செவ்வாய், 7 ஜனவரி, 2014

aragalur-ஆறகழூர் செய்திகள்

ஆறகழூர் செய்திகள்...ஆறகழூரில் தொடர் கொள்ளை....................ராமசாமி ஆசிரியர் வீட்டில் 10 புவன் கொள்ளை
-----------------------------------------------------------------------------------
ஆறகழூர் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 10 பவுன் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் 2 வீடுகளிலும் கைவரிசை காட்டப்பட்டுள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:–

தலைமை ஆசிரியர்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஆறகளூர் ஆதித்திராவிடர் பகுதியில் வசித்து வருபவர் ராமசாமி(வயது 65). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி பேச்சியம்மாள். ராமசாமி புதுச்சேரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக சென்று விட்டார். அவரது மனைவி பேச்சியம்மாள் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை அவர்களது வீட்டில் கதவு திறந்த நிலையில் கிடந்தது. உடனே இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தலைவாசல் போலீஸ் நிலையத்துக்கு தெரிவித்தனர். மேலும் ராமசாமிக்கும் இது பற்றி தகவல் கொடுத்தனர். உடனே ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவவேளியப்பன், தலைவாசல் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தஸ்தகீர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

கொள்ளை

வெளியூர் சென்று இருந்த ராமசாமி வந்து வீட்டை பார்த்தார். அப்போது பீரோவின் இருந்த 10¼ பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்தது. இது குறித்து அவர் தலைவாசல் போலீசில் புகார் செய்தார்.

கொள்ளை சம்பவம் நடந்த வீட்டுக்கு கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது அங்கு மோப்பம் பிடித்து விட்டு அந்த வழியாக ஓடியது. ஆனால் அது யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.

இன்னொரு சம்பவம்

அந்த பகுதியில் ஓய்வு பெற்ற காவலாளி அம்பாயிரம் குடியிருந்து வருகிறார். அவரது மகன் வேலைக்காக வெளியூர் சென்று விட்டார். அவரது மனைவி ராஜேஸ்வரி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் தனது வீட்டில் அம்பாயிரம் தூங்கிக் கொண்டு இருந்த போது நள்ளிரவில் யாரோ மர்ம மனிதர்கள் அவரது வீட்டின் வெளியே தாழ்போட்டு விட்டு அருகில் உள்ள அவரது மகன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை திறந்து பார்த்துள்ளனர்.

அங்கு நகை– பணம் ஏதும் சிக்கவில்லை. பீரோவில் வைக்கப்பட்டு இருந்த துணிமணிகள் அந்த பகுதியில் சிதறி கிடந்தன.

மற்றொரு சம்பவம்

அந்த பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவர் ஆந்திர மாநிலத்துக்கு வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி சுலோச்சனா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். அந்த வீட்டில் யாரும் இல்லாததால் அங்கு என்னென்ன பொருட்கள் கொள்ளை போனது என்று தெரிய வில்லை.

இது குறித்து தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், சப்–இன்ஸ்பெக்டர் தஸ்தகீர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவங்கள் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக