புதன், 18 மார்ச், 2015

aragalur-ஆறகழூர் அருகே புளியங்குறிச்சி இந்திராநகர் பள்ளியில் பேய் பீதி

ஆறகழூர் அருகே பேய் நடமாடுவதாக பீதி ஏற்பட்டுள்ள இந்திரா நகர் அரசு பள்ளியில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர், வீரகனூர் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

பேய் நடமாடுவதாக பீதி
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே புளியங்குறிச்சி ஊராட்சியில் இந்திராநகர் உள்ளது. இந்த பகுதியில் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த 28 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக மருதமுத்து என்பவரும், ஒரு ஆசிரியரும் வேலை செய்து வருகிறார்கள்.


இந்த பள்ளியில் பேய் நடமாட்டம் உள்ளதாக கடந்த சில நாட்களாக பீதி ஏற்பட்டது. குறிப்பாக பள்ளி வகுப்பறைக்கு செல்லும் மாணவர்கள் திடீரென மயங்கி விழுந்ததால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் புத்தகப்பைகளில் எலுமிச்சைப்பழம், வேப்பிலை ஆகியவற்றை வைத்து அனுப்பினர். இந்த பேய் நடமாட்டம் பீதி குறித்து ‘தினத்தந்தி‘யில் நேற்று செய்தி வெளியானது.
அதிகாரிகள் குழுவினர் ஆய்வு
இதன் எதிரொலியாக, தலைவாசல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் மா.நெடுமாறன், வீரகனூர் வருவாய் ஆய்வாளர் ஜோதி, கிராம நிர்வாக அலுவலர் கைலாசம் ஆகியோர் நேற்று அந்த பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். குறிப்பாக பள்ளியில் மயங்கி விழுந்த மாணவர்களான சதீஸ், சந்தோஷ், சஞ்சய், ரம்யா, யுவராணி, தமிழ்செல்வன், அரவிந்த் அருண் ஆகியோரிடமும், பள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
இந்த விசாரணையின் போது, பள்ளியில் ஏற்கனவே மயங்கி விழுந்த மாணவ,மாணவிகளுக்கு தலைவாசல் அரசு மருத்துவமனையில் மீண்டும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும், உடல் நலம் சரியான பின்னர் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்கும்படியும் பெற்றோர்களிடம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் நெடுமாறன் அறிவுரை வழங்கினார். மேலும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் அவர் அறிவுரை வழங்கினார்.
இந்திரா நகரில் ஏற்பட்டுள்ள நில பிரச்சினை காரணமாக ஒரு சிலர் மந்திரவாதி மூலம் செய்வினை செய்து இதுபோன்ற கோளாறு ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்துள்ளதாக அதிகாரிகளிடம் பொதுமக்களில் சிலர் கூறினார்கள். இதுபோன்ற பிரச்சினை மறுபடியும் ஏற்படாமல் இருக்க மாணவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்று பொதுமக்களிடம் அதிகாரிகள் உறுதி அளித்து விட்டு அங்கிருந்து சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக