வியாழன், 17 செப்டம்பர், 2015

12-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சமணக்கோயில் கல்வெட்டு கண்டெடுப்பு தினமணி செய்தி

தலைவாசல் அடுத்துள்ள ஆறகளூர் பகுதியில் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணக் கோயில் இருந்ததற்கான கல்வெட்டை சனிக்கிழமை வரலாற்று ஆய்வாளர் பொன்.வெங்கடேசன் என்பவர் கண்டெடுத்துள்ளார்.

தலைவாசல் அருகே உள்ள ஆறகளூர் பழம்பெருமை வாய்ந்தது. இங்கு 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருகாமநாதேஸ்வரர் ஆலயம் உள்ளது. எட்டு பைரவர்களும் ஒரே கோயிலில் அமைந்திருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு. மேலும் 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கரி வரதராஜப் பெருமாள் கோயிலும் இங்குள்ளது. ஆறகளூருக்கு அருகே உள்ள தியாகனூரில் தமிழகத்தின் மிகப்பெரிய புத்தர் சிலையும் அதைவிட சற்று உயரம் குறைந்த மற்றொரு புத்தர் சிலையும் உள்ளன.
11-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பொன்பரப்பின வாணகோவரையன் என்ற குறுநில மன்னர் மகதை மண்டலம் என்ற நாட்டை ஆறகளூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். இவர் சோழ மன்னர் மூன்றாம் குலோத்துங்கனின் கீழ் குறுநில மன்னவராகவும் குலோத்துங்க சோழனின் படைத்தளபதியாகவும் பணியாற்றியவர்.
இவரின் கல்வெட்டுக்கள் ஆறகளூர், கூகையூர், திருவண்ணாமலை, சிதம்பரம் மற்றும் பழைய தென்னாற்காடு மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ளது.
கடந்த வாரம் வரலாற்று ஆய்வாளர் ஆறகளூர் பொன்.வெங்கடேசன் ஆறகளூர் பகுதியில் வணிகக் குழு கல்வெட்டு ஒன்றைக் கண்டுபிடித்தார். இந்த வணிகக்கல் 2 அடி உயரத்திற்கு மட்டுமே வெளியில் தெரிந்தது. இந்தக் கல்வெட்டின் கீழ் எழுத்துக்கள் இருக்கலாம் என்று எண்ணியதால் ஊர்ப் பொதுமக்கள், ஆறகளூர் மகதை மண்டலம் நண்பர்கள் என்ற வே.சந்தோஷ், ஆர்.வேலு, ர.அரவிந்த் ஆகியோர் அடங்கிய குழு கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், மங்கை வீரராகவன் ஆகியோர் முன்னிலையில் கல்வெட்டைத் தோண்டி எடுத்தபோது அதில் 8 வரிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சமணக்கோயில் (ஜிநாலயம்) நாற்பத்தெண்ணாயிரவர் என்ற வணிகக் குழுவினரால் கல்வெட்டுள்ள இடத்தில் ஏற்படுத்தப்பட்டது. அக்கோயில் மன்னன் பெயரிலும் வணிகர் பெயரிலும் இணைந்து பொன்பரப்பின பெருமாள் ஜிநாலயமான என்று அந்த சமண பள்ளிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வணிகக் கல்வெட்டு உள்ள இடத்தின் அருகே வயலில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பானை ஓடுகள் காணப்படுகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலத்தின் சுடுமண் பொம்மையின் உடைந்த பகுதி கிடைத்துள்ளது. இப்போது விளைநிலமாக உள்ள இந்தப் பகுதி சங்க காலத்திலேயே மக்கள் வாழ்ந்த குடியிருப்பு என இதனால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் மேலும் ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு ஆது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 12-ஆம் நூற்றாண்டில் ஒரே காலகட்டத்தில் சைவம், வைணவம், பெளத்தம், சமணம் ஆகிய மதங்கள் ஆறகளூரில் சிறப்பாக இருந்ததை அறிய முடிகிறது என வரலாற்று ஆய்வாளர் பொன்.வெங்கடேசன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக