வெள்ளி, 6 ஜனவரி, 2017

கல்வராயன் மலையில் கல்திட்டைகள் கற்குவைகள்

*கல்வராயன் மலையில் 2500 வருடங்களுக்கு முற்பட்ட கல்திட்டைகள், கற்குவைகள் ,புதிய கற்கால கருவிகள் கண்டுபிடிப்பு*



*சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பெரியகல்வராயன் மலையில் சேலம் மாவட்ட வரலாற்று தேடல் குழுவால் கல்திட்டைகள், கற்குவைகள், புதிய கற்கால கருவிகள், மற்றும் ஏராளமான குத்துகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன*
*சேலம் மாவட்ட வரலாற்று தேடல்குழுவை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் ஆறகழூர் பொன்.வெங்கடேசன், ஆசிரியர் கலைச்செல்வன், ஆசிரியர் பெருமாள், ஓமலூர் சீனிவாசன் ,மருத்துவர் பொன்னம்பலம், ஜீவநாராயணன், பெரியார் மன்னன் ஆகியோர் அடங்கிய குழு பெரிய கல்வராயன் மலையில் உள்ள ஆத்தூர் வட்டம் கீழ்நாடு ஊராட்சி கெராங்காடு கிராமம், பெத்தநாயக்கன் பாளையம் வட்டம் கீழ்நாடு ஊராட்சி அடியனூர், சேம்பூர், போன்ற கிராமங்களில் மேற்புற கள ஆய்வை மேற்கொண்டது*
*அப்போது அக்கிராமங்களில் 21 கல்திட்டைகள், 10 கற்குவைகள் , புதிய கற்கால கருவிகள் மற்றும் ஏராளமான குத்துகற்கள் கண்டுபிடிக்கப்பட்டன*
*இதில் 15 கல்திட்டைகள் ஓரளவு நல்ல நிலையிலும் 6 கல்திட்டைகள் சிதைந்த நிலையிலும் காணப்படுகின்றன* *கற்குவைகளில் 6 நல்ல நிலையிலும் 4 சிதைந்த நிலையிலும் காணப்படுகிறது*
*பழங்காலத்தில் இறந்தவர்களை புதைத்த இடத்தில் கல்பதுக்கை, கல்திட்டை, ஈமப்பேழை, கற்குவை, கல்வட்டம், குத்துக்கல், முதுமக்கள் தாழி போன்ற முறைகளை அக்கால மக்கள் பயன்படுத்தினர்* *முதன் முதலில் இதை உருவாக்க பயன்படுத்திய கற்கள் வெட்டி உருவாக்காத சிறு சிறு, கல்துண்டுகளாக இருந்தன பின்பு சதுர வடிவமான பலகை கற்கள் பயன்படுத்தப்பட்டன* *இறந்தவர்கள் திரும்ப வந்து உயிருடன் இருப்பவர்களை துன்புறுத்தாமல் தடுக்க கற்பாறைகளை கொண்டு சவக்குழிகளை மூடினர்* *அச்சத்தின் காரணமாக அவற்றை வழிபட துவங்கினர். இது உருவ வழிபாட்டின் துவக்க நிலை எனலாம்*
*கல் திட்டைகள் :-*
*இக்கிராமங்களில் காணப்படும் கல்திட்டையானது மூன்று புறம் துண்டுகற்களால் அடுக்கப்பட்டு மேற்புறம் ஓர் பலகை கல்லால் மூடப்பட்டுள்ளது. முன்புறம் மூடப்படாமல் உள்ளது. இதன் உயரம் நான்கரை அடி, நீளம் 12 அடி, அகலம் 6 அடியாகவும் உள்ளது.. மக்கள் வசிப்பிடங்களில் உள்ள கல்திட்டைகளின் உள்ளே புதிய கற்கால கருவிகளும், அந்த கருவிகளை வழுவழுப்பாக்க பயன்பட்ட பந்து வடிவ உருண்டை கல்லும் ,கூர் தீட்ட பயன்படுத்திய தேய்ப்பு கல்லும் காணப்படுகிறது, கல்திட்டையின் உள்ளே விநாயகர் சிலையும் உள்ளது, இது பிற்காலத்தில் வைக்கப்பட்டு இருக்கலாம்.. மக்கள் வசிப்பிடம் இல்லாத மலைக்குன்றில் உள்ள கல்திட்டைகளில் புதிய கற்கால கருவிகளோ விநாயகர் உருவமோ காணப்படவில்லை*
*புதிய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள் குழுவில் முக்கியமான தலைவர்கள் , வீரர்கள் இறந்தபோது அவர்கள் நினைவாக இது போன்ற கல்திட்டைகள் அமைக்கப்பட்டன. அவை மாண்டவர் வீடு என அழைக்கப்பட்டன.அது பிற்காலத்தில் மருவி பாண்டவர் வீடு என அழைக்கப்பட்டன. இங்குள்ள மக்களால் இவை கல்பாண்டி வீடு, சின்ன பாண்டி வீடு, ,குள்ள பாண்டி வீடு என அழைக்கப்படுகிறது. இங்கு இரண்டடி உயரமுள்ள குள்ள மனிதர்கள் பழங்காலத்தில் வாழ்ந்ததாகவும் அவர்களின் வீடுதான் இது என இங்குள்ள மக்கள் நம்புகின்றனர்*
*கற்குவை :-*
*இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்துக்கு அருகே கற்குவைகள் அமைக்கப்பட்டன.இவை பிரமீடு போன்ற அமைப்பில் கூம்பு வடிவத்தில் காணப்படுகிறது, கெராங்காடு கிராமத்தின் அருகே உள்ள மலைக்குன்றின் அமைந்துள்ள பழமையான அவ்வையார் கோயில் அருகிலுள்ள பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட கற்குவைகள் காணப்படுகின்றன. செவ்வக வடிவமான நன்கு வெட்டப்பட்ட கற்கள் ஒன்றன் மீது ஒன்றாக வட்ட வடிவில் அடுக்கப்பட்டு கூம்பு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது..இவை சிறிய வடிலான பிரமீடுகளை போல் காட்சியளிக்கிறது .இதன் உச்சியில் செங்குத்தாய் ஓர் பலகைகல் வைக்கப்பட்டுள்ளது.. இக்கற்குவையின் அடிப்பகுதியின் சுற்றளவு 12 அடி, நடுப்பகுதி 9 அடி, மேற்பகுதி 6 அடியாக உள்ளது. மேலே உள்ள தனி பலகை கல் முக்கால் அடியாக உள்ளது*
*இன்றும் கூட கிணறு வெட்டும் தொழில் செய்யும் போயர் சமூகத்தின் ஒரு பிரிவினர் இறந்தர்வர் நினைவிடங்களில் கற்குவை அமைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்*
*குத்துக்கற்கள் :-*
*இறந்தவர்கள் நினைவாகவும், அவர்களை அடக்கம் செய்த இடங்களை அடையாளப்படுத்தவும் குத்துக்கற்கள் வைக்கப்பட்டன..இவை ஒரே கல்லில் கூம்பு கல்லாகவோ அல்லது பலகை கல்லாகவோ வைக்கப்பட்டன. கெராங்காடு கிராமத்தில் இருந்து குன்றின் மீதுள்ள அவ்வையார் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் ஏராளமான குத்துக்கற்கள் காணப்படுகின்றன..இவை ஒரே ஒரு பலகை கல்லால் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மலைப்பாதையில் செருப்பு போட்டுக்கொண்டு நடக்க ஊர் மக்கள் அனுமதிப்பதில்லை..இந்த குன்றை புனிதமாக கருதுகின்றனர்*
*புதிய கற்கால கருவிகள் :-*
*கெராங்காடு,சேம்பூர்,அடியனூர் போன்ற மலைக்கிராமங்களில் மக்கள் குடியிருப்புக்கு அருகே உள்ள கல்திட்டைகளின் உள்ளே புதிய கற்காலகருவிகள் காணப்படுகின்றன. இவை வேறு வேறு வடிவங்களில் அமைந்துள்ள கைக்கோடாரிகள் ஆகும்.இதன் ஒரு முனை கூராகவும் மறுமுனை தட்டையாகவும் உள்ளது. கூரான முனை குத்திக்கிழிக்கவும் தட்டையான முனை வெட்டவும் பயன்பட்டுள்ளது. இந்த கருவிகள் எளிமைமையாய் பயன்படுத்துவதற்கு ஏற்ப கைக்கு அடக்கமாய் செய்யப்பட்டுள்ளன. ஒரு அடி உயமுள்ள கற்கோடாரிகளும் இங்கு காணப்படுவது சிறப்பான ஒன்றாகும்.. பழைய கற்கால கருவிகள் கரடு முரடாக இருக்கும்.இந்த புதிய கற்கால கருவிகள் வழுவழுப்பாக உள்ளன,இதை வழுவழுப்பாக மாற்ற பயன்பட்ட கல்பந்துகளும்,கூராக்க பயன்பட்ட தேய்ப்பு கல்லும் கல்திட்டையின் உள்ளே காணப்படுகின்றன*
*அவ்வையாரம்மன் கோயில்*
*பெரிய கல்வராயன் மலையில் கீழ்நாடு என இப்போது அழைக்கப்படும் பகுதி 15ஆம் நூற்றாண்டில் கள்ளர் நாடு என அழைக்கப்பட்டுள்ளது.கெராங்காடு என்ற ஊர் கருங்காடு என அழைக்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டு அவ்வையார் கோயில்கள் உள்ளன. கெராங்காடு ஊருக்கு அருகே புதிய கோயிலும் 2 கி.மீ .தொலைவில் உள்ள குன்றில் பாழடைந்த நிலையில் 15 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டசிதைந்த நிலையில் ஓர் அவ்வையார் கோயிலும் உள்ளது. பழைய கோயிலில் இப்போது அவ்வையார் சிலை இல்லை.பல வருடங்களுக்கு முன் இங்குள்ள சிலைகளை திருடர்கள் திருடி செல்ல முயற்சித்ததால் ஊர் மக்கள் பாதுகாப்பான ஓர் இடத்தில் வைத்துள்ளனர். கார்த்திகை தீபம் அன்று மட்டும் அவ்வையார் சிலையை இங்கு கொண்டு வந்து வைத்து வழிபடுகின்றனர்.
கார்த்திகை தீபம் அன்று மலை உச்சியில் உள்ள கொப்பரை மூலம் மகாதீபம் ஏற்றி வழிபடுகின்றனர்..திருவண்ணாமலை தீபத்தை பார்த்த பின்னரே இங்கு தீபம் ஏற்றுவது நடைமுறையாக உள்ளது*
*சேலம் அருகே உத்தமசோழபுரம் என்ற ஊரில் உள்ள கரபுரநாதர் கோயிலில் பழமையான ஓர் அவ்வையார் சிலை உள்ளது.இந்த இரண்டு அவ்வையாருக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்பது ஆய்வுக்குரியது*
*இசைக்கற்கள் :-*
*மலைமீதுள்ள அவ்வையார் கோயிலில் உள்ள சிலைகளை திருடர்கள் திருட முயன்றபோது அவர்கள் பாறையாய் மாறிவிட்டதாய் ஊர்மக்கள் சொல்கிறார்கள். அந்த பாறைகளை ஆய்வு செய்த போது அவை இசைக்கற்கள் என தெரிய வந்தது..அந்த பாறைகளை தட்டும்போது உலோகத்தை தட்டுவது போல் ஒலி வருகிறது, சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம்,பேளூர்,அயோத்தியாப்பட்டினம் போன்ற ஊர்களில் உள்ள கோயில்களில் இசைத்தூண்கள் உள்ளன,அவற்றை தட்டினால் இனிமையான ஓசை வரும். அது போன்ற இசைத்தூண்களை உருவாக்க இது போன்ற பாறைகள் பயன்பட்டன*
*கல்வெட்டுகள்:-*
*கெராங்காடு கிராமத்தில் இரண்டு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன..ஒன்று மலைமீதுள்ள அவ்வையாரம்மன் கோயிலில் உள்ளது.அது படிக்க முடியாதபடி சிதைந்து காணப்படுகிறது..மற்றொன்று ஊரின் மத்தியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே பலகை கல்லில் வெட்டப்பட்டுள்ளது.
கல்வெட்டின் மேற்புறம் பெருமாளின் சின்னமான சங்கு , சக்கரம் காணப்படுகிறது. மொத்தம் 35 வரிகளில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.
இது 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். இதில் விய வருடம் வைகாசி மாதம் 27ந்தேதி முதல் அவ்வையாரம்மைக்கு பூசைகள் செய்ய கள்ளர் நாட்டை (கீழ்நாடு) சேர்ந்த கருங்காடு (கெராங்காடு) என்ற பகுதியை கரையப்பக்கவுண்டர் , அன்னியப்ப கவுண்டர் , ஆகிய இரு தலைவர்களும்
நாலுகரை நாட்டாரும் சேர்ந்து பூதானமாக கொடுத்துள்ளனர். பூதானம் என்பது ஒரு கிராமத்தையே தானமாக கொடுப்பது ஆகும். இத்தானத்தை நயினாகவுண்டநம்பி என்பவர் நடத்தி வரவேண்டும். மேலும் பூசையும் கட்டளையும் நடத்தி வருபவர்கள் உடல் நலமும் செல்வமும் பெறுவார்கள் .
இத்தானத்தை சூரியன் சந்திரன் உள்ள வரை நடத்தி வர வேண்டும். இத்தானத்துக்கு அழிவு செய்பவர்கள் கங்கை கரையிலே காராம் பசுவை கொன்ற பாவத்தை அடைவார்கள் எனவும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இப்பகுதி கள்ளர் நாடு என கல்வெட்டில் குறிப்பிடப்படுவதால் அருகே வணிக வழி பாதை ஒன்று இருந்திருக்க வேண்டும்,
இப்பகுதியில் காணப்படும் இந்த அரிய சான்றுகளை ஆவணப்படுத்தவும் பாதுகாக்கவும் தொல்லியல்துறை ஆவண செய்ய வேண்டும்* இப்பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல தொல்லியல் சான்றுகள் கிடைக்கும் இவ்வாறு சேலம் மாவட்ட வரலாற்று தேடல்குழு ஆய்வாளர்கள் தெரிவித்தனர்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக