வியாழன், 20 ஆகஸ்ட், 2015

கல்படை,கல்வட்டம்,கல்குவை,கல்திட்டை,குத்துக்கள் முதுமக்கள் தாழி


கல்படை,கல்வட்டம்,கல்குவை,கல்திட்டை,குத்துக்கல் முதுமக்கள் தாழி

---------------------------------------------------------------------------------------------
பழங்காலத்தில் இருந்தே மனிதனுக்கு இறப்பின் மீது மிகுந்த பயம் இருந்தது...நாம் இறந்த பின் என்ன ஆவோம் என்ற கேள்வி அவன் முன் பெரிய கேள்விக்குறியாய் நின்றது....
இறந்த பின்னும் ஒரு வாழ்கை இருக்ககூடும் என்ற எண்ணம் சிலருக்கு ஏற்பட்டது..இறந்த உடல்களை பாதுகாப்பாய் வைக்க எண்ணினர்..
எகிப்தில் பிரமீடுகள் கட்டினர்
நம் தமிழ் முன்னோர்கள்..இறந்தோரின் உடலை
கல்படை,கல்வட்டம்,கல்குவை,கல்திட்டை,குத்துக்கள் முதுமக்கள் தாழி போன்றவை மூலம் பாதுகாத்து அந்த இடத்தை அடையாளப்படுத்த முயன்றனர்..அது பற்றிய ஒரு பார்வை...தகவல்கள் இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டவை...
சாட்சி – 1
இறந்தோரைப் புதைப்பது தமிழர் மரபு. அவ்வாறு தமிழரைப் புதைத்த இடங்கள் பல அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை ஈமக்குழிகள் என்பர். இவற்றைக் கற்பாறைகளைக் கொண்டு மூடிவைத்துப் பாதுகாக்கும் வழக்கம் இருந்துள்ளது. மூடப்படும் கல்லின் அளவு, மூடப்பட்ட விதம் ஆகியவற்றைக்கொண்டு இவற்றைக் கல்படை, கல்அறை, கல்குவை, கற்கிடை, கல்வட்டம், கல்திட்டை என்ற பெயர்களால் அழைக்கின்றனர். ஒரு வகையில் இறந்தோர் உடலைப் பதுக்கி, மறைத்து, புதைத்து வைப்பதால் இவற்றைப் பதுக்கைகள் என்று பொதுப்பெயரால் சுட்டினர். கல்லால் பதுக்கப்பட்டதால் கல்பதுக்கை, கற்பதுக்கை என்றனர்.
அப்பதுக்கைகளுக்குள் இறந்தோரின் உடல், அவருக்கு உணவுப்பொருட்கள் சிலவும் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் எனச் சிலவற்றையும் வைத்திருந்தனர். அகழ்வாய்வின் வழியாக அப்பதுக்கைகளுக்குள்ளிருந்து கண்டெடுக்கப்பட்ட பொருள்களை கார்பன் டேட்டிங் (C14) பரிசோதனை செய்ததில், அவற்றின் காலம் ஏறத்தாழ பொ.யு.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று அறியமுடிந்தது. இப்பதுக்கைகள் பற்றிய குறிப்புகள் புறநானூறு – 3, அகநானூறு – 109, கலித்தொகை – 12 ஆகிய சங்க இலக்கியச் செய்யுள் அடிகளில் காணப்படுகின்றன.
சாட்சி – 2
பதுக்கைகள் பெருகியபின்னர் அல்லது அவற்றில் புதர் மண்டுவதால் அவை இருந்த இடம் பற்றிய தெளிவுக்காக, அடையாளத்துக்காகப் புதிய பதுக்கைகளைத் தோற்றுவிக்கும் போது அவற்றின் அருகில் உயர்ந்த செங்குத்தான கல்லினை நிறுத்தினர். இதனை நெடுகல் என்றனர். ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டோ நெடுகல் நிறுத்தும் வழக்கம் இருந்துள்ளது. இத்தகைய நெடுகல் பற்றிய செய்திகளைப் புறநானூறு – 264, அகநானூறு – 269, 289 ஆகிய செய்யுள் அடிகள் தெரிவிக்கின்றன.
சாட்சி – 3
இறந்தோரைப் புதைத்த இடத்தில் அவரது உருவத்தையும் அவரின் சிறப்பையும் மக்களுக்கும் அடுத்த தலைமுறைக்கு அறிவிக்கவேண்டும் என்ற தொலைநோக்குச் சிந்தனையோடு அகன்ற கல்லில் அவரது உருவினைச் சிற்பமாகச் செதுக்கியும் அவரின் சிறப்பினைத் ‘தமிழி’ எழுத்தில் எழுதியும் வைத்துள்ளனர். அக்கல்லுக்கு நடுகல் என்று பெயர். இதற்கு நினைவுக்கல் என்ற பொதுப்பெயர் உண்டு. குத்துக்கல் என்றும் சுட்டுகின்றனர். இறந்தோர் வீரராக இருந்தால் இக்கல்லுக்கு வீரக்கல், வீரன்கல் என்றும் பெயரிட்டனர்.
நடுகல் பற்றிய குறிப்புகளைப் புறநானூறு – 221,223,232,335 அகநானூறு – 53,67,179, ஐங்குறுநூறு – 352, மலைபடுகடாம் – 386-389 ஆகிய செய்யுள் அடிகளில் காணமுடிகின்றது. நடுகல்லினைச் சிறுதெய்வமாகவும் வழிபட்டுள்ளனர்.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் அமைந்துள்ள புலிமான்கோம்பையில் கண்டெடுக்கப்பட்ட மூன்று நடுகற்கலிலும் உருவம் செதுக்கப்பட்டும் சிறப்பு எழுதப்பெற்றும் உள்ளன. தமிழி எழுத்தில் தூய தமிழ்ச்சொற்களில் எழுதப்பெற்றுள்ள அவ்வாசகங்களைப் படித்தறிந்த நடன. காசிநாதன் அவை பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டும் அதற்கு முன்னரும் என்று காலக்கணிப்பினைச் செய்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள தாதப்பட்டியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு நடுகல்லும் ஏறக்குறைய இதே காலக்கட்டத்தைச் சார்ந்ததே.
அப்படியானால் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டும் அதற்கு முன்னரும் பொதுவாகவே அனைவருக்கும் எழுத்தறிவு இருந்தது என்பது தெளிவாகின்றது.
சாட்சி – 4
இறந்தோரை ஒரு பெரிய பானையில் வைத்துப் புதைக்கும் வழக்கமும் இருந்துள்ளது. அந்தப் பெரிய பானைக்குத் தாழி என்று பெயர். அத்தாழிக்குள் இறந்தோரை அமர்ந்த நிலையிலோ அல்லது குத்தவைத்த நிலையிலோ வைத்துப் புதைத்துள்ளனர். அகழ்வாய்வில் பெரும்பான்மையாக இத்தாழிக்குள் இறந்தோரின் எலும்புகளும் அணி, மணிகள் சிலவும் தானியத் துகள்களும் கிடைத்துள்ளன.
மிக அண்மையில், மதுரை அருகே அயன்பாப்பாக்குடி பகுதியில் உள்ள சின்ன உடைப்பு என்ற இடத்தில் உள்ள கண்மாயின் மறுகால் வடிநிலப்பகுதி, அய்த்திரும்புக்கண்மாய் ஓடையின் வடிநிலப்பகுதி, கூடல்செங்குளம் மேட்டுப்பகுதி ஆகிய மூன்று நீர்நிலைகள் சூழ்ந்த பகுதியில் தொல்பழங்காலப் புதைமேடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இப்புதைமேட்டில் முதுமக்கள் தாழிகள் பல புதைக்கப்பட்டுள்ளன. இவை பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவை.
தாழியிலிட்டுப் புதைக்கும் வழக்கத்தைப் புறநானூறு – 228,236,256,364, பதிற்றுப்பத்து – 44, நற்றிணை – 271, அகநானூறு – 275 ஆகிய செய்யுள் அடிகளில் சுட்டியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக