிடிப்பு

  சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் உள்ள கரி வரதராஜபெருமாள் கோயிலில் பாண்டியர் மற்றும் நாயக்கர் கால கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
 சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், ஆய்வுமையத்தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் ஆகியோர் கரிவரதராஜ பெருமாள் கோயிலில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கமலமங்கை நாச்சியார் கோயிலில் பாண்டியர் மற்றும் நாயக்கர் கால கல்வெட்டுகளை கண்டறிந்தனர்.

கமலமங்கை நாச்சியார் சன்னதி

மகதைமண்டலம்


12 ஆம் நூற்றாண்டில் ஆறகழூர் மகதை மண்டலத்தின் தலைநகராக விளங்கியது.பொன்பரப்பின வாணகோவரையன் என்ற மன்னர் மகதை நாட்டை ஆண்டு வந்தார். இவர் சோழமன்னர் மூன்றாம் குலோத்துங்கனின் படைத்தளபதியாகவும், மகதையின் குறுநில மன்னராகவும் விளங்கினார்.இவர் காலத்தில்தான் ஆறகழூர் காமநாத ஈஸ்வரர் கோயிலும், கரி வரதராஜ பெருமாள் கோயிலும் கட்டப்பட்டன. வாணகோவரையனின் மனைவி புண்ணியவாட்டி நாச்சியார் என்பவர் கரி வரதராஜபெருமாள் கோயில் கருவறை, அர்த்தமண்டபம் போன்றவற்றை கட்டி விமானமும் அமைத்தார் என இக்கோயிலின் கருவறையின் வடக்கே உள்ள வெளிப்புற கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய சேலம் மாவட்டத்தின் கிழக்குப்பகுதி,கள்ளக்குறிச்சி மாவட்டம்,பெரம்பலூர் மாவட்டம், கடலூர் மாவட்டத்தின் மேற்குப்பகுதிகள் மகதை நாட்டில் அடங்கி இருந்தது.
  
  13 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களும்,ஹெய்சாளர்களும், 15 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை விஜயநகர பேரரசு, நாயக்க மன்னர்களும் மகதை நாட்டை ஆட்சி செய்தனர்,



ஆறகளூர் கரி வரதராஜ பெருமாள்

அழிந்து போன சிவன் கோயில்


  ஆறகழூரில் உள்ள கால்நடை மருத்துவமனை அருகே இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடம் கைலாசநாதர் தோப்பு என அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் ஒரு சிவன்கோயில் இருந்து அழிந்து போனதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இங்கு ஒரு நந்தி சிலை இப்போதும் உள்ளது. இங்கு இருந்த 6 சிலைகள் 30 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போய்விட்டது. மேலும் இங்கு இருந்த பைரவர் சிலை அருகே உள்ள மாரியம்மன் கோயிலிலும், சண்டிகேசுவரர் சிலை தேர்முட்டி அருகே உள்ள அகழ்பள்ளத்தின் தெற்குகரையிலும் இன்றும் உள்ளது. 17 ஆம் நூற்றாண்டில் சிதைந்திருந்த இக்கோயிலில் இருந்த கற்களை பயன்படுத்தி கரிவரதராஜ பெருமாள் கோயிலின் உள்ளே கமலமங்கை நாச்சியார் கோயில் கட்டப்பட்டு உள்ளது. அதற்கு சான்றாக அந்த சிவன் கோயிலுக்கு பாண்டிய மன்னர் தானம் அளித்த கல்வெட்டு கமலமங்கை நாச்சியார் கோயிலில் காணப்படுகிறது.



கரி வரதராஜ பெருமாள்

பாண்டியர் கல்வெட்டு


   கமலமங்கை நாச்சியார் கோயிலின் அர்த்த மண்டபத்தின் தென்புற உபபீடத்தில் கல்வெட்டு 4 வரிகளில் உள்ளது. கி.பி 1269 ஆம் ஆண்டு முதலாம் சடையவர்மசுந்தரபாண்டியனின் 18 ஆம் ஆட்சி ஆண்டில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. ஆறகழூர் உடையார் வயி ராவண ஈஸ்வரமுடைய நாயனார் கோயில் திருப்பணிக்கும், பூசைக்கும் மகதை மண்டலத்தில் உள்ள தொழுவூர் (இன்றைய தொழுதூர்) என்ற ஊரில் பெரிய ஏரிக்கு அருகே முதல் தரத்தில் ஆயிரம் குழி நன்செய் நிலம் தானமாக தரப்பட்டுள்ளது. இந்த நிலமானது சொக்கன் தடி என்ற அளவுகோலால் அளந்து தரப்பட்டது. நிலத்துக்கான வரியும் நீக்கப்பட்டுள்ளது. நிலத்தின் எல்லைகளில் சூலக்கற்கள் நிறுவப்பட்டு எல்லைகள் உறுதி செய்யப்பட்டது. சந்திரன் உள்ள வரை இந்த தானம் நிலைத்திருக்க வேண்டும் என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி கல்வெட்டாகவும், செப்பேடாகவும் பொறிக்கப்படவேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. வாணாதிதேவன் என்பவர் இக்கல்வெட்டை பொறித்துள்ளார்.



  இக்கல்வெட்டின் மூலம் பல புதிய செய்திகள் நமக்கு தெரிய வந்துள்ளன. தற்போது கைலாசநாதர் தோப்பு என அழைக்கப்படும் இடத்தில் இருந்து அழிந்து போன சிவன் கோயிலின் பெயர் ராவண ஈஸ்வரமுடையநாயனார் கோயில் ஆகும். அக்காலத்தில் நிலங்களை அளக்க சொக்கன் தடி என்ற நில அளவுகோல் பயன்படுத்தப்பட்டு உள்ளது. வாணாதிதேவன் என்ற அதிகாரி இக்கல்வெட்டை வெட்டியிருப்பதால் பாண்டியர்கள் காலத்தில் வாணகோவரையர் இப்பகுதியில் ஆட்சியில் இருந்தது தெரிய வருகிறது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் செப்பேடு இப்போது ஊரில் யாரிடமும் இல்லை.இது அழிந்து போயிருக்கலாம்
.

சேலம் நாயக்கர்கள்


17 ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்க மன்னர்களின் கீழ் பாளையக்காரர்களாக  சேலம் நாயக்க மன்னர்கள் வாழப்பாடி அருகே உள்ள பேளூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர். சின்னம்மநாயக்கர் என்பவர் மன்னராக இருந்தார். இவருக்கு சின்னபூபாலர் என்ற பட்டப்பெயரும் உண்டு. இவருக்கு பெத்தநாயக்கன், திருமலைநாயக்கர், ராமன்,லட்சுமணன்,வேங்கடப்ப நாயக்கர், சின்னப்ப நாயக்கர் என ஆறு மகன்கள் இருந்ததாக செக்கடிப்பட்டி கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதில் ராமனும், லட்சுமணனும் இரட்டை பிள்ளைகள். இவர்கள் அனைவரின் பெயரிலும் பேளூர் மற்றும் ஆத்தூரை சுற்றி ஊர் பெயர்கள்  இன்றும் அமைந்துள்ளன. பெத்தநாயக்கன் பெயரால் அமைந்த ஊர் பெத்தநாயக்கன் பாளையம், சின்னம்மநாயக்கன் பாளையம்,ராமநாயக்கன் பாளையம்,லட்சுமண சமுத்திரம் போன்றவை இவர்கள் பெயரில் அமைந்த ஊர்களாகும்.சேலம்,வாலிகண்டாபுரம்,புதுக்கோட்டை,கள்ளக்குறிச்சி வரை இவர்கள் ஆட்சி செய்தனர். ஆறகழூரும் இவர்கள் ஆட்சிப்பகுதியில் இருந்தது.



சேலம் திருமலை நாயக்கர்

பெத்தநாயக்கன் கல்வெட்டு


  சின்னம்மநாயக்கரின் மகன் திருமலை நாயக்கர்.அவருக்கு பெத்தநாயக்கன் என்ற ஒரு மகன் இருந்தது ஆறகழூர் கல்வெட்டு மூலம் தெரியவந்துள்ளது. கரியபெருமாள் கோயிலில் உள்ள கமலமங்கை நாச்சியார் கோயிலில் வடக்குப்பக்கம் அர்த்தமண்டபம் முதல் கருவறை வரை செல்லும் குமுதப்படையில் மூன்று வரிகளில் கல்வெட்டு அமைந்துள்ளது. ஸ்வஸ்திஸ்ரீ மகாமண்டலேஸ்வரர் என கல்வெட்டு துவங்குகிறது.இக்கோயிலை கரிய பெருமாள் கோயில் என கல்வெட்டு குறிப்பிடுகிறது. மதுரையை ஆண்ட நாயக்க மன்னர் வீரராமதேவ மகராயரின் மெய்கீர்த்திகள் சொல்லப்பட்டுள்ளன.சேர,சோழ,பாண்டியரை வென்றவர் எனவும் குறிப்பிடப்பட்டு நட்சத்திர குறிப்புகளும் வருகின்றன.கி.பி. 1618 ஆம் ஆண்டு இந்த கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.சேலம் நாயக்க மன்னர்களுக்கு நரலோககண்டன் என்ற பட்டம் இருப்பதை கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.


  
   மகதை மண்டலம் ஜனநாத வளநாட்டு ஆற்றூர் கூற்றத்தில் உள்ள ஆறகழூர் கரிய பெருமாள் கோயிலில் புதிதாக கமலமங்கை நாச்சியாருக்கு என தனி கோயில் அமைக்கப்பட்டு கருவறை, அர்த்தமண்டபம்,மகாமண்டம், கட்டப்பட்டு இறை உருவங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மதனகோபாலசாமிக்கு என ஒரு தனி கோயில் கட்டப்பட்டு இறை உருவங்கள் நிறுவப்பட்டன. ஆண்டாளுக்கு என ஒரு தனி கோயிலும் கட்டப்பட்டு ஆண்டாள் உருவம் செய்து வைக்கப்பட்டது. ஆண்டாளை கிருஷ்ண உபய நாச்சியார் என கல்வெட்டு கூறுகிறது. சேனைமுதலியார் உருவமும் நிறுவப்பட்டது என கல்வெட்டு குறிப்பிடுகிறது. கல்வெட்டில் வடமொழி அதிகம் கலந்துள்ளது. இந்த கல்வெட்டை சேலம் திருமலை நாயக்கரின் மகன் பெத்தநாயக்கன் என்பவர் பொறித்துள்ளார். இதன் மூலம் கமலமங்கை நாச்சியார்,மதனகோபாலசாமி,ஆண்டாள் கோயில்களை பெத்தநாயக்கன் கட்டிஉள்ளார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இந்த தன்மம் காலம் முழுதும் நிற்கவேண்டும் என கல்வெட்டு குறிப்பிடுகிறது. 400 ஆண்டுகள் கடந்தும் இக்கோயில் இன்றும் நல்ல நிலையில் உள்ளது. இக்கோயிலை கட்டிய பெத்தநாயக்கன், அவர் தந்தை திருமலை நாயக்கர் ஆகியோரின் உருவங்கள் கோயிலில் உள்ள தூண்களில் காணப்படுகிறது. இவர்களின் உருவங்களுக்கு மேலே இவர்களின் அரசு சின்னமான சூரியன், பிறை நிலா நடுவே குறுவாள் கொண்ட முத்திரை காணப்படுகிறது. இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் பல வரலாற்றுத்தடயங்கள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
 


சேலம் பெத்தநாயக்கன்


சேலம் திருமலைநாயக்கர் மகன் பெத்தநாயக்கன் என்ற கல்வெட்டு


காலைக்கதிர் செய்தி


காலைக்கதிர் செய்தி

https://www.dinamalar.com/news_detail.asp?id=2655917

தினமலர் செய்தி

https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/11/22100132/At-the-Perumal-temple-Of-the-ruined-Shiva-temple-Inscription.vpf

தினத்தந்தி செய்தி

https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/nov/22/inscription-of-ruined-shiva-temple-found-in-perumal-temple-3508857.html?fbclid=IwAR2vxRRjvGJ_0r7zzl17qjThipUJTu4A-kc62uU0qqrly01IvV7f_Cj9jss

தினமணி செய்தி



திங்கள், 20 மே, 2019

வரஞ்சரம் லகுலீசர் - varanjaram lakuleesar

வரஞ்சரம் லகுலீசர்

10 நிமிடங்களில் கிடைத்த 10 நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு
   
எதிர்பாராமல் ஒன்று கிடைக்கும்போது அடையும் மகிழ்சிக்கு அளவே இல்லை.சில நாட்களுக்கு முன் குருநாதர் விழுப்புரம் வீரராகவன் ஐயாவும் நானும் தேடலுக்கு போய் ஒரு கல்வெட்டை படி எடுத்தோம். அருகே உள்ள ஒரு கோயிலுக்கு போக வேண்டும் என்பது நீண்டநாள் திட்டம். ஆனால் எப்ப போனாலும் அந்தக்கோயில் மூடியே கிடக்கும். அன்றும் அப்படித்தான் மூடி இருந்தது. அர்சகர் வீட்டை விசாரித்து அவரை நேரில் சந்தித்தோம். அவர் வெளியூர் கிளம்புகிறேன் இன்னொரு நாள் காலையில் சீக்கிரம் வாங்க என்று சொன்னார். ஐயா ரொம்ப தொலைவில் இருந்து வருகிறோம், ஒரு 10 நிமிடம் திறந்து விட்டால் பார்த்து விடுகிறோம் என அனுமதி வாங்கி உள்ளே சென்றோம். மளமளவென செல்லில் படங்களை சுட்டு தள்ளினேன். அர்ச்சகருக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பினோம்.வீட்டுக்கு வந்த பின் தான் ஒவ்வொரு படமாக பார்த்தேன். ஒரு படத்தை பார்த்தபோது உடலுக்குள் திடீரென ஒரு உற்சாகம் தொற்றியது. இவர் அவராக இருப்பாரோ என தோன்றியது .உடனே திரு சுகவனமுருகன் சாருக்கு அனுப்பி சார் இவர் அவரா ? என கேட்டேன். ஆகா அவரேதான் இவர் என்று உறுதிப்படுத்தினார்.
                              பின் சில நாட்கள் கழித்து வீரராகவன் சார்,சுகவனமுருகன் சார், நான் மூவரும் மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்து அவர் லகுலீசர்தான் என உறுபடுத்திக்கொண்டோம். அக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் உள்ள இடங்கை தொடர்பான ஒரு கல்வெட்டு ஆவணத்தில் திரு பன்னீர்செல்வம் அவர்களால் 2011 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த லகுலீசர் யார் ? எங்கு தோன்றினார் ? எப்படி பரவினார் என்பது பற்றி தமிழகத்தில் லகுலீச பாசுபதம் என்ற நூலில் வீரராகவன் ஐயா Manonmani Pudhuezuthu Mangai Ragavanஆகியோர் விரிவாக எழுதி உள்ளனர்.
இப்ப நம்ம வலஞ்சரம் லகுலீசரைப்பற்றி பார்போமா

1200 ஆண்டுகள் பழமையான லகுலீசர் சிற்பம்
சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன்,ஆறகழூர் பொன்.வெங்கடேசன், சுகவனமுருகன் ஆசிரியர் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுர்கம் வட்டத்தை சேர்ந்த வரஞ்சரம் என்ற ஊரில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது அந்த ஊரில் உள்ள பசுபதீஸ்வரர் என்ற பழமையான சிவன் கோயிலில் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட லகுலீசர் சிற்பத்தையும்,கதிர் பிள்ளையார் சிற்பத்தையும் கண்டறிந்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.
                                   லகுலீசபாசுபதம்:-
சைவத்தின் ஒரு பிரிவான பாசுபதம் என்ற பிரிவானது சங்ககாலம் முதற்கொண்டு தமிழகத்தில் இருந்ததாக அறியப்படுகிறது. பாசுபதமானது குஜராத் மாநிலம் காயாரோஹனம் என்னும் இடத்தில் லகுலீசர் என்பவரால் துவங்கப்பட்டு அவரின் சீடர்கள் கெளசிகர், கார்கி, கெளதமன் என்பவர்கள் மூலம் இந்தியா முழுக்க பரவியது.தமிழகத்தில் 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டில் இந்த மதம் வேர் விடத்துவங்கியது. லகுலீசரின் சமயத்தத்துவங்கள் பாசுபதசைவம் என்ற பெயர் பெற்றன.இந்த பிரிவை பின்பற்றுவவர்கள் விபூதியில் குளிக்க வேண்டும்,சாம்பலில் படுத்து உறங்க வேண்டும், சாம்பலில் நடனமாட வேண்டும், பரமன் அணிந்த மாலைகளை அணிந்து கொள்ள வேண்டும்,தங்கள் சாத்திரங்களை பின்பற்றி கட்டப்பட்ட கோயில்களில்தான் தங்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இருந்தன. கம்போடியா வரை லகுலீசபாகுபதம் பரவி இருந்தது. கி.பி 6 ஆம் நூற்றாண்டு துவங்கி 10 ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்,பாண்டியர் குடவரைகள், முற்காலசோழர்களின் தனிச்சிற்பங்களாக லகுலீசர் சிற்பங்கள் கிடைக்கின்றன. சிவனின் 28வது அவதாரமாக லகுலீசர் அறியப்படுகிறார்.தமிழகத்தில் இதுவரை 20பதுக்கும் மேற்பட்ட லகுலீசர் சிற்பங்கள்தான் இதுவரை கிடைத்துள்ளன. இதில் 10க்கும் மேற்பட்ட சிற்பங்கள் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் கிடைத்துள்ளன.அதில் புதிய வரவாக வரஞ்சரம் என்ற ஊரில் புதிய லகுலீசர் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.
வரஞ்சரம் லகுலீசர்:
கள்ளக்குறிச்சி அருகே கோமுகி ஆற்றின் தெற்கே வரஞ்சரம் என்ற ஊர் அமைந்துள்ளது. ஆறகழூர் கல்வெட்டுகள் இந்த கோமுகி ஆற்றை ஆழ்வினை ஆறு என குறிப்பிடுகிறது. வரஞ்சரம் என இப்போது அழைக்கப்படும் இந்த ஊர் 11 ஆம் நூற்றாண்டில் திருவலஞ்சரம் என்று அழைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இறைவனை திருவலஞ்சரமுடையநாயனார் என குறிப்பிடுகிறது. இந்த கோயில் இப்போது பாலாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் திருக்கோயில் என அழைக்கப்படுகிறது. அருணாசலகவிராயர் இயற்றிய திருவரஞ்சர தல புராணம் என்ற நூல் இக்கோயில் இறைவனைப்பற்றியும், இவ்வூரின் பெருமையையும் பற்றியும் பாடல்களாக விவரிக்கிறது.1200 ஆண்டுகளுக்கு முன் 8 ஆம் நூற்றாண்டில் செங்கல் தளியாக கட்டப்பட்ட இந்த கோயில் 11 ஆம் நூற்றாண்டில் கற்கோயிலாக மாற்றி கட்டப்பட்டுள்ளது. அப்போது செங்கலால் கட்டப்பட்ட கோயிலில் இருந்த லகுலீசர் சிற்பமும், கதிர் விநாயகர் சிற்பமும், தனி மாடத்தில் வைக்கப்பட்டு இன்று வரை வழிபாட்டில் உள்ளன. இங்குள்ள சப்த மாதர் சிற்பங்களும் மிகவம் பழமை வாய்ந்தவை ஆகும். விழுப்புரம் மாவட்டத்தில் லகுலீசர் சிற்பமானது ஜடாமுனி என்ற பெயரில் வழிபாட்டில் உள்ளது. தனிமாடத்தில் அமர்த்தப்பட்டுள்ள லகுலீசர் 2 அடி உயரமும் முக்கால் அடி அகலமும் உள்ள ஒரு பலகைக்கல்லில் புடைப்புச்சிற்பமாக வெட்டப்பட்டுள்ளார். பல்லவர்கள் காலத்தை சேர்ந்த சிற்பம் இதுவாகும். தலையில் உள்ள ஜடாபாரமானது நீள் இழையாக இறுதியில் முடிச்சிடப்பட்டு சுருட்டை முடியாக காட்சியளிக்கிறது.காதுகளிலும்,கழுத்திலும் அணிகலன்கள் காணப்படுகிறது.தலையானது சற்று வலது பக்கம் சாய்ந்து முகம் புன்னகையுடன் காணப்படுகிறது. அர்த்தலீலாசனத்தில் அமர்ந்து வலதுகாலை சற்று உயர்த்தி தண்டத்தை வலதுகாலின் மீது ஊன்றியபடி உள்ளார். இடதுகால் வலதுகால் மடிப்பின் உள் நுழைந்தபடி உள்ளது. வலது கை தண்டத்தை உறுதியாக பற்றியுள்ளது.வலது கரத்தின் அருகே நீண்டு நிற்கும் பாம்பானது காட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்ட லகுலீசர் சிற்பங்களிலேயே மிக அழகிய சிற்பம் இதுவாகும்.

                                                     கதிர் பிள்ளையார்
விழுப்புரம் மாவட்டத்தில் இது வரை லகுலீசர் சிற்பங்கள் கண்டறியப்பட்ட பெரும்பாலான இடங்களில் 8ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த கையில் நெற்கதிர் வைத்திருக்கும் கதிர் பிள்ளையார் சிற்பம் காணப்படுகிறது. வரஞ்சரத்திலும் தனி மாடத்தில் பல்லவர் காலத்தை சேர்ந்த கதிர் பிள்ளையார் காணப்படுகிறார். பிள்ளையார் பெரும்தெய்வமாக உருவாகாத காலகட்டத்தில் வளமையின் சின்னமாக பிள்ளையார் கருதப்பட்டு கையில் நெற்கதிருடன் வழிபாட்டில் இருந்துள்ளார்.
கல்வெட்டு
கி.பி. 1157 ஆம் ஆண்டு இரண்டாம் ராஜராஜனின் 11 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று இக்கோயிலில் காணப்படுகிறது. மிலாடாகிய ஜனநாத வளநாட்டு மேல் ஆற்றூர் கூற்றத்தில் உள்ள திருவலஞ்சரம் என இவ்வூரை குறிப்பிடுகிறது. 79 நாடுகளை சேர்ந்த சபையோர் திருவலஞ்சரத்தில் ஒன்று கூடி 11 நாட்டுப்பிரிவுகளை சேர்ந்த மலையமான்,நத்தமான் பிரிவுகளை சேர்ந்தவர்கள் இடங்கை என்ற பிரிவில் இணைந்து அப்பிரிவுக்கு கண்ணும் கையுமாக துணை நிற்போம் என உறுதி அளித்துள்ளனர். 12 ஆம் நூற்றாண்டில் ஒருவகை சமூக ஒருங்கிணைப்பு நிகழ்ந்ததற்கு சான்றாக இக்கல்வெட்டு திகழ்கிறது. இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் பல வரலாற்று சான்றுகள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.


இந்த செய்தியானது நேற்றய தினமணி,தினகரன் நாளிதழ்களிலும், அவர்களின் இணையதளங்களிலும், இன்றைய இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழிலும் இணைய தளத்திலும், இணையப்பத்திரிக்கையான விகடன், நக்கீரன்,nntweb, ஆகியவற்றிலும் செய்தி வந்துள்ளது. செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனங்களுக்கும் செய்தியாளர்கள் திரு காலைக்கதிர் தமிழ்செல்வன், தினமணி திரு. சரவணன், தினமணி திரு முரளி,தினகரன் திரு பச்சையாப்பிள்ளை, இண்டியன் எக்ஸ்பிரஸ் திரு பகலவன், விகடன் திரு வெற்றி , nntweb திரு கதிரவன்,திரு நக்கீரன் பகவத்சிங், மக்கள்குரல் செய்தியாளர், ஆகியோருக்கு சேலம் வரலாற்று ஆய்வுமையம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. இவ்வளவு நேரம் பொறுமையாக செய்தியை படித்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி
ஆறகழூர் வெங்கடேசன் பொன்

                                          
இண்டியன் எக்ஸ்பிரஸ்
தினகரன்
தினமலர்

https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/may/12/1200-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3150195.html?fbclid=IwAR1VFjsq5ljh7j5KJRkrTDhE70fjw9aZ-_E_VorXoo3ddZmWnCj9M4IANdE

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=494722&fbclid=IwAR0MIx0N_5gQHPZHCO-9BSIL7exlkw8WPNd_aE71YYOXKRDWENnT0xUIXCk


https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/1200-year-old-idol-discovered-kallakurichi?fbclid=IwAR2mTA9ABDYkH-E8-l0Mb-tDS96v7Grc6CYeqKPJufuYqU7WoCLlR_79_Y0

https://makkalkural.net/news/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-1200-%E0%AE%86%E0%AE%A3/?fbclid=IwAR1JRqjDu-zr3vRxU_w8rgGXfibGFQrV2pPGWKReo5VlpzSMJ8DhR7ybmEU

https://www.vikatan.com/news/spirituality/157348-found-new-laguleesar-statue-near-kallakkurichy.html?fbclid=IwAR1VFjsq5ljh7j5KJRkrTDhE70fjw9aZ-_E_VorXoo3ddZmWnCj9M4IANdE

https://m.dinamalar.com/detail.php?id=2276063&device=whatsapp&fbclid=IwAR120pGcBzjuX96OotlPVF-ITQUD5l0HCmLxyqfFa_Y0cbgJsUA9PLxjdQI

https://xiaomi.dailyhunt.in/news/india/tamil/nakkheeran-epaper-nakkh/tamizhakathil+1200+aandukal+bazhamaiyana+lakuleesar+sirbam+kandubidippu+badangal+-newsid-116068924?listname=topicsList&index=0&topicIndex=0&mode=pwa&fbclid=IwAR3t5cmt9kHEzAbtBNEEeQVOfK_q8hlVmYjFf9MDil-UZp2JRIdcGo-2U2I

தினமணி




இணைப்புகள்
http://www.nntweb.com/news-view.php?nid=1145&nalias=%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%201200%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&fbclid=IwAR2iwLEd2GmpTlrLb3mFqkmykS93bSpAQnUjSZmMnR-e1vtd7jKwdVsxAxY






புதன், 1 மே, 2019

pottaneri- பொட்டனேரி வட்டெழுத்து கல்வெட்டு

பொட்டனேரி வட்டெழுத்து கல்வெட்டு



தமிழ் மொழியானது துவக்கத்தில் மனிதன் காடுகளில் வாழ்ந்த போது ஒலியில் துவங்கி பின் குறியீடுகள்,சித்திரங்கள்,பாறை ஓவியங்கள் என தொடர்ந்து தமிழி,வட்டெழுத்து,என வளர்ந்து இன்று நாம் கானும் வடிவில் செம்மையடைந்து வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்ந்த மக்கள் தங்கள் உணர்வுகளை செய்திகளை பதிவு செய்து வைத்துள்ளனர். அந்த வகையில் சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் பொட்டனேரி என்ற கிராமத்தில் ஒரு வட்டெழுத்து கல்வெட்டு கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த செய்தி தினமணி,தினத்தந்தி நாளிதழ்களிலும், தினமணி,தினத்தந்தி,விகடன்,நக்கீரன்,சத்யம் ,பி.பி.சி,nntv web ஆகிய இணையதளங்களிலும் வெளியாகியுள்ளது. செய்தியை வெளியிட்ட நிறுவனங்களுக்கும் செய்தியாளர்கள் திரு தினமணி சரவணன்,தினத்தந்தி திரு வேலுமணி,விகடன் வெற்றி, நக்கீரன் பகத்சிங் ஆகியோருக்கு சேலம் வரலாற்று ஆய்வு மையம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

                                         
1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு
மேச்சேரியை சேர்ந்த கோ.பெ.நாராயணசாமி ஆசிரியர், வரலாற்று ஆர்வலர் அன்புமணி ஆகியோர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தமிழக தொல்லியல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் சு.இராஜகோபால்,கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் சாந்தலிங்கம்,சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த விழுப்புரம் வீரராகவுன்,ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,மருத்துவர் பொன்னம்பலம் ஆகியோர் சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம் மேச்சேரி அருகே உள்ள பொட்டனேரி என்ற கிராமத்தில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.அப்போது அங்குள்ள வரதராஜபெருமாள் கோயிலில் வட்டெழுத்து கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

                                                இக்கல்வெட்டின் உயரம் 70 செ.மீ. அகலம் 65 செ.மீ. தடிமன் 10 செ.மீ ஆகும். இதன் மேல்பகுதி உடைந்துள்ளது. உடைந்த மேல்பகுதி அங்கு காணப்படவில்லை. 8 வரிகளில் வட்டெழுத்துடன் கல்வெட்டு உள்ளது. இதன் முதல் இரு வரிகளும் படிக்க முடியாதபடி சிதைந்துள்ளது. இதன் காலம் 8 ஆம் நூற்றாண்டாக கருதலாம். எழுத்தமைதியானது 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வட்டெழுத்தை ஒத்து காணப்படுகிறது. கல்வெட்டுகள் ஆரம்ப காலத்தில் தமிழ் பிராமியிலும் பின் வட்டெழுத்திலும், 9 ஆம் நூற்றாண்டுக்கு பின் இப்போது நாம் பயன்படுத்தும் வடிவிலும் பொறிக்கப்பட்டன.
வாணன் வாரமன் என்பவர் ரிஞ்சிக்குடி, பெரிய கல்லியக்குடி, சிறிய கல்லியக்குடி என்ற மூன்று ஊர்களில் நிலம் கொடுத்த செய்தி கல்வெட்டில் வெட்டப்பட்டுள்ளது. கல்வெட்டின் மேற்பகுதி காணப்படாததால் நிலம் யாருக்கு, எதற்காக கொடுக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்து கொள்ள முடியவில்லை. கல்வெட்டின் இறுதியில் சக்கரம் போன்ற வட்ட வடிவ கோட்டு உருவம் ஒன்று வரையப்பட்டுள்ளது. ஒரு வேளை இது சுருள் வாளாக இருக்கலாம்.
வாணன் வம்சத்தை சேர்ந்தவர்கள் சங்ககாலம் முதலாகவே குறுநில மன்னர்களாக அறியப்படுகிறார்கள். வாணர்களின் நடுகல் கல்வெட்டுகள், தர்மபுரி,கிருஷ்ணகிரி,செங்கம் போன்ற பகுதிகளில் நிறைய கிடைத்து உள்ளது. 12 ஆம் நூற்றாண்டில் இவர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறகழூரை தலைநகராக கொண்டு வாணகோவரையர்கள் என்ற பெயரில் ஆட்சி செய்துள்ளனர். தற்போது கண்டறியப்பட்ட இக்கல்வெட்டின் மூலம் வாணர் பரம்பரையை நேர்ந்த வாணன் வாரமன் என்பவர் 8 ஆம் நூற்றாண்டில் மேச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களை ஆட்சி செய்த ஒரு குறுநில மன்னன் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
பொட்டனேரி வரதராஜபெருமாள் கோயிலுக்கு அருகே உள்ள விளை நிலத்தில் ஒரு சமணதீர்தங்கரரின் சிலை காணப்படுகிறது. ஏற்கனவே தமிழக தொல்லியல்துறை இதை பதிவு செய்திருந்தாலும் தற்போது பாதுகாப்பு , பராமரிப்பு இன்றி உள்ளது.. சேலம் மாவட்டத்தில் சமணம் செழித்து இருந்தமைக்கு ஆதாரமாக ஆறகழூர் காமநாத ஈஸ்வரன் கோயிலில் சமணத்தை சேர்ந்த ஒரு தீர்த்தங்கரர், அம்பிகா யட்சி, வெள்ளக்கல்லால் ஆன ஒரு தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளது. பருத்திப்பள்ளி என்ற ஊரில் கிடைத்த பார்சுவநாதர் தீர்த்தங்கரர் சிற்பம் தற்போது சேலம் அருங்காட்சியகத்தில் உள்ளது. பொட்டனேரி தீர்த்தங்கரர் சிற்பத்தையும் பாதுக்காக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



இணையதள இணைப்புகள்

https://www.sathiyam.tv/inscription-found/?fbclid=IwAR2XED-RvWZ_U606M1QfcfuiGzz2tpI405EzQiRwrx8UEg7t1qV4oZIAM9Q

https://www.dinamani.com/tamilnadu/2019/apr/29/1200-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3142023.html?fbclid=IwAR2j29JrNG-5wWtcxZ7LIGBdfDCYeQtWjcwZR6GbOejK_FlVCRRBCK-giI8


https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/salem-district-mettur-teacher?fbclid=IwAR3HdcPz-Yn9NDeYeH9f6UkPaeT7RafUZy3tejUGV8PlhwFxzU4Cz3UrO4E

https://cfcm.salemonline.in/article/1200-year-old-stone-inscription-found-in-potteneri-2858673?fbclid=IwAR1Ly32YP-KK8Yex5gAB3YXOt0nD-OvFYFvcuwpimzqUovPyqyi1RpVbu8k

http://www.nntweb.com/news-view.php?nid=1097&nalias=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%201200%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&fbclid=IwAR1fzobMWpajnOH7qDw0U3dwAloRiA6PIPQt-J1QI-q23Xwak-RxM1mOx7shttps://www.vikatan.com/news/spirituality/156278-found-new-vattezhuththu-inscription-found-near-mettur.html?fbclid=IwAR0VFMYLRwu-rh2ElNs_JqaL5eJSlGcLnJBo4pnUu04aZ5xLrmOh3t7yHCk